கொழும்பு கழகத்தை சொந்த மண்ணிலும் வீழ்த்தியது மோஹன் பகன்

534
Mohun Bagan v CFC.

சோனி நோர்டேவின் அபாரமான விளையாட்டின் மூலம், ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டியின் 2ஆம் கட்ட போட்டியில் 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் மோஹன் பகன் மெய்வல்லுனர் கழக அணி வெற்றி பெற்றது.

கொழும்பில் நடைபெற்ற முதல் கட்ட போட்டியில் மோஹன் பகன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா ரபீந்திர சரோபர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட போட்டியிலும் பெற்ற வெற்றியின் மூலம் மோஹன் பகன் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை வென்றுள்ளது.

பாரிய போராட்டத்தின் பின்னர் கொழும்பு அணியை வீழ்த்தியது மொஹன் பகன்

முதல் பாதியில் எதிர்பார்த்ததை விட கொழும்பு வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது…

முதலாவது போட்டியில் காயம் காரணமாக விளையாடாத மோஹன் பகனின் முக்கிய வீரர் சோனி நோர்டே, இப்போட்டியில் ஒரு கோலைப் பெற்றதோடு, மேலும் ஒரு கோல் அடிக்க உதவியையும் மேற்கொண்டார். கொழும்பு கழகம்   இறுதி கட்டத்தில் கோல் ஒன்றை அடித்த பொழுதும், அவர்களால் போட்டியை வெல்ல முடியாமல் போனது.

கொழும்பு அணி, இப்போட்டியில் சில மாற்றங்களை மேற்கொண்டது. ரவ்மி மொஹிடீன், மொகமட் ரிப்னாஸ் மற்றும் ஷன்ன ஆகியோர் திலான் கௌஷல்ய, மொகமட் ரமீஸ் மற்றும் சர்வான் ஜொஹரிற்கு பதிலாக முதல் பாதியிலேயே களத்தில் இறங்கினர்.

போட்டியை வெல்வதற்கு 2 மேலதிக கோல்களுடன் இரண்டாம் கட்ட போட்டியை வெல்ல வேண்டும் என்ற நிலையில் விளையாடிய கொழும்பு கழகம், முதல் 20 நிமிடங்கள் மோஹன் பகன்  அணிக்கு அழுத்தம் கொடுத்து விளையாடியது. எனினும் மோஹன் பகன் அணி சிறப்பாக விளையாடி போட்டியை தன் பக்கம் ஈர்த்தது.

மோகன் பகன் அணி, 28ஆவது நிமிடத்தில் சோனி மூலமாக முதலாவது கோலை அடித்தது. டரெல் டப்பி மூலமாக பந்தை பெற்றுக்கொண்ட சோனி, சிறப்பாக பந்தை கட்டுப்படுத்தி கோலை நோக்கி அடித்தார். அந்தப் பந்தை கொழும்பு அணியின் கோல் காப்பாளரினால் தடுத்து இருக்க முடியுமாக இருந்த போதும், அவர் அதனை மேற்கொள்ள தவறியமை ஏமாற்றம் அளித்தது.

கோல் பெறப்பட்டு 3 நிமிடங்களின் பின்னர் டப்பி மற்றுமொரு கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் கொழும்பு அணியின் ரிப்னாஸிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அவர் உதைந்த பந்து எதிரணி கோல் காப்பாளரின் கைகளுக்கே சென்றது.

முதல் பாதி நிறைவடைய சில நிமிடங்களுக்கு முன்னர் மோகன் பகன் அணி, 4 வீரர்களுடன் முன்னேறி கோல் அடிக்க முயன்றாலும், பிக்ரம்ஜித் சிங் உதைந்த பந்து கோல் காப்பாளர் இம்ரானின் கைகளில் சிக்கியது. கொழும்பு அணியின் மொமாஸ் யாபோ உதைந்த பந்தும் ஷில்ட்டன் போலின் கையில் சிக்க, அத்துடன் முதல் பாதி நிறைவடைந்தது.

முதல் பாதி: மோகன் பகன் மெய்வல்லுனர் கழகம் 01 – 00 கொழும்பு கால்பந்து கழகம்

கொழும்பு கழகம் இரண்டாம் பாதியை தண்ட உதையுடன் ஆரம்பித்தாலும் அவர்களால், கோல் அடிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை சோனி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்.

சரித ரத்நாயக்கவை தாண்டி பந்தை சிறந்த முறையில் கொண்ட சென்ற சோனி, பந்தை அழகாக குறுக்கே உதைந்தார். அதன்போது டப்பிக்கு இலகுவான பந்து கிடைக்க, அவர் அதனை கோலிற்குள் உதைத்தார்.  இதன் மூலம் மோகன் பகன் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் கொழும்பு கழகம் ரிப்னாஸிற்கு பதிலாக சர்வானை களத்தில் இறக்கியது. களத்தில் குதித்த சர்வான் உடனடியாக கோல் அடிக்க முயன்ற பொழுதும் அது எதிர் தரப்பினரால் தடுக்கப்பட்டது. அபிஸ் ஓலையமி உதைந்த பந்தும் கோல் காப்பாளரினால் தடுக்கப்பட, கொழும்பு அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டன.

ஆட்டம் நிறைவடைய 15 நிமிடங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் சோனி மற்றும் டப்பி ஆகியோர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலான மேலும் இரு வீரர்கள் களத்தில் இறங்கினர்.

அதனைத் தொடர்ந்தும் யாப்போ மீண்டும் ஒரு முறை கோல் அடிக்க முயன்ற பொழுதும், கோல் காப்பாளரினால் அது தடுக்கப்பட்டது.

பெனால்டி எல்லையினுள் வைத்து அபீல் மொகமட்டின் கையில் பந்து பட்டதால், மொகன் பகன் அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு வழங்கப்பட்ட பொழுதும், இம்ரான் அற்புதமாக அதை தடுத்து கொழும்பு அணிக்கு சிறந்த பங்காற்றினார்.

போட்டி நிறைவடைய 2 நிமிடங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் மொமாஸ் யாப்போ பல வீரர்களை ஏமாற்றி, சிறப்பாக பந்தை கொண்டு சென்று ஷில்ட்டன் போலை தாண்டி கோலிற்குள் பந்தை உதைந்தார். எனினும் கொழும்பு அணியினால் மேலும் இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமப்படுத்த முடியவில்லை.

முழு நேரம்: மோகன் பகன் மெய்வல்லுனர் கழகம் 02 – 01 கொழும்பு கால்பந்து கழகம்  

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீர்சோனி நோர்ட்டே (மோகன் பகன் மெய்வல்லுனர் கழகம்)