கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான இறுதி வார போட்டியொன்றில் NCC அணி இராணுவ விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து 176 ஓட்டங்களினால் இலகு வெற்றியை சுவீகரித்தது. மற்றுமொரு போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி பின்னிலையில் காணப்படுவதால் SSC அணி சம்பியன் பட்டத்தை வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

NCC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய NCC அணி 268 ஓட்டங்களையும் அடுத்து துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி 227 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவின் போது NCC கழகம் தமது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்று 180 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்பட்டது.

இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை குவித்தது. அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அணித்தலைவர் அஞ்சலோ பெரேரா 106 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் பிரகாசித்த தனுசிக பண்டார 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு 308 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் NCC அணியின் லசித் எம்புல்தெனிய அசத்தலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, இராணுவ அணி 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடக்க வீரர் லக்ஷித மதுஷான் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இவ்வெற்றியுடன் NCC அணி சூப்பர் 8 புள்ளி அட்டவணையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. இதேவேளை இராணுவ விளையாட்டுக்கு கழகம் ஆறாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (68.2) – அஞ்சலோ பெரேரா 53, திமிர ஜயசிங்க 53, சதுரங்க டி சில்வா 42, யசோத மெண்டிஸ் 4/65, துஷான் விமுக்தி 3/64

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 227 (70.3) – லக்ஷித மதுஷான் 54, சச்சிந்த பீரிஸ் 4/43, சதுரங்க டி சில்வா 4/63

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 266 (65.4) – அஞ்சலோ பெரேரா 106, சதுரங்க டி சில்வா 48, தினேஷ் சந்திமால் 41, தனுசிக பண்டார 3/44

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 131 (34) – லக்ஷித மதுஷான் 39, லசித் எம்புல்தெனிய 4/42

முடிவு: NCC கழகம் 176 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • NCC கழகம் – 17.67
  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 4.79

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

சஹன் நாணயக்காரவின் அபார பந்துவீச்சின் காரணமாக ராகம விளையாட்டுக் கழகம் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேலும் 74 ஓட்டங்களே தேவைப்படும் நிலையில், சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய வாய்ப்பு கைநழுவிப் போயுள்ளது.

மோசமான துடுப்பாட்டம் காரணமாக சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சில் 168 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டதுடன் ராகம கிரிக்கெட் கழகம் 276 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றிருந்தது. இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி சார்பில் மஹேல உடவத்த, சச்சித்ர சேரசிங்க மற்றும் கீழ்வரிசை வீரர் மதுக லியனபதிரனகே ஆகியோர் அரைச்சதங்கள் கடந்த போதிலும், சிறப்பாக பந்துவீசிய சஹன் நாணயக்கார 7 விக்கெட்டுகளை பதம்பார்க்க, சிலாபம் மேரியன்ஸ் அணி 295 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்படி ராகம கிரிக்கெட் கழகத்திற்கு 188 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுடன், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (41.4) – மஹேல உடவத்த 41, நிலங்க பிரேமரத்ன 5/41

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 276 (85) – சமிந்த பெர்னாண்டோ 93, கோஷான் தனுஷ்க 50, அரோஷ் ஜனோத 5/45, ஷெஹான் ஜயசூரிய 3/50

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 295 (96.5) – சச்சித்ர சேரசிங்க 56, மதுக லியனபதிரனகே 54*, மஹேல உடவத்த 52, ருக்ஷான் ஷெஹான் 46, சஹன் நாணயக்கார 7/92

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 114/1 (31) – லஹிரு மிலந்த 44*, சமிந்த பெர்னாண்டோ 41*


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 218 ஓட்டங்களையும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 168 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணி நேற்று போட்டி நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றும் அவ்வணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 411 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம நேற்று 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், இன்று அஞ்சலோ ஜயசிங்க, விஷாத் ரந்திக மற்றும் பிரியமல் பெரேரா ஆகியோர் 80 ஓட்டங்களை கடந்தனர். பந்துவீச்சில் பிரமோத் மதுஷான் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி 462 என்ற பாரிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ் யூனியன் அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்தது. மனோஜ் சரத்சந்திர 59 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் சித்தர கிம்ஹான் 79 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இப்போட்டியில் தோல்வியை தழுவும் அணி சூப்பர் 8 புள்ளி அட்டவணையில் இறுதி இடத்திற்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (52.2) – சதீர சமரவிக்ரம 52, அகில தனஞ்சய 52, பிரியமல் பெரேரா 47, துலாஞ்சன மெண்டிஸ் 5/71, ரமித் ரம்புக்வெல்ல 4/75

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (45.2) – சித்தர கிம்ஹான் 43, இஷான் ஜயரத்ன 5/40

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 411 (117.3) – சதீர சமரவிக்ரம 93, பிரியமல் பெரேரா 88, விஷாத் ரந்திக 84, அஞ்சலோ ஜயசிங்க 81, பிரமோத் மதுஷான் 5/112, துலாஞ்சன மெண்டிஸ் 3/108

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 203/4 (47) –  சித்தர கிம்ஹான் 79*, மனோஜ் சரத்சந்திர 59, இஷான் ஜயரத்ன 2/50

நாளை போட்டிகளின் நான்காவதும் இறுதியுமான நாளாகும்.