நடைபெற்று வரும், இலங்கை A அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின், இன்றைய இரண்டாம் நாளில், இலங்கை A அணி துடுப்பாட்ட வீரர்களின் அதி வலுவான இணைப்பாட்டத்தின் காரணமாக, இலங்கை A அணி நேற்றைய மோசமான ஆட்டத்திற்கு வலுவான பதிலடி ஒன்றினை இப்போட்டியில் வழங்கியுள்ளது.
மலிந்த புஷ்பகுமார 7 விக்கெட்டுகள்: முதல் நாள் இங்கிலாந்து லயன்ஸ் வசம்
நேற்று தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், லியாம் லிவிங்ஸ்டனின் சதத்துடன் (105), தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்த விருந்தினர் இங்கிலாந்து லயன்ஸ் அணி போட்டியின் இரண்டாம் நாளினை இன்று தொடர்ந்தது.
அவ்வணியின் இறுதி விக்கெட், நேற்று சிறப்பாக செயற்பட்டிருந்த மலிந்த புஷ்பகுமாரவினால் வீழ்த்தப்பட இங்கிலாந்து லயன்ஸ் அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 97.5 ஓவர்களில் 353 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பாக லியாம் லிவிங்ஸ்டன் 105 ஓட்டங்களும் டொம் வெஸ்லி 68 ஓட்டங்களும் குவித்தனர்.
இலங்கை A அணி சார்பாக சுழல் பந்துவீச்சாளர் மலிந்த புஷ்பகுமார இன்றைய நாளில் கைப்பற்றிய விக்கெட்டுடன் சேர்த்து மொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்கு, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை A அணி தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உதார ஜயசுந்தரவினை ஓட்டம் எதுவும் இன்றி பறிகொடுத்தது. இன்னும், சொற்ப ஓட்ட இடைவெளிகளில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை A அணி, ஒரு கட்டத்தில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையினை நோக்கி நகர்ந்திருந்தது.
இந்நிலையில், களத்தில் நின்ற புனித ஜோசப் கல்லூரி வீரர் சதீர சமரவிக்ரம மற்றும் இலங்கை தேசிய அணி வீரர் திமுத் கருணாரத்ன ஆகியோர், அணியின் தற்போதைய நிலையினை சுதாகரித்துக்கொண்டு நிதானமாக துடுப்பாடத் தொடங்கினர்.
தொடர்ச்சியான நிதான துடுப்பாட்டத்தின் மூலம், இங்கிலாந்து லயன்ஸ் அணிப் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் உத்திகளை நுட்பமான முறையில் பிடித்துக்கொண்ட இருவரும் சதம் கடந்ததோடு போட்டியின் இன்றைய ஆட்ட நாள் நிறைவு வரை சிறப்பாக செயற்பட்டு நான்காவது விக்கெட்டுக்காக 303 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர, முடிவில் இலங்கை A அணி இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சுக்காக 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 333 ஓட்டங்களைப் பெற்று எதிரணியினை விட 20 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியுள்ளது.
இதில் தனது ஆறாவது முதல் தர சதத்தினைப் பெற்றுக்கொண்ட சதீர சமரவிக்ரம, 25 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 177 ஓட்டங்களினைப் பெற்று களத்தில் உள்ளதோடு தனக்கு இலங்கை பிரிமியர் லீக் மூலம் இலங்கை A அணி குழாமில் கிடைத்த வாய்ப்பினை சரிவர உபயோகித்துக் கொண்டார். மறுமுனையில் திமுத் கருணாரத்ன தனது 29 ஆவது முதல் தர சதத்தினைப் பெற்றுக்கொண்டதோடு, 15 பவுண்டரிகளை விளாசி 140 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சில், இன்று பறிபோன விக்கெட்டுக்களில் மூன்றினையும் ஆளுக்கொரு விக்கெட் வீதம் டொம் குர்ரன், டொபி ரொலன்ட்-ஜோன்ஸ் மற்றும் ஒல்லி ரெய்னர் ஆகியோர் கைப்பற்றிக்கொண்டனர்.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து லயனஸ் அணி – 353 (97.5) – லியாம் லிவிங்ஸ்டன் 105, டொம் வெஸ்லி 68, கீட்டன் ஜென்னிங்ஸ் 44, பென் போக்ஸ் 30, ஜெக் லீச் 22*, மலிந்த புஷ்பகுமார 127/8, தனன்ஞய டி சில்வா 44/1
இலங்கை A அணி – 333/3 (79) – சதீர சமரவிக்ரம 177*, திமுத் கருணாரத்ன 140*, டொம் குர்ரன் 31/1
போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்.