நிக்கின் உதவியுடன் சர்வதேச தரத்துக்கு உயரவுள்ள இலங்கையின் டென்னிஸ்

282
Tennis coach Nick Bollettieri

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த உலக தரம் வாய்ந்த டென்னிஸ் பயிற்றுவிப்பாளரும் விளையாட்டு ஆலோசகருமான நிக் பொல்லிட்டியரி, தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளை நாட்டிலுள்ள வளர்ந்து வரும் டென்னிஸ் வீரர்களுக்கு வழங்கி, தன்னுடைய பயிற்சிக் கூடத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் தேசிய மட்டத்தில் டென்னிஸ் விளையாட்டை அபிவிருத்தி செய்ய உதவுவதாகத் தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் தனித்துவமிக்க டென்னிஸ் பயிற்சியாளராக விளங்கும் நிக் பொல்லிட்டியரி, உலக டென்னிஸ் அரங்கில் தரம் வாய்ந்த மற்றும் சாதனைகள் படைத்த பல சர்வதேச டென்னிஸ் வீரர்களுக்கு பயிற்சி அளித்தவராவார். அமெரிக்காவின் ப்ளோரிடா  மாநிலத்திலிருந்து இலங்கை வந்த 85 வயதான நிக் போல்லட்டியரிடம்  கடந்த காலத்தில் அன்ட்ரே அகாசி, போரிஸ் பெக்கர் மற்றும் மரியா ஷரபோவா போன்ற உலக புகழ் பெற்ற டென்னிஸ் வீர வீராங்கனைகள்  தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்றுள்ளனர்.

குயின்ஸ் டென்னிஸ் கழக அமைப்பாளர் அசன்க செனவிரத்னவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த நிக், இங்குள்ள பயிற்சி ஒழுங்கு முறைகளை கண்டு வியப்படைந்தார். அத்துடன், பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த இளம் வீரர்களின் திறமைகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் விருத்தி செய்யும் வழிமுறைகளை விளக்கினார்.

இத்தாலியில் பிறந்த நிக், குழந்தை பருவத்தில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். தனித்துவம் மிக்க முறையில் பயிற்சியளிக்கும் இவருக்கென்ற தனிப்பட்ட சட்ட திட்ட வரையறைகள் உள்ளன. அத்துடன் உலக தரமிக்க நவீன வசதிகளுடன் கூடிய IMG என்றழைக்கபடும் பயிற்சி கூடத்தில், நிக் உள்ளடங்கலாக சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சியாளர்களினால் சேவைகளை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கை வந்த அவர், ஊடகவியாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இங்கு நிறைய திறமைகள் காணப்படுகின்றன. எனவே சரியான விதத்தில் பயிற்சி முறையை கட்டமைக்க ஆர்வமாய் இருகிகின்றேன்” என்று தெரிவித்தார்.

குறித்த திட்டம்  நன்றாக நடைபெற்றால், வருடத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகள் நான் இங்கு வருவேன். என்னுடைய உதவியாளர்கள் இங்கு வந்தோ அல்லது வீடியோக் காட்சிகள் மூலமோ பயிற்சிகளை நடத்துவார்கள்.

இங்கு பயிற்சிகளை செய்துகொண்டிருந்த வேளை, 7வயதான இரு சிறுவர்களைக் கண்டேன். அவர்கள் விளையாடிய விதம் அவர்களுடைய வயது மட்டத்துக்கு உலக தரத்துக்குகேற்ப 99% தகுதியைப் கொண்டிருந்தது.

மேலும் கருத்து தெரிவித்த முத்த பயிற்சியாளர் நிக், டென்னிஸ் விளையாட்டு அபிவிருத்திடைய வேண்டுமென்றால் முறையான ஒரு வழிமுறை இருக்க வேண்டுமென்றும் வலியுறித்தினார்.

ரோம் நகரம் ஒரு நாளில் உருவாக்கப்படவில்லை. அதே போன்றே நீண்டதொரு திட்டம் வரையறுக்கப்பட வேண்டும். நாங்கள் முன்செல்ல வேண்டுமென்றால் அதற்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.  

பயிற்சிகளை ஆரம்பிக்கும் முகமாக முதலில் இங்கிருக்கும் சில பயிற்சியாளர்கள்,  நாங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பயிற்சி அளிக்கலாம் என்றார்.

நாட்டிலுள்ள பயிற்சி வழிமுறைகளை வலுப்படுத்தி, டென்னிஸ் விளையாட்டு தரத்தினை உயர்த்துவதற்காக இலங்கை ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.