அனுர டி சில்வா தொடர்பிலான குளறுபடிக்கு தவறான கருத்துப் பரிமாற்றமே காரணம்

357
President-of-the-FFSL-Anura-De-Silva-speaking-at-the-Press-Conference-Dialog-Champions-League-2016

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய தலைவரான அனுர டி சில்வா, சர்வேதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) கூட்டமைப்புக்கள் குழுமத்தில் இருந்து நீக்கப்பட்டதாக ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பேற்றது முதல் அனுர டி சில்வா இக்குழுவின் அங்கத்தவராக செயற்பட்டு வந்தார். அதற்கு முன்னர், 2013-2015 காலப்பகுதியில் அப்போதைய தலைவரான ரஞ்சித் ரொட்ரிகோ குறித்த கூட்டமைப்புக்குள் குழுவில் அங்கம் வகித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த குழுமத்தில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக 23ஆம் திகதி ThePapare.com அவரிடம் வினவிய போது, பின்வரும் கருத்தினை தெரிவித்திருந்தார்.

நான் நீக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் எனக்கு இதுவரை அறிவிக்கவில்லை. சர்வேதேச கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் பல முக்கிய கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில குழுமங்கள் கலைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. நான் நீக்கப்பட்டமைக்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் எனக்கு இது பற்றிய எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை பதவிக்கான தேர்தல் நெருங்கியுள்ளதால், அதன் காரணமாக தனக்கும் சம்மேளனத்திற்கும் எதிராக சிலர் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ஜனவரி 17 ஆம் திகதி சர்வேதேச கால்பந்து சம்மேளனத்தினால் அனைத்து நிலையியற் குழுமங்களின் அங்கத்தவர்களும் அதன் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்படுவதாக மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அனுர டி சில்வா இது சம்பந்தமாக எவ்வித அறிவிப்பையும் பெற்றிருக்கவில்லை.

இதனை தொடர்ந்து தனக்கு 23ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காமை தொடர்பாகவும், ஊடங்கங்கள் மூலமே இவ்விடயம் பற்றி அறிந்ததாகவும் அனுர டி சில்வா சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

தான் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு ஊழல் மற்றும் ஒழுங்கின்மையே காரணம் என தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அது பற்றி விளக்கமளிக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பதிலளித்ததன் பின்னரே, அவர் அறிவிப்பை பெற்றுக் கொள்ளாததன் காரணம் வெளியானது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவுத்தளங்களில் அனுர டி சில்வாவின் பழைய மின்னஞ்சல் முகவரி காணப்பட்டதால், அம்முகவரிக்கே நீக்கம் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.  எனவே, அவர் அது குறித்து அறிந்திருக்கவில்லை.

இவ்வாறு மின்னஞ்சல் முகவரியின் மாற்றம் காரணமாக பல குளறுபடிகள் ஏற்பட்டதுடன் வதந்திகளும் பரப்பப்பட்டிருந்தன. இது தொடர்பாக அனுர டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

எனது நற்பெயரிற்கு கேடு விளைவிக்கும் நோக்குடன் பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் 12 வயது முதல் 35 வயது வரை கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டதுடன், பாடசாலை வீரராக, கனிஷ்ட வீரராக, தேசிய வீரராக மற்றும் தேசிய அணியின் தலைவராகவும் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தியுள்ளேன். நான் நேர்மையாகவே விளையாடியுள்ளேன். அதேபோன்று நேர்மையாகவே கடமையாற்றியுள்ளேன். கால்பந்து வீரராக நான் ஒரு போதும் விதிமுறைகளை மீறியது கிடையாது. அவ்வாறே நிர்வாகத்திலும் நான் தவறான முறையில் செயற்பட்டதில்லை,” என்றார்.