மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத்தில் மோதப்போகும், மேலதிக அணிகளை தெரிவு செய்யும் தகுதி காண் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இன்று நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஜிம்பாப்வே அணியினை 8 விக்கெட்டுக்களால் இலங்கை மகளிர் அணி வீழ்த்தி, இத்தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியினை சுவைத்துள்ளது.
இதன்மூலம் தகுதிகாண் தொடரின் அடுத்த நிலையான சுப்பர் 6 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினையும் இலங்கை அதிகரித்துக்கொண்டுள்ளது.
மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு இலகுவான முதல் வெற்றி
மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு இலகுவான முதல் வெற்றி
NCC மைதானத்தில் ஆரம்பமாகிய குழு A இன் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட ஜிம்பாப்வே அணித் தலைவி சார்ன் மேயர்ஸ், முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டார்.
இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே மகளிர் அணி, சில விக்கெட்டுகளை சீரான ஓட்ட இடைவெளிகளில் பறிகொடுத்தவாறு ஓட்டங்களை மந்த கதியில் சேர்க்க ஆரம்பித்தது. இவ்வாறான நிலையில் அவ்வணி 93 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் தனது 5ஆவது விக்கெட்டினை இலங்கை அணித் தலைவி இனோக்கா ரணவீரவின் சுழல் பந்து வீச்சில் பறிகொடுத்தது.
அதனையடுத்து மள மளவென இலங்கை பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியின் ஏனைய விக்கெட்டுகளை வீழ்த்த, மேலதிக 56 ஓட்டங்களிற்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 149 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஜிம்பாப்வே வீராங்கனைகளில், இலங்கையின் பந்து வீச்சினை ஓரளவு தாக்குப்பிடித்த மேரி-ஏன் முசோன்டா மாத்திரம் அதிகபட்சமாக 32 ஓட்டங்களினை கடந்தார். ஏனைய அனைவரும் மோசமான ஆட்டத்தினையே இன்றைய போட்டியில் வெளிக்காட்டி இருந்தனர்.
இலங்கை சார்பான பந்து வீச்சில், அணித் தலைவி இனோக்கா ரணவீர தனது நட்சத்திர சுழல் மூலம் வெறும் 18 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது அணிக்கான தலைமைப் பொறுப்பை செவ்வனே செய்து முடித்தார். மறுமுனையில், நேர்த்தியான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த சாமரி பொல்கம்பல மற்றும் சாமரி அத்தபத்து ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது பலத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
பின்னர், இலகு வெற்றி இலக்கான 150 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்காக ஆடுகளம் நோக்கி விரைந்த இலங்கை மங்கைகள் வெறும் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 36.5 ஓவர்களில் 153 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை தொட்டனர்.
இலங்கை மகளிர் அணி சார்பாக பெரும் பங்காற்றிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை சாமரி அத்தபத்து அரைச் சதம் கடந்து 60 பந்துகளுக்கு 9 பவுண்டரிகளை விளாசி 58 ஓட்டங்களினை பெற்று தனது பத்தாவது ஒருநாள் அரை சதத்தினை பதிவு செய்து கொண்டார்.
இலங்கை அணிக்கு பந்து வீச்சில் சற்று சவாலாக காணப்பட்டிருந்த ஜிம்பாப்வே அணியின் லோரென் ட்சுமா இன்று பறிபோன இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.
இப்போட்டியின், ஆட்ட நாயகியாக தனது சிறப்பான பந்து வீச்சிற்காக இனோக்கா ரணவீர தெரிவு செய்யப்பட்டார்.
இத்தொடரில், இலங்கை மகளிர் அணி தனது இறுதி குழு நிலை ஆட்டப் போட்டியில் தாய்லாந்து மகளிர் அணியினை எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
ஜிம்பாப்வே மகளிர் அணி: 149 (50) மேரி–ஏன் முசோன்டா 32(70), ப்ரிசியஸ் மெரங்கே 29 (39)*, இனோக்கா ரணவீர 18/4 (10), சாமரி அத்தபத்து 21/2(8), சாமரி பொல்கம்பொல 21/2 (7)
இலங்கை மகளிர் அணி: 153/2 (36.5) சாமரி அத்தபத்து 58(60), பிரசாதினி வீரக்கொடி 33(48)*, லோரென் ட்சுமா 31/2(10)
போட்டி முடிவு – இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
அயர்லாந்து எதிர் தாய்லாந்து
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரன் அவுட் முறையில், இரண்டு ஓட்டங்களால் தனது கன்னி சதத்தினை தவற விட்ட கிம் கார்த் பெற்றுக்கொண்ட 98 ஓட்டங்களின் உதவியுடன், தாய்லாந்து அணியினை அயர்லாந்து அணி வீழ்த்தி இத்தொடரில் தனது இரண்டாவது வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.
திரும்பவும் ஒரு முறை, வெற்றி இலக்கினை அடைவதற்கு சிறந்த முயற்சிகளை செய்த தாய்லாந்து மகளிர் அணி இப்போட்டியிலும் தோல்வியையே சந்தித்தது.
போட்டியின் சுருக்கம்
அயர்லாந்து மகளிர் அணி: 218/7 (50) – கிம் கார்த் 98(122), லாரா டெலானி 50(80), ரட்டான போர்ன் படுங்கலெர்ட் 25/2(5)
தாய்லாந்து மகளிர் அணி: 172/9 (50) – நட்டாய பூச்சாதம் 44(84), சொர்னரின் டிப்போச் 42(59), லூசி ஓ ரெல்லி 28/3 (10)
போட்டி முடிவு – அயர்லாந்து மகளிர் அணி 46 ஓட்டங்களால் வெற்றி
ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூ கினியா
MCA மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த குழு B இற்கான இப்போட்டியில், வெறும் 7 ஓட்டங்களால் பபுவா நியூ கினியா அணியினை ஸ்கொட்லாந்து வீழ்த்தி இத்தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்து கொண்டது.
இதில் பபுவா நியூ கினியா வேகப் பந்து வீச்சாளர் பவ்கே சியக்கா வெறும் 19 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
ஸ்கொட்லாந்து மகளிர் அணி: 169 (50) ரச்சேல் ஸ்கோல்ஸ் 35(60), பவ்கே சியக்கா 19/6(10)
பபுவா நியூ கினியா மகளிர் அணி: 162 (50) ப்ரெண்டா பஉ 46(122), கரி அன்டர்சன் 35/3 (10)
போட்டி முடிவு – ஸ்கொட்லாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி
தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ்
P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற குழு B இன் மற்றைய போட்டியில், பங்களாதேஷ் அணியினை தென்னாபிரிக்கா வீழ்த்தி இத்தொடரில் தனது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியினை பதிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் மகளிர் அணி: 100 (46.5) – ருமானா அஹ்மட் 39(93)*, சப்னிம் இஸ்மாயில் 14/3 (9), சுனே லூயிஸ் 17/3 (7.5)
தென்னாபிரிக்க மகளிர் அணி: 101/4 (25.2)
போட்டி முடிவு – தென்னாபிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி