பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடித்துள்ள நிலையில், மார்ச் மாதம் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 111ஆவது “வடக்கின் பெரும் சமர்” இடம்பெறவுள்ளது.
வடக்கு மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள குறித்த கல்லூரிகளின் பழைய மாணவர்கள் மாத்திரமன்றி, சர்வதேச அளவில் உள்ள யாழ் மக்களும் இந்த வடக்கின் பெரும் சமருக்காக ஆவலோடு உள்ளனர். இந்நிலையில், சென் ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் வீரரான அக்சயன் ஆத்மநாதனுடன் கிரிக்கெட் தொடர்பிலான ஓர் நேர்காணலை ThePapare.com நடாத்தியது.
தற்பொழுது ஐக்கிய ராட்சியத்தின் லண்டன் நகரில் பொறியியற்துறையில் பணிபுரிந்து வரும் அக்சயன், 1988ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8ஆம் திகதி கள்வியங்காட்டினில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்விக்காக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இணைந்திருந்த போதும், 1995ஆம் ஆண்டில் அங்கிருந்து விலகி, சென் ஜோன்ஸ் கல்லூரியில் இணைந்தார்.
அக்கல்லூரியில் தரம் எட்டில் கற்றுக்கொண்டிருந்த வேளையில், கல்லூரியின் 12 வயதுக்குட்பட்ட அணியில் தேவதாசன் ஆசிரியரின் பயிற்றுவிப்பின் கீழ் கிரிக்கெட்டில் இணைந்ததனூடாக அவர் தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர் தான் வெளிக்காட்டிய தொடர் திறமையின் காரணமாக 16 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராகவும் அக்சயன் செயற்பட்டிருந்தார்.
கிரிக்கெட்டில் மாத்திரம் சிறப்பிக்காத இவர், கல்லூரியின் மெய்வல்லுனர் அணியில் ஒரு நெடுந்தூர ஓட்ட வீரராக அங்கம் வகித்திருந்தார். அதேவேளை, சென் ஜோன்ஸ் கல்லூரியின் தமிழ் மன்றம், ஆங்கில மன்றம் ஆகியவற்றின் பொருளாளராகவும், இந்து மன்றத்தின் பத்திராதிபராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
[rev_slider dfcc728]
இவற்றைத் தவிர, கல்லூரியின் உயர் பதவிகளான சிரேஷ்ட மாணவத் தலைவன் மற்றும் உயர்தர மணவர் மன்றத் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்த அக்சயன், தனது பாடசாலை வாழ்க்கையை சிறந்த முறையில் அலங்கரித்திருந்தார்.
எனவே, வடக்கின் பெரும் சமர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அக்சயனை thepapare.com தொடர்பு கொண்டபோது, அவர் தனது கல்லூரி கிரிக்கெட் வாழ்வை மீட்டினார்.
”வலது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் வலது கைத் துடுப்பாட்ட வீரருமாகிய நான், கல்லூரியில் இருந்து விலகும்வரை, அதாவது எனது 18ஆவது வயது வரை கிரிக்கெட் விளையாடியிருந்தேன். கல்லூரியின் 12, 14, 16 வயதுகளின் கீழ்ப்பட்ட அணிகளிலும் நான் விளையாடியிருந்தேன்.
இருந்தபோதும் கல்லூரியின் முதல் பதினொருவர் (First Xi) அணியில் 2005, 2006, 2007 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் முகுந்தன் ஆசிரியர் அவர்களது பயிற்றுவிப்பின் கிழ் இடம்பிடித்திருந்தேன். எனினும், சிரேஷ்ட வீரர்களது ஆதிக்கம் காரணமாக 2005, 2006 ஆம் அண்டுகளில் விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை.
பின்னர் 2007ஆம் ஆண்டிலேயே வடக்கின் பெரும் சமரில் முதல் முறையாக களங்காண வாய்ப்புக் கிடைத்தது. அப்போதைய காலகட்டம் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலகட்டம் என்பதனால் போட்டிகள் அவ்வளவு சிறப்பாக இடம்பெறவில்லை. அப்போட்டியில் நான் பெரிதாகச் சோபித்திருக்கவில்லை.
இருந்த போதும் எனது வாழ்வில் நான் என்றும் பெருமை கொள்ளும், மறக்க முடியாத தருணம் அது. ஏனென்றால் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கிரிக்கெட் போரில் பங்கெடுத்த வீரர்களுள் நானும் ஒருவன் என்ற உணர்வு என்னை என்றும் உயரத்தில் வைக்கின்றது. வடக்கின் பெரும் போர் என்றும் பல நூறாண்டு தொடர வேண்டும்” என்றார்.
இவ்வருடம் இடம்பெறவுள்ள 111ஆவது வடக்கின் பெரும் சமரில் களங்காணவிருக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வணி ஜெனி பிளமிங், கபில்ராஜ், யதுசன் என குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நாமங்களைக் கொண்டிருக்கின்றது. அதேவளை, கடந்த வாரம் நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது இவர்களுடன் இரு நட்புறவுப் போட்டிகளில் ஆடியிருந்தோம்.
அதில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு சகல வாய்ப்புகளும் இருந்தபோதும் இறுதி நேரத்தில் நாம் வெற்றி பெற்றிருந்தோம். அப்போட்டியின்போது தான் அவர்களது பலத்தை உணர்ந்தோம். நிச்சயமாக வடக்கின் பெரும் போரிலும் தமது பலத்தை இம்முறை அவர்கள் நிரூபிப்பார்கள்” என்றார்.
யாழ். பாடசாலைகளின் தற்போதைய கிரிக்கெட்டின் நிலை தொடர்பிலான அவரது பார்வை குறித்து வினவுகையில் “நாங்கள் விளையாடிய காலத்தில் ஒரு பருவகாலத்தில் வேறுமனே 9 தொடக்கம் 10 வரையான போட்டிகளே இருக்கும். ஆனால், இன்றைய நாட்களில் அவ்வாறில்லை. வீரர்களுக்கு தேசிய ரீதியிலான சுற்றுப் போட்டி, மாகாண அணிகளுக்கிடையேயான சுற்றுப்போட்டி, மாவட்ட ரீதியிலான சுற்றுப் போட்டி, முரளிக் கிண்ணப் போட்டி மற்றும் நட்புறவு ரீதியிலான போட்டிகள் என பல போட்டிகள் நடைபெறுகின்றன. இவை வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைகின்றன” என்றார்.
தற்போது பாடசாலை அணிகளில் விளையாடி வரும் வீரர்களை நோக்கி அவர் கருத்திடுகையில், “உங்களுக்கு தற்போது ஒவ்வொரு அணிக்குமென பிரத்யேக பயிற்றுவிப்பாளர்கள், தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள் என உள்ளனர். வருடம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அத்தோடு விசேட பயிற்சி முகாம்களும் நடைபெறுகின்றன. இவ்வாய்ப்புக்களை நீங்கள் உச்சமாகப் பயன்படுத்த வேண்டும். விரர்கள் முழு மனதோடு விளையாட்டில் பங்கெடுத்தால் மட்டும் போதும்” என்றார்.
வீரர்களது எதிர்காலத்தை திட்டமிடுவது குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த அவர், கிரிக்கெட் விளையாடுதல் என்பதை மட்டும் தகைமையாகக் கொண்டால் தங்களது எதிர்காலம் சிறப்புறாது. கிரிக்கெட் விளையாடுவது என்பது, சீரான திட்டமிடலையுடைய ஒரு வீரரது கல்விக்கு ஒருபோதும் பாதகமாக அமையாது. ஆகவே கிரிக்கெட்டால் தங்கள் கல்விக்கு ஏற்படும் பாதிப்பை சிறந்த திட்டமிடல் மூலம் தவிர்த்து, அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்களானால் அவரது எதிர்காலம் அவர்களது கைகளில் உள்ளது என்றார்.
மேலும், ஓர் அணியினது குழுவாய் இணைந்த செயற்பாடே அவ்வணியின் வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
தனது கல்லூரி வாழ்வில் மறக்க முடியாத தருணமாக, “மறைந்த அதிபர் தனபாலன் அவர்களது பூதவுடற்பேளையை கல்லூரி முழுவதும் தாங்கிச் சென்றது” என்பதையும் அக்சயன் சோகத்தோடு பதிவு செய்திருந்தார்.
இறுதியாக “ஓர் அணியெனும் உணர்வோடு விளையாடி வெற்றியை சென் ஜோன்ஸின் பக்கம் ஈர்த்துக் கொள்ளுங்கள்” என சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர்களை வாழ்த்தி விடை பெற்றார்.
தனது பெறுமதிமிக்க நேரத்தை Thepapare.comஇற்காக ஒதுக்கியமைக்காக அக்சயன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, அவரது எதிர்காலம் மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் ThePapare.com சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.