பாடசாலை ரக்பி லீக் தொடரில் 14 வருடங்களுக்கு பின்னர் முதல் பிரிவிற்கு (டிவிஷன் A) தகுதி பெற்றிருக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி, பிரபல அணிகளுக்கு சிறந்த சவாலை வழங்கி சம்பியன் பட்டத்திற்கு முயற்சி செய்யும் நோக்குடன் இம்முறை இடம்பெறவுள்ள தொடரில் களமிறங்கவுள்ளது.

கல்லூரியின் ரக்பி வரலாறு

இலங்கையில் முதன்முதலில் ரக்பி விளையாட்டை அறிமுகப்படுத்திய நான்கு பாடசாலைகளில் ஒன்றான ஸாஹிரா கல்லூரி, ஏறத்தாழ 90 வருடங்களாக ரக்பி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றது. 1960 களில் ரக்பியில் சிறந்து விளங்கிய இப்பாடசாலை, 1962ஆம் ஆண்டு முன்னணி அணிகளான ரோயல் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகளை தோற்கடித்து லீக் சம்பியனாக முடிசூடியது.

ஸாஹிரா கல்லூரி இறுதியாக 1998ஆம் ஆண்டில் ஜனாதிபதிக் கிண்ணத்தை வெற்றி கொண்டது. எனினும் அதனை தொடர்ந்து சில வருடங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 2003ஆம் ஆண்டு இரண்டாம் பிரிவிற்கு (டிவிஷன் B) தரமிறக்கப்பட்டது.

கடந்த பருவகாலம்

கடந்த பருவகாலத்தில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய அவ்வணி, பல வருட முயற்சியின் பின்னர் மீண்டும் முதல் பிரிவிற்கு முன்னேறும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டது. 2016ஆம் ஆண்டில் ரம்சான் அமித்தின் தலைமையின் கீழ் ஸாஹிரா கல்லூரி, தட்டு பிரிவில் நான்காவது இடத்தினை பெற்றுக் கொண்டதுடன் அதன் பலனாகவே இவ்வருடம் முதல் பிரிவில் போட்டியிடும் தகுதியையும் பெற்றது.

முக்கிய வீரர்கள்

Mohamed Azhar Irfan

அஸார் இர்பான்: ஐந்தாவது வருடமாக அணியில் விளையாடவுள்ள அஸார் இர்பான் ஸாஹிரா அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். நான்கு வருடங்களாக அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள பலமிக்க முன்கள வீரரான இர்பான், கடந்த வருடம் தனது அணிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தார். இம்முறை தலைமைப் பொறுப்புடன் களமிறங்கவுள்ள இவர் ஸாஹிரா கல்லூரியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohamed Yuzraan Lantra

யுஸ்ரான் லந்த்ரா: வேகத்தை தனது பலமாகக் கொண்டுள்ள பின்வரிசை வீரர் யுஸ்ரான் லந்த்ரா இம்முறை நான்காவது வருடமாக ஸாஹிரா கல்லூரி சார்பில் விளையாடவுள்ளார். கடந்த வருடங்களில் விங் நிலை வீரராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த யுஸ்ரான், 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட சுப்பர் 7s ரக்பி தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் புனித பேதுரு கல்லூரியுடன் வெற்றி பெறுவதில் பெரும் பங்காற்றியிருந்தார். இந்நிலையில் இவ்வருடமும் தனது வேகத்தின் உதவியுடன் அணிக்கு புள்ளிகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய வீரராக இவர் காணப்படுவார்.

Hassan Razick

ஹசன் ராஸிக்: மற்றுமொரு அனுபவமிக்க வீரரான ஹசன் ராஸிக் இம்முறை ஐந்தாவது வருடமாக ஸாஹிரா கல்லூரி சார்பாக களமிறங்கவுள்ளார். பல வருடங்களாக சென்டர் நிலையில் விளையாடியுள்ள ஹசன், இவ்வருடம் பிரபலமான முன்னணி அணிகளுடனான போட்டிகளில் கடும் சவாலை எதிர்கொள்ளவுள்ளார். ப்ளைஹாப் வீரரான சயீத் சிங்கவன்சவுடனான இவரது கூட்டணி சிறப்பாக செயற்பட்டால் அச்சவாலை முறியடிக்கக் கூடியதாக இருக்கும்.

Tuan Shifaz Amath

துவான் ஷிபாஸ்: கடந்த வருடம் ஸ்க்ரம் ஹாப் வீரராக செயற்பட்டிருந்த துவான் ஷிபாஸ் இப்பருவகாலத்திலும் விளையாடவுள்ளமை ஸாஹிரா அணிக்கு அனுபவத்தையும் பலத்தையும் கொண்டு சேர்க்கவுள்ளது. ஸாஹிரா கல்லூரியின் பலமிக்க அங்கமாக பின்வரிசை காணப்படுகின்ற நிலையில் யுஸ்ரான், ஹசன் மற்றும் சயீத் ஆகியோரின் முழுத் திறமையையும் கையாளும் பொறுப்பு துவான் ஷிபாஸையே சார்ந்துள்ளது.

பயிற்றுவிப்பாளர்கள்

இசிபதன கல்லூரியை வெற்றிகரமாக பயிற்றுவித்து லீக் சம்பியனாக முடிசூடச் செய்த ஷம்லி நவாஸ், கடந்த வருடம் சிறப்பான வழிநடத்தலின் மூலம் ஸாஹிரா கல்லூரியை முதல் பிரிவிற்கு தரமுயர்த்துவதில் பெரும் பங்காற்றியிருந்தார்.

இந்நிலையில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சியளிக்க காத்திருக்கின்ற ஸாஹிரா கல்லூரி தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நாம் ஒவ்வொரு போட்டியாகவே கவனம் செலுத்தவுள்ளோம். எமது அணி சிறப்பாக விளையாடி வருகின்ற நிலையில் லீக் சம்பியன் பட்டத்தை வெல்வதே எமது குறிக்கோளாகும் என்றார்.

இவ்வருடத்திற்கான குழாம்

[a-team-showcase-vc ats_team_id=”2160676″]