சமரி அத்தபத்துவின் சிறப்பாட்டத்துடன் மகளிர் உலக கிண்ணத் தகுதியை பெற்றுக்கொண்ட இலங்கை

2323
SL Women - SL vs BAn women

இன்று மகளிர் உலக கிண்ணத் தகுதிகான் போட்டிகளின் சூப்பர் 6 போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், தமது இறுதி சூப்பர் 6 போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியினை டக்வெத் லூயிஸ் முறையில் 42 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வீழ்த்தியுள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள மகளிர் உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை இத்தொடரில், சூப்பர் 6 கட்டத்தில்( வெற்றி, தோல்வி) புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களிற்குள் வந்த இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கை மகளிர் அணியும் இலகுவாக பெற்றுக்கொண்டுள்ளது.

NCC மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில் நாணய சுழற்சி வெற்றியினை தனதாக்கி கொண்ட பங்களாதேஷ் மகளிர் அணித்தலைவி ருமானா அஹ்மத் முதலில் இலங்கையை துடுப்பாட பணித்தார்.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்து மந்த கதியிலேயே இலங்கை மகளிர் அணி ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்காக நிப்புனி ஹன்சிக்கா மற்றும் ஹசினி பெரேரா ஆகியோர் 39 ஓட்டங்களை பகிர்ந்தனர். தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் கடந்த போட்டியில் சிறப்பாட்டத்தினை காண்பித்திருந்த நிப்புனி ஹன்சிக்கா இலங்கை மங்கை அணியில் முதல் விக்கெட்டாக 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

கடந்த போட்டி போன்று மீண்டுமொரு முறை, மெதுவான ஓட்டக்குவிப்பு வீதத்தினை பங்களாதேஷ் உடனான இப்போட்டியிலும் காண்பித்த இலங்கை மகளிர் அணியில் வீராங்கணைகள் பலர், 50 இற்கும் குறைவான நூற்று வீத சராசரியினை காட்டியிருந்தனர்.

எனினும், மெச்சத்தக்க ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கணை சமரி அத்தபத்து இலங்கை மகளிர் அணி சார்பாக 84 ஓட்டங்களை 114 பந்துகளில் அசத்தலான 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் பெற்றுக்கொண்டு, தான் எந்த அணியினையும் சமாளிக்கும் திறமை கொண்டவர் என்பதை நிரூபித்தார். இலங்கை மகளிர் அணி சார்பாக சமரிக்கு அடுத்ததாக ஓட்டக்குவிப்பில், 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட ஹசினி பெரேரா இருந்தார். இவர்களின் உதவியுடன் இலங்கை மகளிர் அணி முடிவில், 50 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுகளை இழந்து 197  ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை மகளிர் அணியினை கட்டுப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்த பங்களாதேஷ் மகளிர் அணியில், சிறப்பாக செயற்பட்ட சுழல் மங்கை சல்மா கட்டுன், முக்கிய வீராங்கணையான சமரி அத்தபத்துவினை வீழ்த்திய விக்கெட்டுடன் சேர்த்து மொத்தமாக  மூன்று விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.

பின்னர், வெற்றியிலக்கினை பெற மைதானம்  நோக்கி விரைந்த பங்களதேஷின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணைகளில் ஒருவரான சர்மின் சுல்தானாவை போட்டியின் முதல் பந்திலேயே LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்த உதேசிக்கா பிரபோதினி வந்த வழியே  ஓய்வறை நோக்கி அனுப்பினார். பங்களாதேஷ் மகளிர் அணியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளும் குறைவான ஓட்ட இடைவெளிகளில் இலங்கை மகளிர் அணியினால் கைப்பற்றப்பட்டது.

பின்னர், பங்களாதேஷ் அணி 52 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் 15ஆவது ஓவரினை வீசிய இனோஷி பிரியதர்ஷினி தனது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் (4ஆவது மற்றும் 5ஆவது) விக்கெட்டுகளை சாய்த்து ஹெட்ரிக் வாய்ப்பொன்றினை பெற்றுக்கொண்டார். எனினும், அடுத்து வீசப்பட்ட அவரின் பந்தினை லாவகமாக தடுத்தாடி ஓட்டம் எதுவும் பெறாமல் செய்த பங்களாதேஷ் மகளிர் அணியினால் அவரின் ஹெட்ரிக் வாய்ப்பு பறிபோனது.

தொடர்ந்து துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி,  21 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி  மழை காரணமாக நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அக்கணத்தில், பங்களாதேஷ் மகளிர் டக்வத் லூயிஸ் முறைப்படி 111 ஓட்டங்களினை பெற்றிருக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து மழை நீடித்த இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுக்கொண்டது.

போட்டி நிறைவடைந்த தருணத்தில் பங்களாதேஷ் மகளிர் அணியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் நின்ற சய்லா சர்மின் 21 ஓட்டங்களினை பெற்றதுடன், இலங்கை மகளிர் அணி சார்பாக உதேசிக்கா பிரபோதினி மற்றும் ஹெட்ரிக்கினை தவறவிட்ட இனோஷி பிரியதர்ஷி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி – 197/9 (50) – சமரி அத்தபத்து 84(114), ஹசினி பெரேரா 32(72), சல்மா கட்டுன் 18/3(9)

பங்களாதேஷ் மகளிர் அணி – 68/5 (21) – சய்லா சர்மின் 21*(32), இனோஷி பிரியதர்ஷினி 16/2(7), உதேசிகா பிரபோதினி 14/2(4)

போட்டி முடிவு – இலங்கை மகளிர் அணி 42 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் – லூயிஸ் முறைப்படி)