இன்று நடைபெற்று முடிந்த சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான, 5 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், டக்வத் லூயிஸ் முறையில் 47 ஓட்டங்களால் இலங்கை A அணி வெற்றியினை சுவீகரித்துள்ளது.
இந்த ஒரு நாள் தொடர் இலங்கை தேசிய வீரர்கள் பலரின் பங்குபற்றுதலுடன் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், மோசமான காலநிலையினால் சற்று தாமதமாக தொடங்கியது. நாணய சுழற்சியினை தன்வசமாக்கி கொண்ட, இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, இலங்கை A அணிக்கு வழங்கினார்.
குசல் பெரேரா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோருடன் மைதானம் நுழைந்த இலங்கை A அணி, முதல் விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்து, சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொண்டது.
முதலாவது விக்கெட்டாக, பறிபோன குசல் பெரேரா அரைச்சதம் விளாசியதோடு, மொத்தமாக 74 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு, தொடர்ச்சியான தனது மோசமான துடுப்பாட்டத்தில் இருந்து விடியலை அடைந்தார். மறுமுனையில் காயத்தில் இருந்து மீண்ட, தனுஷ்க குணத்திலக்கவும் தனது பங்களிப்பிற்கு 64 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
பின்னர், இவர்கள் இருவரினதும் விக்கெட்டுகளை தொடர்ந்து இலங்கை A அணி ஓட்டங்கள் சேர்ப்பதில் சற்று பின்னடைவை சந்தித்தது. எனினும், மத்திய வரிசையில் வந்த அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தன மற்றும் திசர பெரேரா ஆகியோரின், அதிரடி ஆட்டத்துடன் 48.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை A அணி 278 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், போட்டியில் மழை குறுக்கிட்டு அது நீடித்த காரணத்தினால் அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக, நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டியிருந்த மிலிந்த சிறிவர்த்தன, 41 பந்துகளிற்கு 48 ஓட்டங்களைப் பெற்றார். அதேபோன்று, ஆட்டமிழக்காமல் நின்றிருந்த திசர பெரேரா வெறும் 35 பந்துகளிற்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை தனது இரும்பு கரங்கள் மூலம் விளாசி 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில், இங்கிலாந்து லயன்ஸ் அணியில் டொபி ரோலன்ட்-ஜோன்ஸ், கிரைக் ஓவர்டொன் மற்றும் டொம் ஹெல்ம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், 43 ஓவர்களுக்கு 278 ஓட்டங்கள் என மாற்றப்பட்ட வெற்றி இலக்கினை அடைவதற்கு மைதானம் விரைந்த, இங்கிலாந்து லயன்ஸ் அணியில், அணித்தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து, 64 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை அடைய முயன்றார். அவரை அடுத்து வந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காது ஆட்டமிழந்தனர்.
எனினும், பின்வரிசையில் வந்த கிரைக் ஓவர்டொன் அதிரடியாக ஆடி போட்டியின், ஆதிக்கத்தை சிறிய அளவில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பக்கம் மாற்றினார். எனினும் பின்னர், போட்டி இலங்கை A அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இவ்வாறனதொரு நிலையில், அவ்வணி 43 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையினால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் நடுவர்கள் டக்வத் லூயிஸ் முறையில் இலங்கை A அணி வெற்றி பெற்றதாக தெரிவித்தனர்.
இதில் கிரைக் ஓவர்டொன் ஆட்டமிழக்காது 45 பந்துகளில் 60 ஒட்டங்களினை ஆட்டமிழக்காமல் பெற்று இருந்தார்.
இலங்கை A அணியின் பந்து வீச்சில், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு மதுசங்க 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததோடு, தமது சுழல்கள் மூலம் ஷெஹான் ஜயசூரிய மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தனர்.
இத்தொடரின் வெற்றி மூலம், இலங்கை A அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1- 0 என முன்னிலை வகிக்கின்றது.
இத்தொடரில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் அடுத்த போட்டி மார்ச் மாதம் 4ஆம் திகதி, இதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி: 278/7 (48.1) – குசல் பெரேரா 59(74), தனுஷ்க குணத்திலக்க 64(79), திசர பெரேரா 56*(35), மிலிந்த சிறிவர்த்தன 48(41), கிரைக் ஓவர்டொன் 46/2(9), டொபி ரோலன்ட்-ஜோன்ஸ் 59/2(10), டொம் ஹெல்ம் 50/2(8.1)
இங்கிலாந்து லயன்ஸ் அணி: 230/9 (43) – கீட்டன் ஜென்னிங்ஸ் 64(70), கிரைக் ஓவர்டொன் 60*(45), லியாம் லிவிங்ஸ்டன் 39(45), லஹிரு மதுசங்க 50/3(9), ஷெஹான் ஜயசூரிய 34/2(8), அமில அபொன்சோ 37/2(7)
போட்டி முடிவு – இலங்கை A அணி 47 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)