டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சூப்பர் 8 சுற்றிற்கான ஐந்தாம் வார போட்டிக்காக நடப்பு சம்பியனான கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்டன. களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கொழும்பு கால்பந்து கழகமானது 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
போட்டி ஆரம்பித்த முதலிரண்டு வினாடிகளிலேயே கொழும்பு கால்பந்து கழகம் தனது கோலுக்காக மேற்கொண்ட முதல் முயற்சி கோல் கம்பத்துக்கு மேலாக சென்று தவறவிடப்பட்டிருந்தது. எனினும், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கொழும்பு கால்பந்து கழகம் மேற்கொண்ட முயற்சிகள் கடற்படை தடுப்பு வீரர்காளால் முறியடிக்கப்பட்டன.
போட்டியின் 14ஆவது நிமிடம் கடற்படை கழக வீரர் தம்மிக்க ரத்னாயக்கவுக்கு விதிமுறை மீறிய ஆட்டம் காரணமாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. 16ஆவது நிமிடத்தில் கடற்படை அணிக்கு கிடைக்கப் பெற்ற கோணர் வீணடிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டுமொரு கோணர் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் அதனால் பயன் பெறவில்லை.
5 கோல்களால் நிவ் யங்ஸ் அணியை துவம்சம் செய்த ராணுவப்படை
நிவ் யங்ஸ் கால்பந்து கழகத்துடன் இடம்பெற்ற போட்டியின் இரண்டாவது பாதியில் பெறப்பட்ட தொடர் கோல்களின் உதவியுடன் ராணுவப்படை விளையாட்டுக் கழகம்…
போட்டியின் 20ஆவது நிமிடம், உள்வந்த பந்தினை கொழும்பு கால்பந்து கழக முன்கள வீரர் நாகுர் மீரா கோலாக மாற்றினார். கொழும்பு கால்பந்து கழகம் முதல் கோலை பெற்றுக்கொண்டதிலிருந்து சற்று குழப்பமடைந்திருந்த கடற்படை அணி, போட்டியை விரைவில் சமப்படுத்தும் நோக்கில் தமது முன்கள தாக்குதலை அதிகரித்தது.
எனினும் கொழும்பு கால்பந்து கழகத்தை சேர்ந்த டேவிட் ஒசாஜி தொடர்ந்து தனியொருவராக பந்தினை கட்டுப்படுத்தி, முன்சென்று 23ஆவது நிமிடம் இரண்டாவது கோலைப் பெற்றுக்கொண்டார்.
போட்டியின் 31ஆவது நிமிடம் கோல் கம்பத்திலிருந்து 30 மீற்றர் தூரத்தில் கிடைக்கப் பெற்ற இலவச உதை வாய்ப்பு, இலங்கை கடற்படை அணியினால் வீணடிக்கப்பட்டது. அத்துடன் 33ஆவது நிமிடம் மீண்டும் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பம் ஓன்று கோல் கம்பத்துக்கு அருகாமையால் வெளியில் சென்றது. போட்டியின் 37ஆவது நிமிடம் கிடைக்கப் பெற்ற மற்றுமொரு இலகுவான கோல் வாய்ப்பும் இலங்கை கடற்படை அணியினால் கைநழுவிச் சென்றது.
எனினும், அதே நிலையில் போட்டியின் 40ஆவது நிமிடம் கிடைக்க பெற்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட கொழும்பு கால்பந்து கழகம் தமக்கான அடுத்த கோலைப் பெற்றது. 45ஆவது நிமிடம் மழை ஆரம்பித்த போதும் போட்டிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மழையின் இடையே போட்டி தொடர்ந்தும் நடைபெற்றது.
முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 03 – 00 இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்
முதல் பாதியின் இறுதியில் வெளிக்காட்டிய சிறப்பான ஆட்டத்தை கொழும்பு கால்பந்து கழகம் மீண்டும் வெளிப்படுத்தியது. அவ்வணியின் துரிதமான நகர்வுகளையும் தாக்குதல் ஆட்டத்தையும் இலங்கை கடற்படை அணி சிரமத்துடனே எதிர்கொண்டது. 48ஆவது நிமிடத்தில் கடற்படை அணிக்கு கிடைக்கப் பெற்ற இலவச உதை வீணடிக்கப்பட்டது.
அத்துடன் இரண்டாவது பாதி நேரத்தில், ஓரிரு தடவைகள் தவிர்ந்த ஏனைய நேரம் முற்று முழுவதுமாக கொழும்பு கால்பந்து கழகம் ஆதிக்கம் செல்லுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. 54ஆவது நிமிடம் கிடைக்கப் பெற்ற வாய்ப்பு கைநழுவியது.
எனினும், தொடர்ந்து போராடிய இலங்கை கடற்படை அணி போட்டியின் 60ஆவது நிமிடம் கிடைக்கப் பெற்ற வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் பெற்றது. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் அடுத்தடுத்து ஒவ்வொரு கோல் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் இரு அணிகளுமே அவற்றை தவறவிட்டன. 66ஆவது நிமிடம் இலங்கை கடற்படை முன்கள வீரர் சதுரங்கவுக்கு கிடைத்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.
77ஆவது நிமிடம் கொழும்பு கால்பந்து கழகம் சார்பாக ஒரு மாற்று வீரர் மைதானத்தில் நுழைந்தார். இறுதி தருவாயில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. கொழும்பு கால்பந்து கழக முன்கள வீரர்கள் முன்சென்ற போதும் கடற்படை மத்திய கள வீரர் சுரங்க சன்ஜீவ அதனைத் தடுத்து நிறுத்தினார்.
இறுதி நிமிடத்தில் கடற்படை அணியால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து தாக்குதல்களும் கொழும்பு கால்பந்து கழக பின்கள தடுப்பு வீரர்கள் மற்றும் கோல் காப்பாளரால் சிறப்பாக தடுக்கப்பட்டன.
போட்டி முழுநேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 03 – 01 இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மொமாஸ் யாபோ (கொழும்பு கால்பந்து கழகம்)
போட்டியின் பின்னர் கொழும்பு கால்பந்து கழக பயிற்சியாளர் மொஹமட் ரூமி கருத்து தெரிவிக்கையில்
”போட்டியின் ஆரம்பத்தில் நாம் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். மழை காரணமாக எங்கள் ஆட்டத்தில் மாறுதல் ஏற்பட்டது. காயத்திலிருந்து மீண்டவர்களுக்கு இன்னும் நேரம் தேவை. எங்களுடைய அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம்.”
இலங்கை கடற்படை கழக பயிற்சியாளர் தம்மிக்க அத்துகோரள கருத்து தெரிவிக்கையில்
”துரதிஷ்டவசமாக நாங்கள் ஓப் சைட் என்று நினைத்திருந்த 2 கோல்கள் சரியானதென தீர்ப்பளிக்கப்பட்டன. எனினும் இரண்டாவது பாதியில் நாம் முற்றாக ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் நாம் எதிர்பார்த்திருந்த பெறுபேறு கிடைக்கவில்லை.”
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்து கழகம் – நாகூர் மீரா 20’ & 41’ , டேவிட் ஒசாகி 23’
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – சதுரங்க சன்ஜீவ 61’மஞ்சள் அட்டை
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – தம்மிக்க ரத்னாயக்க 14’மாற்று வீரர்கள்:
கொழும்பு கால்பந்து கழகம் – தனுஷ்க மதுஷங்க/டேவிட் ஒசாஜி, அஹமத் சஸ்லி/ரவ்மி மொஹிடீன்
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – நிர்மல் விஜேதுங்க/ஜெரன் பெர்னாண்டோ, நாலக்க ரொஷான்/கனகராஜா சுதர்ஷன், மதுரங்க பெரேரா/பிரதீப் பெரேரா