சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலின் அபார சதத்துடன் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
மொறட்டுவ, டி சொய்சா கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணித் தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்படுமாறு பணித்தார்.
அந்த வகையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தமிம் இக்பாலுடன் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌம்யா சர்க்கார் 22 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிக் கொண்டிருந்த தமிம் இக்பால் அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மொமினுள் ஹக்குடன் இணைந்து 143 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட அதேநேரம் பங்களாதேஷ் அணியை வலுப்படுத்தினார்.
வலிமைமிக்க இணைப்பாட்டமாக உருவெடுத்துக்கொண்டிருந்த அந்த இணைப்பாட்டதை ரொமேஷ் புத்திக்க 42ஆவது ஓவரில் வீசிய பந்தில் மொமினுள் ஹக் தாக்கப்பட்டதால் எதிர்பாராதவிதமாக 73 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், களத்தை விட்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அதுவரை துடுப்பாடிய அவர் 103 பந்துகளுக்கு முகம் கொடுத்து 10 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.
அதேநேரம் தமிம் இக்பால் அவரது சிறப்பாட்டத்தால் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 182 பந்துகளை எதிர்கொண்டு 136 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் மற்றைய வீரர்களுக்கு இடம்மளிக்கும் வகையில் ஒய்வு பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து களமிறங்கியிருந்த அணித் தலைவர் மற்றும் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் 21 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சாமிக்க கருணாரத்னவின் அதிரடி பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மேலும் இன்றைய தினம் சிறப்பாக பந்து வீசிய சாமிக்க கருணாரத்ன, மஹ்மதுல்லா மற்றும் மெஹதி ஹசன் ஆகியோரை முறையை 43,1 ஓட்டங்களுக்கு வீழ்த்திய அதே நேரம் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள இளம் வீரர் லிட்டன் தாஸ் 57 ஓட்டங்களுடனும் தைஜுள் இஸ்லாம் 1 ஓட்டத்துடனும் களத்திலிருந்தனர்.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் அணி: 391/7 (90) – தமிம் இக்பால் 136(182), மொமினுள் ஹக் 73(103), லிட்டன் தாஸ் 57*(64) , மஹ்மதுல்லா 43(73), சகிப் அல் ஹசன் 30(46), முஷ்பிகுர் ரஹிம் 21(37) , சாமிக்க கருணாரத்ன 3/61