தற்போது, நடைபெற்று முடிந்திருக்கும், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சாதித்ததன் காரணமாக தென்னாபிரிக்க அணியின் வீரர்களான பாப் டு பிளேசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐ.சி.சி இன் ஒரு நாள் போட்டி வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
மணிக்கட்டு சுழல் வல்லுனரான இம்ரான் தாஹிர் இத்தொடரில், கைப்பற்றிய 10 விக்கெட்டுக்களின் காணரமாக ஏனைய பந்து வீச்சாளர்களை துரித கதியில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தினை பெற்றுள்ளதுடன், டு ப்லெசிஸ் இத்தொடரில் குவித்த 410 ஓட்டங்களின் காரணமாக தனது முற்று முழுதான கிரிக்கெட் வாழ்நாளில் முதல் முறையாக வீரர்கள் தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களிற்குள் முன்னேறியுள்ளார்.
ஏற்கனவே, T20 வீரர்கள் தரவரிசையில் முதலாம் இடத்தில் இருக்கும் தாஹிர், இத்தொடருக்கு முன்னதாக 712 புள்ளிகளுடன் ஒரு நாள் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார். இத்தொடரில் 49 புள்ளிகளின பெற்றுக்கொண்டதன் காரணமாக, நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலாம் இடத்தினை தாஹிர் சுவீகரித்துக் கொண்டார்.
மறுமுனையில், இத்தொடரில் அதி சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த டு ப்லெசிஸ் ஏழு துடுப்பாட்ட வீரர்களை ஒரேயடியாக தாண்டி, ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் தடவையாக நான்காம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார். இத்தொடரின் மூலம் 67 புள்ளிகளை டு ப்லெசிஸ் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 5 ஆம் 6 ஆம் இடங்களை முறையே, 15 புள்ளிகள் வித்தியாசத்துடன் டு ப்லெசிஸ் இன் சகபாடிகளான குயின்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோர் பிடித்துள்ளனர்.
ஐ.சி.சி இன் துடுப்பாட்ட வீரர்கள் தர வரிசையில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் முதலிடத்தில் இருப்பதோடு, இரண்டாம் மூன்றாம் இடங்களினை முறையே ஏனைய தென்னாபிரிக்க வீரரான ஏபி.டி. வில்லியர்ஸ் மற்றும் இந்தியாவின் விராத் கோஹ்லி ஆகியோர் தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றனர்.
நேற்று, சனிக்கிழமை (11) வெளியாகியிருக்கும் ஐ.சி.சி இன் சமீபத்திய ஒருநாள் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில், தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களான வேய்ன் பார்னல் மற்றும் கிரிஸ் மொரீஸ் ஆகியோரும் முன்னேற்றங்களை காண்பித்துள்ளனர். அத்துடன் இந்த தரவரிசையில் அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணியுடனான தொடரில் வெளிக்காட்டப்பட்டிருந்த சிறப்பு ஆட்டங்களிற்கு அமைவாக இரு நாடுகளின் வீரர்களும் முன்னிலை பெற்றுள்ளனர்.
இத்தொடரில், மொத்தம் 11 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த பார்னல் 16 இடங்கள் முன்னேறி 28ஆவது இடத்தினை பெற்றதோடு, அவருக்கு அடுத்த இடத்தினை நியூசிலாந்தின் டிம் செளத்தி பிடித்துக்கொண்டார். அத்துடன் பார்னலின் சக அணி வீரரான கிரிஸ் மொரிஸ் இத்தொடரில் கைப்பற்றிய 8 விக்கெட்டுக்கள் காரணமாக, 70 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தினை தன்வசமாக்கினார்.
65 வீரர்களினை பின்தள்ளி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 62ஆவது இடத்தினை பிடித்திருக்கும் நிரோஷன் திக்வெல்லவின் முன்னேற்றம் மாத்திரமே இலங்கை அணிக்கு இத்தொடரில் ஆறுதல் செய்தியாக இருக்கின்றது.
அடுத்து, பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், 11 இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தினை முதல் தடவையாக பிடித்திருக்கும் அவுஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிச்சேல் சான்ட்னரின் நிலை முன்னேற்றம் இந்த வீரர்கள் வரிசை முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்த தரவரிசைப்பட்டியலில் மேலதிகமாக, ஹஷிம் அம்லா ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தினை பிடித்திருப்பதோடு, டேவிட் மில்லர் 8 இடங்கள் முன்னேறி 26ஆவது இடத்தினை அடைந்துள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட் 2 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்திற்கு வந்துள்ளதுதோடு, பர்ஹான் பெஹர்டீன் (45ஆவது), ககிசோ றபடா (7ஆவது) மற்றும் பெட் கம்மின்ஸ் (25ஆவது) ஆகியோரும் முன்னேற்றங்களை காண்பித்துள்ளனர்.
ஒரு நாள் சகல துறை வரிசை வீரர்கள் தரவரிசையில், பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹஸன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், இரண்டாம் இடத்தினை ஆப்கானிஸ்தான் வீரர் முஹம்மட் நபி பெற்றுள்ளார், இதில் மூன்றாவது இடத்தினை இலங்கை அணியின் அஞ்சலோ மெதிவ்ஸ் பெற்றுக்கொண்டார்.