இராணுவ அணிக்கு அதிர்ச்சி கொடுத்து, டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் இராணுவ அணியை 27-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் அணியானது வென்றது.
தியகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இராணுவ அணியானது கடந்த வாரம் கடற்படை அணியை வென்ற நம்பிக்கையில் களம் இறங்கிய பொழுதும், பொலிஸ் அணியானது அவர்களது நம்பிக்கையை சிதைத்தது.
போட்டி ஆரம்பித்ததிலிருந்து இராணுவ அணிக்கு பொலிஸ் அணியானது அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் இராணுவ அணி தவறு செய்ய, பொலிஸ் அணியானது பெனால்டி வாய்ப்பொன்றை வென்றது. கம்பத்தினை நோக்கி உதைய முடிவு செய்த பொலிஸ் அணி, ராஜித சன்சோனி மூலமாக அதை வெற்றிகரமாக உதைத்தது. (இராணுவம் 00 – பொலிஸ் 03)
இராணுவ அணிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க, பொலிஸ் அணியானது பலம் மிக்க சார்ள்ஸ் பிரவீன் மூலமாக தமது முதலாவது ட்ரையை பெற்றுக்கொண்டது. ராஜித சன்சோனி வெற்றிகரமாக கொன்வெர்சன் உதையை உதைத்தார். (இராணுவம் 00 – பொலிஸ் 10)
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராணுவ அணியானது அடுத்த சில நிமிடங்களில் தமது முதல் ட்ரையை வைத்தது. சென்ற வாரம் கடற்படை அணியுடனான போட்டியில் ஆட்டநாயகனான அசோக ஜெயலால் இராணுவ அணிக்காக ட்ரை வைத்தார். கயான் சாலிந்த வழமை போலவே சிறப்பாக உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (இராணுவம் 07 – பொலிஸ் 10)
இராணுவ அணியானது போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பொழுதும், மறுபடியும் தவறொன்றை செய்து பொலிஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கியது. இம்முறையும் ராஜித சன்சோனி கம்பத்தினூடே உதைத்து பொலிஸ் அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (இராணுவம் 07 – பொலிஸ் 13)
இராணுவ அணியின் தடுப்பானது மோசமான நிலையில் காணப்பட, பொலிஸ் அணியானது முதற் பாதி முடிவடைய முன்னர் இன்னொரு ட்ரையையும் வைத்தது. பொலிஸ் அணியின் ஹுகர் நிலை வீரரான தனில்ஷ திஸ்ஸானாயக இம்முறை பொலிஸ் அணிக்கு முன்னிலையை வழங்கினார். சன்சோனி இம்முறையும் உதையை தவறவிடவில்லை.
முதல் பாதி: இராணுவப்படை விளையாட்டு கழகம் 07 – 20 பொலிஸ் விளையாட்டு கழகம்
இரண்டாம் பாதியில் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட இராணுவ அணியானது, தலைவர் மனோஜ் டி சில்வா மூலமாக ட்ரை வைத்து மீண்டும் போட்டிக்கு உயிர் கொடுத்தது. சாலிந்த கொன்வெர்சன் உதையை தவறவிடவில்லை. (இராணுவம் 14 – பொலிஸ் 20)
அதிரடியாக அமைந்த இராணுவ அணியின் விளையாட்டை தாக்குப்பிடிக்க முடியாத பொலிஸ் அணியானது, இராணுவ அணிக்கு ட்ரை வைப்பதற்கு வழியமைத்துக்கொடுத்தது. இதனால் மாற்று வீரர் அரவிந்த கருணாரத்ன ட்ரை வைத்து இராணுவ அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். சாலிந்த உதையை சிறப்பாக உதைத்து, இராணுவ அணியை 1 புள்ளியால் முன்னிலை அடையச் செய்தார். (இராணுவம் 21 – பொலிஸ் 20)
இராணுவ அணியின் அதிரடிக்கு பின்னர் மீண்டும் முதற் பாதியில் விளையாடிய திட்டத்திற்கு திரும்பிய பொலிஸ் அணியானது, இறுதி சில நிமிடங்களில் சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதி செய்ய போராடியது.
பொலிஸ் அணியின் இப்போராட்டம் பியூயாம் ஜெயசிங்க மூலமாக முடிவுக்கு வந்தது. மாற்று வீரரான ஜெயசிங்க ட்ரை வைத்து பொலிஸ் அணிக்கு முன்னிலையை வழங்கினார். சன்சோனியின் வெற்றிகரமான உதையுடன், இறுதி விசிலுக்கு 10 நிமிடங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் பொலிஸ் அணி 6 புள்ளிகள் முன்னிலையில் காணப்பட்டது. (இராணுவம் 21 – பொலிஸ் 27)
இறுதி 10 நிமிடங்களை அனுபவமிக்க பொலிஸ் அணியானது தாக்குப்பிடிக்க, இறுதியில் சிறப்பான வெற்றியை பொலிஸ் அணி பெற்றுக்கொண்டது.
முழு நேரம் : இராணுவப்படை விளையாட்டு கழகம் 21 – 27 பொலிஸ் விளையாட்டு கழகம்
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – ராஜித சன்சோனி (பொலிஸ் விளையாட்டு கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
பொலிஸ் விளையாட்டு கழகம் – சார்ள்ஸ் பிரவீன் 1T, தனில்ஷ திஸாநாயக்க 1T, பியாயும் ஜெயசிங்க 1T, ராஜித சன்சோனி 3C 2P
இராணுவப்படை விளையாட்டு கழகம் – அசோக ஜெயலால் 1T, மனோஜ் டி சில்வா 1T, அரவிந்த கருணாரத்ன 1T, கயான் சாலிந்த 3C