இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணிகள் மோதிக்கொள்ளும் முக்கோண ஒருநாள் தொடரின், இன்றைய போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் முழுப்பலத்தையும் வெளிக்காட்டிய இலங்கை கனிஷ்ட அணி, ஜிம்பாப்வே அணியை இத்தொடரில் அதிகுறைவான ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தி 240 ஓட்டங்களால் அபார வெற்றியினை பெற்றுள்ளதுடன் இந்த முக்கோண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்கின்றது.

ஸ்டெல்லன்போஸ்ச் பல்கலைக்கழகமைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டி, மழை காரணமாக சற்று தாமதமாகவே ஆரம்பமாகியிருந்ததுடன், 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாட ஆரம்பித்த இலங்கை கனிஷ்ட அணி தமது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாந்து, விஷ்வ சத்துரங்க  ஆகியோருடன் போட்டியினை தொடங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஜிம்பாப்வே கனிஷ்ட அணியினால் போடப்பட்ட பந்துகளை எல்லைகளை நோக்கி விரட்டியதுடன், முதல் விக்கெட்டுக்காக 191 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட்டாக பறிபோன, இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து 90 பந்துகளினை சந்தித்து ஒரு சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகள் உள்ளடங்களாக 108 ஓட்டங்களினை விளாசியிருந்தார். பின்னர், மறுமுனையில் சதம் கடந்து சிறப்பாக செயற்பட்டிருந்த விஷ்வ சத்துரங்க, இலங்கை கனிஷ்ட அணி 229 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். இதன் போது விஷ்வ சத்துரங்க 101 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்ளடங்களாக 103 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இதனையடுத்து, துடுப்பாட வந்த இலங்கை கனிஷ்ட அணியின் மத்திய மரிசை வீரர்களான கமிந்து மெண்டிஸ், சம்மு அஷான் ஆகியோர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும், மூன்றாவது துடுப்பாட்ட வீரராக வந்திருந்த, KSW ஆராச்சிகே பெற்றுக்கொண்ட அதிரடி அரைச்சதத்துடன் (58) இலங்கை கனிஷ்ட அணி 45 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 303 குவித்துக்கொண்டது.

ஜிம்பாப்வே கனிஷ்ட அணியின் பந்து வீச்சில் ஏனைய பந்து வீச்சாளர்கள் இலங்கை துடுப்பாட்ட வீரர்களிற்கு ஓட்டங்களினை வாரி வழங்கிய வேளையில், ஓரளவு சிறப்பாக செயற்பட்டிருந்த அவ்வணியின் ஜேய்டன் ஸ்கென்டோர்ப் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 50 ஓவர்களில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 304 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே கனிஷ்ட அணியின் முதல் விக்கெட் முதல் ஓவரிலேயே ரஷ்மிக்க தில்ஷானின் பந்து வீச்சு மூலம் பறிக்கப்பட்டது. இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜேய்டன் ஸ்கென்டோர்ப் ஓட்டம் எதுவும் பெறாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, அவ்வணியின் இரண்டாவது விக்கெட்டும் அடுத்த ஓவரில் மனேல்கர் டி சில்வாவின் பந்து வீச்சில் பறிபோனது. இதனால், தடுமாற தொடங்கிய ஜிம்பாப்வே கனிஷ்ட அணியின் நிலையறிந்து அதனை புத்தி சாதுர்யமாக எதிர்கொண்ட இலங்கை தமது பந்து வீச்சாளர்களை உபயோகித்து எதிரணியை   மடக்கத்தொடங்கியது. புதிதாக வந்த துடுப்பாட்ட வீரர்களில் இரண்டு வீரர்களை தவிர ஏனைய அனைவரும் 10 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர். இதனால், 19.3 ஓவர்களில் ஜிம்பாப்வே கனிஷ்ட அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு மேலதிக 240 ஓட்டங்களினால் இலங்கையிடம் படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், ஜிம்பாப்வே கனிஷ்ட அணி சார்பாக ஜூலியன் நென்ஹுன்ஸி மாத்திரம் அதிகபட்சமாக 11 ஓட்டங்களை பெற்ற இந்த வேளையில், பந்து வீச்சில் ஜிம்பாப்வே கனிஷ்ட அணியை நிலைகுலைய வைத்திருந்த இலங்கையின் மனேல்கர் டி சில்வா 24 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, பிரவின் ஜயவிக்ரம, ஹரீன் புத்தில, மிஷான் சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியில், தோல்வியடைந்ததன் காரணமாக இந்த முக்கோண தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை ஜிம்பாப்வே கனிஷ்ட அணி முழுமையாக இழந்துள்ளது.

இத்தொடரில், அடுத்ததாக இலங்கை கனிஷ்ட அணி விளையாடும் போட்டி தென்னாபிரிக்க கனிஷ்ட அணியுடன் எதிர்வரும் வியாழக்கிழமை(26) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி: 303/6 (45) – அவிஷ்க பெர்னாந்து 108(90), விஷ்வ சத்துரங்க 103(101), KSW ஆராச்சிகே 58(52), ஜேய்டன் ஸ்கென்டோர்ப் 50/2(9)

ஜிம்பாப்வே கனிஷ்ட அணி: 63 (19.3) – ஜூலியன் நென்ஹூன்ஸி 11(18), மனேல்கர் டி சில்வா 24/3(6), பிரவீன் ஜயவிக்ரம 2/2(2), மிஷான் சில்வா 10/2(3.3), ஹரீன் புத்தில 15/2(4)

போட்டி முடிவு – இலங்கை கனிஷ்ட அணி 240 ஓட்டங்களால் வெற்றி