இலங்கை ‘A’ அணிக்கு தலைமை தாங்கவுள்ள தனஞ்ஜய டி சில்வா

1875
Dhananjaya De Silva to lead Sri Lanka ‘A’ translated

பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை’A’ அணியின் தலைவராக தனஞ்ஜய டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் 20.83 என்கிற சராசரியில் 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த தனஞ்ஜய டி சில்வா, முறையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் 12.20,16.00 எனும் சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றார்  இந்நிலையிலேயே, இவர் டி20 போட்டிகளுக்காக  அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கைக் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை A அணியின் தலைவராக செயற்படவுள்ள இவர் தனது வழமையான துடுப்பாட்டத்திறனை மீளப்பெறுவதற்கு, இத் தொடரைச் சாதகமாக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவிற்கெதிராக 128 ஓட்டங்களை மட்டுமே பெற்ற திமுத் கருணாரத்னவிற்கும், இந்த இரண்டு நான்கு-நாள் போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிக ஓட்டங்களைக் குவித்துக் கொண்டிருக்கும் றாகம கிரிக்கெட் கழக வீரர்களான உதார ஜயசுந்தர, றொஷேன் சில்வா ஆகியோரும் 15 பேர் கொண்ட குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதேவேளை தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகம் பெற்ற சந்துன் வீரக்கொடி இவ்வணியின் விக்கெட் காப்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இளைய வீரர்களான, சரித் அசலங்க, றொன் சந்ரகுப்த ஆகியோர் குழாமிலுள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்களாவார். அதேவேளை, இக்குழாம் லஹிரு கமகே, கசுன் ராஜித, கசுன் மதுசங்க, அசித்த பெர்ணான்டோ ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. சழற்பந்து வீச்சிற்கென அனுவம் வாய்ந்த தில்றுவன் பெரேராவும் அவருடன் இணைந்து இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான அமில அபொன்ஸோ, மிலிந்த புஷ்பகுமார மற்றும் லெக் பிறேக் பந்து வீச்சாளரான ஜெப்ரி வன்டேர்சே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

முதலாவது உத்தியோகப்பற்றற்ற நான்கு-நாள் போட்டி பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் இடம்பெறவிருக்கும் அதேவேளை, இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டி பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் தம்புள்ளையிலும் இடம்பெறவுள்ளது.

இலங்கை ‘A’ அணிக்குழாம்

தனஞ்ஜய டி சில்வா (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, உதார ஜயசுந்தர, சந்துன் வீரக்கொடி (விக்கெட் காப்பாளர்), சரித் அசலங்க, றொஷென் சில்வா, லஹிரு கமகே, கசுன் ராஜித, றொன் சந்திரகுப்த, கசுன் மதுஷங்க, அசித்த பெர்னான்டோ, தில்றுவன் பேரேரா, அமில அபொன்ஸோ, ஜெப்ரி வன்டேர்சே, மலிந்த புஷ்பகுமார

அலுவலர்கள் – அணி முகாமையாளர் – ஜெர்ரி வோற்றஸ், தலைமை பயிற்றுவிப்பாளர் – அவிஷ்க குணவர்த்தன, வேகப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் – நுவன் சொய்சா (முதலாவது டெஸ்ட் போட்டிக்கு மட்டும்), சமிந்த வாஸ் (இறுதி 03 ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் – பியல் விஜேதுங்க, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் – நுவன் செனவிரத்ன, உடற்பயிற்சியாளர் (Physiotherapist) – ரஞ்சித் நாணயக்காரவஸம், இயன்முறையாளர்(masseur) – றொஹான் விஜேவீர, பயிற்சியாளர் – டில்ஷான் பொன்சேகா, ஆய்வாளர் – G G T நிரோஷன்