இன்று, P. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்று முடிந்த தர்ஸ்டன் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான “37ஆவது சகோதரர்கள் சமர்“ 50 ஓவர்கள் கொண்ட மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி அணி, 164 ஓட்டங்களால் அபார வெற்றியினை சுவீகரித்துள்ளது.
முன்னதாக, நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட தர்ஸ்டன் கல்லூரி அணியின் தலைவர் கசுன் அபயரத்ன, துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதான நிலைமைகளை உணர்ந்து முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.
போட்டியில் நல்லதொரு ஆரம்பத்தினை வெளிக்காட்டிய தர்ஸ்டன் கல்லூரி, அவ்வணியின் தலைவர் கசுன் அபயரத்ன பெறுமதி மிக்க 40 ஓட்டங்களினை அணிக்காக சேர்த்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
[rev_slider dfcc728]
பின்னர், தர்ஸ்டன் கல்லூரி அணியின், இடது கை துடுப்பாட்ட வீரர் இமேஷ் விரங்க (80) மற்றும் யெஷான் விக்கிரமாரச்சி (78) ஆகியோர் மதிநுட்பமான முறையில் துடுப்பாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை ஓவர்களிற்கு ஏற்றாற் போல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியிருந்தனர்.
இதனையடுத்து, மைதானம் நுழைந்த அதிரடி சகல துறை ஆட்டக்காரர் சரண நாணயக்கார விரைவாக பெற்றுக்கொண்ட, 83 ஓட்டங்களினால் முடிவில் தர்ஸ்ட்டன் கல்லூரி அணி 50 ஓவர்களிற்கு 7 விக்கெட்டுகளை இழந்து 367 என்கிற இமாலய ஓட்ட எண்ணிக்கையினை குவித்துக்கொண்டது.
இந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை இரு பாடசாலை அணிகளுக்கு இடையிலும் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் பெறப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இசிபதன கல்லூரியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும், மோசமாக செயற்பட்டிருப்பினும் அவ்வணியில் சிறப்பாக செயற்பட்டிருந்த லஹிரு தில்ஷான் 66 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
பின்னர், 368 ஓட்டங்கள் என்கிற கடின வெற்றியிலக்கினை 50 ஓவர்களில் பெறுவதற்கு மைதானம் விரைந்த இசிபதன கல்லூரி அணி, எதிரணி பந்து வீச்சினால் திணறடிக்கப்பட்டு முடிவில், 50 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில் படுதோல்வியடைந்தது.
இசிபதன கல்லூரியின் துடுப்பாட்டத்தில் தனியொருவராக நின்று போராடிய இடது கை துடுப்பாட்ட வீரர் சஞ்சுல அபயவிக்ரம 72 ஓட்டங்களினை அதிகபட்சமாக அவரது அணிக்காக பெற்றிருந்தார்.
பந்து வீச்சில், சவான் பிரபாஷ் வெறும் 26 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளினை சாய்த்ததோடு, மறுமுனையில் வலது கை சுழல் பந்துவீச்சாளர் சரண நாணயக்கார 2 விக்கெட்டுகளை சாய்த்து தனது சிறப்பான சகல துறை ஆட்டத்தினை இன்று வெளிப்படுத்தியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
தர்ஸ்டன் கல்லூரி – 367/7 (50) – சரண நாணயக்கார 83, இமேஷ் விரங்க 80, யெஷான் விக்கிரமாரச்சி 78, கசுன் அபயரத்ன 40, நவோத் சமரகோன் 23, லஹிரு தில்ஷான் 4/66, மதுசிக்க சந்தருவன் 2/48
இசிபதன கல்லூரி – 203/9 (50) – சஞ்சுல அபயவிக்ரம 72, பத்தும் நிசங்க 35, நிரஞ்சன் வன்னியராச்சி 28*, சவான் பிரபாஷ் 3/26, சரண நாணயக்கார 2/44
போட்டி முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 164 ஓட்டங்களால் வெற்றி