டயலொக் ரக்பி லீக் தொடரின் 12 ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் கடற்படை அணியை சொந்த மைதானத்தில் தோல்வியடையச் செய்து இராணுவப்படை அணி அதிர்ச்சி வெற்றியை சுவீகரித்தது. வெலிசர ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி 30-17 என்ற புள்ளிகள் கணக்கில் நிறைவடைந்ததுடன், இதன் காரணமாக கடற்படை விளையாட்டுக் கழகத்தின் சம்பியன் கனவு கைநழுவிப் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
கடற்படை அணியின் திலின வீரசிங்க தனது உதையின் மூலம் போட்டியை தொடக்கி வைத்தார். விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், இராணுவ அணி தனது முழுமூச்சுடன் தீவிரமான விளையாட்டுப் பாணியை வெளிக்காட்டியிருந்தது.
கடற்படை விளையாட்டுக் கழகம் போட்டியின் ஆரம்பத்தில் விட்ட தவறொன்றை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இராணுவ அணியினர் அஷான் பண்டார ஊடாக தமது முதல் ட்ரையினை பெற்றுக் கொண்டனர். கொன்வெர்சன் உதையை கயான் சாலிந்த இலகுவாக உதைத்தார். (இராணுவ அணி 07 – கடற்படை அணி 00)
இராணுவ அணிக்கு தொடர்ந்து பல ட்ரை வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அவர்கள் அவற்றை தவறவிட்டனர். இதேவேளை எதிர்த்தாக்குதல் நடத்திய கடற்படை வீரர்கள் சென்டர் நிலை வீரர் கோசல திசேரா மூலமாக ட்ரை வைத்து தமது புள்ளிக் கணக்கை ஆரம்பித்தனர். திலின வீரசிங்க கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளை சமனாக்கினார். (இராணுவ அணி 07 – கடற்படை அணி 07)
சில நிமிடங்களின் பின்னர் இராணுவ அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்ததுடன், அதனை கம்பத்தை நோக்கி உதைக்க அவ்வணி முடிவு செய்தது. கயான் சாலிந்த குறிதவறாது உதைத்து தனது அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். (இராணுவ அணி 10 – கடற்படை அணி 07)
அடுத்து சில நிமிடங்களின் போது இரண்டு அணியின் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது திறமையை வெளிக்காட்டிய போதிலும் இரண்டு அணிகளாலும் ட்ரை ஒன்றை பெற்றுக் கொள்ள இயலவில்லை. கடற்படை வீரர் தினேஷ் டி சில்வாவின் உதையை சிறப்பாக தடுத்த இராணுவ வீரர் உபுல் அபேரத்ன, பந்தை துரத்திப் பிடித்து கம்பங்களுக்கு அடியில் ட்ரை வைத்தார். இலகுவான உதையை திலின வீரசிங்க வெற்றிகரமாக உதைத்தார். (இராணுவ அணி 17 – கடற்படை அணி 07)
முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் தமது புல் பாக் (Full Back) வீரர்களான கயான் சாலிந்த மற்றும் திலின வீரசிங்க மூலமாக ஒவ்வொரு பெனால்டி உதைகளை வெற்றிகரமாக உதைத்து மூன்று புள்ளிகள் வீதம் பெற்றுக் கொண்டன. இதன்படி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய விதத்தில் இராணுவ அணி முதல் பாதியை முன்னிலையில் நிறைவு செய்தது. (இராணுவ அணி 20 – கடற்படை அணி 10)
முதல் பாதி: இராணுவப்படை விளையாட்டு கழகம் 20 – கடற்படை விளையாட்டு கழகம் 10
லீக் சம்பியன் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள போட்டியை வெற்றிகொள்ள வேண்டிய நெருக்கடியான நிலையில் கடற்படை அணி இரண்டாம் பாதியை ஆரம்பித்தது. எனினும் கடற்படை வீரர்களுக்கு பலத்த அழுத்தத்தை வழங்கிய இராணுவ வீரர்கள் எதிரணிக்கு நிகரான ஆட்டத்தை வெளிக்காட்டினர்.
சில நிமிடங்கள் கடந்த பின் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் சமீர சூரியாரச்சி விதிமுறை மீறியதன் காரணமாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனை தமக்கு சாதகமாக்கிக் கொண்ட கடற்படை அணி சாரங்க புஷ்பகுமார மூலம் கம்பங்களுக்கு அருகாமையில் ட்ரை வைத்தது. திலின வீரசிங்க குறிதவறாது உதைக்க, புள்ளி வித்தியாசம் குறைந்தது. (இராணுவ அணி 20 – கடற்படை அணி 17)
இதனை தொடர்ந்து இரு அணிகளும் சில தவறுகளை விட்டதன் காரணமாக பந்தினை தமது கையிருப்பில் வைத்திருக்க தவறின. இதன் காரணமாக இரண்டு அணிகளாலும் தங்களது புள்ளிகளை அதிகரிக்க முடியவில்லை. இந்நிலையில் இராணுவ அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்ததுடன், கயான் சாலிந்த அதை புள்ளிகளாக மாற்றினார். (இராணுவ அணி 23 – கடற்படை அணி 17)
இறுதி நிமிடங்களில் கடற்படை வீரர்கள் ட்ரை ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சி செய்த போதிலும், அடுத்தடுத்து மோசமான பந்து கைமாற்றல்களினால் அவ்வணிக்கு எதிரணியின் ட்ரை கோட்டை நோக்கி முன்னேற இயலவில்லை. இதேவேளை கடற்படை வீரர் ஒருவரின் கைமாற்றலை லாவகமாக இடைமறித்த மதுஷான் சந்திரசேகர, ட்ரை வைத்து இராணுவ அணியின் அதிர்ச்சி வெற்றியை உறுதி செய்தார். அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது. (இராணுவ அணி 30 – கடற்படை அணி – 17)
முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டு கழகம் 30 – கடற்படை விளையாட்டு கழகம் 17
இத்தோல்வியுடன் லீக் சம்பியன் பட்டத்திற்கான மும்முனை போட்டியிலிருந்து கடற்படை அணி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மற்றைய போட்டியில் ஹெவலொக் அணி வெற்றி பெற்றதனை அடுத்து, எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஹெவலொக் மற்றும் கண்டி கழக அணிகளுக்கு இடையிலான போட்டி லீக் சம்பியன் யாரென்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – அஷோக ஜயலால் (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)
புள்ளிகளைப் பெற்றோர்
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 30
ட்ரை – அஷான் பண்டார 1, உபுல் அபேரத்ன 1, மதுஷான் சந்திரசேகர 1
கொன்வர்சன் – கயான் சாலிந்த 3
பெனால்டி – கயான் சாலிந்த 3கடற்படை விளையாட்டுக் கழகம் – 17
ட்ரை – கோசல திசேரா 1, சாரங்க புஷ்பகுமார 1
கொன்வர்சன் – திலின வீரசிங்க 2
பெனால்டி – திலின வீரசிங்க 1