வருடாந்த ஹொக்கி மோதலில் புனித தோமியர் கல்லூரி ஆதிக்கம்

420
SPC VS STC HOCKEY ENCOUNTER

புனித பேதுரு கல்லூரி பம்பலபிடிய, மற்றும் புனித தோமியர் கல்லூரி  ஆகிய இரண்டு பாடசாலைகளையும் சேர்ந்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பேதுரு மற்றும் தோமியர் கல்லூரி கல்லூரிகளுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறக்கூடிய வருடாந்த போட்டி ஒன்றினை பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்தனர்.  

இரண்டு பாடசாலைகளும் இதற்கு முன்னதாக பல தசாப்த காலமாக ஹொக்கி போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அதேநேரம் தேசிய வீரர்களையும் உருவாக்கி உள்ளது. அந்த வகையில், முதல் முறையாக, குறித்த கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தால், இப்பாடசாலைகளுக்கிடையே புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

13, 15, 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் பழைய மாணவர்களின் அணி உள்ளடங்கலாக நான்கு ஹொக்கி அணிகள் இவ்விரு பாடசாலைகளிருந்தும் பங்குபற்றினர். அத்துடன் 300 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்ககளின் மத்தியில் இப்போட்டிகள் அனைத்தும் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு கள நடுவர்களாக எச். எம். சி. எச். பண்டார, எம். ஜே. எம். நௌஷாத், டபுள்யு. எம். சி. திசாநாயக்க, என்.டபுள்யு.ஜி.ஆர். ஹேமந்த மற்றும் டி. பண்டிதரத்ன ஆகியோர் செயற்பட்டனர்.

19 வயதுக்கு உட்பட்ட போட்டி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 19 வயதுக்கு கீழ் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் புனித தோமியர் கல்லூரி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியின் 10ஆவது நிமிடத்தில் புனித பேதுரு கல்லூரியின் கவனக்குறைவால் கிடைக்கபெற்ற பெனால்டி கோனர் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட யூ.எ.பி எல்லேபொல முதல் கோலை அடித்து புனித தோமியர் கல்லூரியை முன்னிலைப்படுத்தினார்.

அந்த கோலுடன் புத்துணர்வு பெற்ற புனித தோமியர் கல்லூரி குறித்த போட்டியில் தொடர்ந்தும் ஆதிக்கம் செல்லுத்தியது. எனினும் கிடைக்கபெற்ற இரண்டாவது பெனால்டி கோனார் தோமியர் கல்லூரியினால் தவறவிடப்பட்டது. அதேநேரம் புனித பேதுரு கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் புனித தோமியர் கல்லூரியினால் முறியடிக்கப்பட்ட அதேநேரம் முன்கள வீரர்களுக்கு சிறப்பான முறையில் பந்து நகர்த்தி கொடுக்கப்பட்டது.

முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் முடிவுற்ற நிலையில் இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்தில் மீண்டும் கிடைக்கபெற்ற பெனால்டி கோனார் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட புனித தோமியர் கல்லூரி எஸ். வணிகசூரியவின் மூலம் இரண்டாவது கோலை பதிவு செய்தது. அதன் பின்னர் புனித தோமியர் கல்லூரிக்கு கிடைக்கபெற்ற மூன்று பெனால்டி கோணர்களும் தவறவிடப்பட்டன.

அதே நேரம் இரண்டு கோல்களால் புனித தோமியர் கல்லூரி முன்னிலை பெற்ற நிலையில், புனித பேதுரு கல்லூரியின் போட்டி திட்டம் மாற்றமடைந்திருந்தது. கோல் அடிக்கும் நோக்குடன் நகர்த்தல்கள் இல்லாமல் வீரர்கள் தனித்து விளையாடி முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவையனைத்தும் தோமியர் கல்லூரியினால் முறியடிக்கப்பட்டன.

அத்துடன், அவர்களுகிடையே காணப்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்திக்கொண்ட தோமியர் கல்லூரி முன்கள வீரர்களான வை. குணதாச மற்றும் யூ.எ.பி எல்லேபொல போட்டியின் 43ஆவது நிமிடம் மற்றும் 60ஆவது நிமிடம் கோல்களை பெற்றுக்கொண்டனர். இறுதி வரை போராடிய புனித பேதுரு கல்லூரியினால் கோல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் இறுதியில் புனித தோமியர் கல்லூரி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. போட்டியின் சிறந்த வீரராக புனித தோமியர் கல்லூரியின் யூவின் குணவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் தோல்வி குறித்து புனித பேதுரு கல்லூரி பயிற்சியாளர் இந்திக பிரசன்னவிடம் வினவிய பொழுது, ”எங்களால் இந்த மைதானத்தில் போட்டிக்கு முன்னதாக போதுமான பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும், அத்துடன் எங்களுக்கு எந்தவிதமான பயிற்சி போட்டியிலும் பங்குகொள்ள முடியாமல் போனமையே காரணம் என்று தெரிவித்த அவர் எதிர்வரும் காலங்களில்  கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்” தெரிவித்தார்.

கோல் போட்டவர்கள்

புனித தோமியர் கல்லூரி

யூ.எ.பி எல்லேபொல – ஒரு கோல் (10ஆவது நிமிடம்)

எஸ். வணிகசூரிய – ஒரு கோல் (32ஆவது நிமிடம்)

வை. குணதாச – ஒரு கோல் (43ஆ வது நிமிடம்)

யூ.எ.பி எல்லேபொல – ஒரு கோல் (60ஆவது நிமிடம்)

போட்டியின் சிறந்த வீரர் : யூவின் குணவர்தன

13 வயதுக்கு உட்டபட்ட போட்டி

13 வயதுக்கு கீழ் பிரிவில் நடைபெற்ற இவ்விரு கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் புனித தோமியர் கல்லூரி 6-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றியீட்டியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனித தோமியர் கல்லூரி முதல் பாதி நேரத்தில் நான்கு கோல்களையும் இரண்டாவது பாதி நேரத்தில் இரண்டு கோல்களையும் பெற்றுக்கொண்டது.

கோல் போட்டவர்கள்

புனித தோமியர் கல்லூரி

ஜி.எஸ். லக்க்ஷான் – ஒரு கோல் (5ஆவது நிமிடம்)

கே.டி.கே. பெரேரா – இரண்டு கோல்கள் (9ஆவது, 23ஆவது நிமிடம்)

ஜே.ஜே. டேவிட் – மூன்று கோல்கள் (25ஆவது,33ஆவது, 37ஆவது நிமிடம்)

16 வயதுக்கு உட்பட்ட போட்டி

இரு அணிகளும் சமபலத்துடன் மோதிக்கொண்டதால் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றது.

கோல் போட்டவர்கள்

புனித தோமியர் கல்லூரி

சி. விஷ்வரன் – ஒரு கோல் (5வது நிமிடம்)

புனித பேதுரு கல்லூரி

ஆலோக்க புஞ்சிபண்டார – ஒரு கோல் (18ஆவது நிமிடம்,)

புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லுரி பழைய மாணவர்களுக்கிடையிலான போட்டி

இவ்விரு கல்லுரிகளுக்கிடையிலான பழைய மாணவர்கள் அணிகளுக்கிடையிலான போட்டியில் புனித பேதுரு கல்லூரி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மூத்த மற்றும் அனுபவ ஹொக்கி வீரர் மரியோ ஜோசப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் கிடைக்கபெற்ற பெனால்ட்டி கோனரை கோலாக மாற்றி புனித பேதுரு கல்லூரியை முன்னிலைப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, கோலடிக்கும் சில வாய்ப்புகளை புனித தோமியர் கல்லூரி பெற்றுக்கொண்ட போதிலும் அவையனைத்தும் பேதுரு கல்லூரியின் வலுவான பின்கள தடுப்பு வீரர்களால் முறியடிக்கப்பட்டன. அதேநேரம் போட்டியின் 22ஆவது மற்றும் 40ஆவது நிமிடங்களில் கிடைக்கபெற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட கொட்வின் சாலமன் அவற்றினை கோலாக மாற்றி புனித பேதுரு கல்லூரியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதேநேரம் குறித்த நான்கு பிரிவுகளில் புனித பேதுரு கல்லூரி பெற்றுக்கொண்ட ஒரேஒரு வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கோல் போட்டவர்கள்

புனித பேதுரு கல்லூரி

மரியோ ஜோசப் – ஒரு கோல் (15ஆவது நிமிடம்)

கொட்வின் சலோமன் – இரண்டு கோல் (22ஆவது,40ஆவது நிமிடம்)

போட்டியின் சிறந்த வீரர் : புமுதித்த டெனிஸ்