5 கோல்களால் நிவ் யங்ஸ் அணியை துவம்சம் செய்த ராணுவப்படை

651
Army SC vs New Youngs FC

நிவ் யங்ஸ் கால்பந்து கழகத்துடன் இடம்பெற்ற போட்டியின் இரண்டாவது பாதியில் பெறப்பட்ட தொடர் கோல்களின் உதவியுடன் ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் ஆட்டத்தை அபாரமாக வெற்றிகொண்டுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற கொழும்பு கால்பந்து அணியுடனான போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட ராணுவப்படை அணியின் பிரதான கோல் காப்பாளர் குமார சிறிசேனவிற்கு களனிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் விளையாட முடியாமல் இருந்தது. அவருக்கு பதிலாக இரண்டாவது கோல் காப்பாளரான அஜ்மல் களத்தில் இறங்கினார்.

கடும் முயற்சியின் பின்னர் சொலிட் அணியை வீழ்த்தியது ப்ளூ ஸ்டார்

அதேபோன்று, அவ்வணியின் பின்கள வீரர் அசிகுர் ரஹ்மானுக்கும் இன்றை போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே, பின்களத்தின் இரு முக்கிய வீரர்கள் இன்றியே இன்றைய போட்டியை ராணுவப்படை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதலாவது ப்ரீ கிக் வாய்ப்பு ராணுவப்படை அணிக்கு 14ஆவது நிமிடத்தில் கிடைத்தது. எனினும் அதன்போது அவர்கள் உதைந்த பந்தை நிவ் யங்ஸ் அணியின் கோல் காப்பாளர் கவீஷ் இலகுவாகப் பிடித்தார்.

அதற்கு அடுத்த நிமிடத்தில் நிவ் யங்ஸ் அணி வீரர் பவ்சான் மிக வேகமாக உதைந்த பந்தை ராணுவப்படை கோல் காப்பாளர் அஜ்மல் சிறந்த முறையில் தடுத்தார்.

அட்டத்தின் 22 நிமிடங்கள் கடந்த நிலையில் நிவ் யங்ஸ் அணியின் பொஸ்டாம் மாடி, தனக்கு கிடைத்த பந்தை தனியே எடுத்து எதிர் திசையின் கோல் எல்லைக்கு கொண்டு வந்தார். எனினும் அவரால் அந்தப் பந்தை சிறந்த முறையில் முழுமையாகக் கொண்டு செல்ல ராணுவப்படைத் தரப்பு இடமளிக்கவில்லை.

போட்டி இரு தரப்பினருக்கும் சமமாக சென்றுகொண்டிருக்கும்பொழுது, 27ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணியினர் எதிர் தரப்பின் கோல் பரப்பில் நீண்ட நேரம் பந்தை வைத்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் இறுதியில் அவ்வணி வீரர் சன்க தனுஷ்க போட்டியின் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

29ஆவது நிமிடத்தில் பவ்சான் மீண்டும் நீண்ட தூரத்தில் இருந்து கோலுக்கு உதைந்த பந்தை, அஜ்மல் சிறந்த முறையில் பிடித்தார்.

40 நிமிடங்கள் கடந்த நிலையில் தனது காலுக்கு கிடைத்த பந்தை இஸ்ஸதீன் அழகான முறையில் தனியே கொண்டு சென்று, கோல் காப்பாளரையும் தாண்டிச் சென்று இறுதியாக கோலுக்குள் உதைந்த பந்தை மதுஷங்க கருனாரத்ன கோலுக்கு அண்மையில் இருந்து தடுத்தார்.

அதுபோன்று, முதல் பாதியின் இறுதியில் தனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் இஸ்ஸதீன் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினார்.

முதல் பாதி: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 01 – 00 நிவ் யங்ஸ் கால்பந்து கழகம்

ஏற்கனவே முன்னிலையில் இருந்த ராணுவப்படை அணியினர், இரண்டாவது பாதி ஆரம்பமாகி மூன்று நிமிடங்கள் முடிவதற்குள் சஜித் குமார மூலமாக தமது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் 51ஆவது நிமிடத்தில் மதுஷான் டி சில்வா மிக வேகமாகக் கொண்டு சென்று பந்தை சஜித் குமாரவிற்கு வழங்க, அவர் அதனை இலகுவாக கோலாக்கினார்.

அதற்கு அடுத்த நிமிடம் நிங் யங்ஸ் அணிக்கு எதிரணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் வைத்து ப்ரீ கிக் உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதன்போது பவ்சான் உதைந்த பந்து கம்பங்களை விட மிகவும் உயர்ந்து சென்றது.

அதனைத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு ராணுவப்படை வீரர்களே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எதிரணியின் பல முயற்சிகளை ராணுவப்படையின் பின்கள வீரர்களும், கோல்காப்பாளரும் எந்தவித பதட்டமும் இன்றி தடுத்தாடினர்.

ஆட்டம் நிறைவடைய 25 நிமிடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இஸ்ஸதீன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக திவங்க சந்திரசேகர மைதானத்தில் இறங்கினார். அவர் மைதானத்தில் இறங்கி சில நிமிடங்களிலேயே தனது முதலாவது கோலைப் பெற்றுக் கொண்டார்.

குறிப்பாக, இரண்டாவது பாதியில் நிவ் யங்ஸ் வீரர் பவ்சானுக்கு கிடைத்த பல வாய்ப்புக்களை அவர் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினார்.

எனினும், 88ஆவது நிமிடத்தில் பவ்சான் தனது கால்களுக்கு வந்த பந்தை எடுத்துச் சென்று கோல்களுக்குள் அனுப்பினார். எனினும் நடுவர் ஓப் சைட் என அந்த கோலை நிராகரித்தார்.

அதே சூட்டோடு விளையாடிய ராணுவப்படை வீரர்கள் அதற்கு அடுத்த நிமிடம் மாற்று வீரராக மைதானத்தில் களமிறங்கிய ரிம்சான் மூலம் தமக்கான ஐந்தாவது கோலைப் பெற்றுக்கொண்டனர்.

முழு நேரம்: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 05 – 00 நிவ் யங்ஸ் கால்பந்து கழகம்

Thepapare.com இன் ஆட்ட நாயகன்: சன்க தனுஷ்க (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்  

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சன்க தனுஷ்க 27’, சஜித் குமார 47’ & 51’, திவங்க சந்திரசேகர 71’, மொஹமட் ரிம்சான் 89’

மஞ்சள் அட்டை

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சஜித் குமார 35’

நிவ் யங்ஸ் கால்பந்து கழகம் – பவ்சான் 48’,