நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை விதித்தது ICC

5630
Niroshan Dickwella

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடை விதித்துள்ளதோடு, அவர் இறுதியாக விளையாடிய போட்டியின் கட்டணத்தில் 30% ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு விடுத்துள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை A அணி

நிரோஷன் திக்வெல்ல, தனது இறுதிப் போட்டியில் ICC இன் வீரர்களின் நன்னடத்தை மற்றும் ஒழுக்கம் சம்பந்தமான விதிமுறை ஒன்றினை மீறி செயற்பட்டதற்காக, நன்னடத்தை விதி மீறல் தொடர்பான இரண்டு புள்ளிகளைப் பெற்றிருந்தார். இப்புள்ளிகளின் மூலம் நிரோஷன், நன்னடத்தை விதி மீறலுக்காக கடந்த 24 மாதங்களில் 5 புள்ளிகளை எட்டியிருப்பதனாலேயே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அறியவருவதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) கீலோங் நகரில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இலங்கையின் இரண்டாவது T-20 போட்டியின் போது, தனக்கு வழங்கப்பட்ட சரியான ஆட்டமிழப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்து, மைதான மேற்பரப்பின் மீது உதைத்து போட்டியினை தாமதப்படுத்தியதற்காக திக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன்மூலம், ICC இன் விதிமுறைகளில் சரம் 2.1.5 இல் உள்ள, விளையாட்டு வீரர் மற்றும் விளையாட்டு வீரரின் உதவி செயற்பாட்டாளர் தொடர்பாகவிருக்கும் சட்டத்தில் காணப்படும் “நடுவரின் முடிவுக்கு மாற்றமான அபிப்பிராயத்தினை சர்வதேச போட்டியொன்றில் வெளிக்காட்டல்“ என்னும் குற்றத்திற்கு அமைவாக நடந்து கொண்டமைக்காக திக்வெல்ல இந்த போட்டித் தடையை எதிர்கொள்கின்றார்.

முன்னதாக, திக்வெல்ல தென்னாபிரிக்க அணியுடனான நான்காவது ஒரு நாள் போட்டியில் ஐ.சி.சி. இன் வேறொரு விதிமுறையை மீறி செயற்பட்டிருந்தார். அதன்மூலம், வீரர் நன்னடத்தைக்காக வழங்கும் 3 புள்ளிகளை இழந்ததுடன், போட்டிக் கட்டணத்தில் 50% சதவீதத்தை அபராதமாக செலுத்துவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அதன் மூலம் பெறப்பட்ட புள்ளிகளும், கடந்த போட்டியின் மூலம் பெறப்பட்ட நன்னடத்தை விதிமீறல் புள்ளிகளுமே திக்வெல்லவுக்கு தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள போட்டித் தடைக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

திக்வெல்ல இரு போட்டிகள் மூலமும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் ஐ.சி.சி சட்டதிட்டம் 7.6 இற்கு அமைவாக, வீரர் ஒருவருக்கு போட்டித் தடை விதிக்க  குறைந்த புள்ளிகளின் நிலையினை தாண்டி, 2 போட்டித் தடை புள்ளிகளாக மாறியுள்ளது. 2 போட்டித் தடை புள்ளிகளை வீரர் ஒருவர் பெறுவாராயின் அவர் அதற்கு அடுத்து முதலில் வரும் ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒரு நாள் போட்டிகளிலோ அல்லது இரண்டு T-20 போட்டிகளிலோ விளையாட தடை விதிக்கப்படுவார்.

இதனடிப்படையில், திக்வெல்லவிற்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த போட்டித்தடை மூலம், இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடன் விளையாடவுள்ள மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டி மற்றும் அதனையடுத்து, மார்ச் மாதத்தில் பங்களாதேஷுடன் விளையாடவுள்ள முதலாவது ஒரு நாள் போட்டியிலும் அவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திக்வெல்ல, தனது நன்னடத்தை விதி மீறலுக்காக தற்போது பெற்றிருக்கும் 5 புள்ளிகள் அப்படியே நீடிப்பதோடு, எதிர்வரும் 24 மாதங்களுக்குள் அப்புள்ளிகள் 8 அல்லது அதனை தாண்டும் பட்சத்தில், அது 4 போட்டித் தடை புள்ளிகளாக மாறும்.

4 போட்டித் தடை புள்ளிகள் என்பது வீரர் ஒருவருக்கு முதலில் வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அல்லது நான்கு ஒரு நாள் அல்லது T-20 போட்டிகளில் தடை விதிப்பதற்கு சமனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.