தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை அணி

3240
South Africa v Sri Lanka, 2nd T20I, Johannesburg Tamil

ஜோகனஸ்பேர்க், நியூ வாண்டரஸ் மைதானத்தில்ந டைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான விறுவிறுப்பான இரண்டாவது T20 போட்டியில், இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை மூன்று விக்கெட்டுகளால் தோற்கடித்து 3 போட்டிகளை கொண்ட T20 தொடரை 1-1 அடிப்படையில் சமப்படுத்தி தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைத்தது.

தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தில், கடந்த ஒரு மாத காலமாக தென்னாபிரிக்க மண்ணில் வெற்றிக்காக போராடிய இலங்கை அணி, இறுதியாக தென்னாபிரிக்க அணியை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே, மூன்றாவது குறைந்த பட்ச ஓட்டங்களுக்கு வீழ்த்தி வெற்றியீட்டியது.

குறித்த போட்டிக்காக களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில், எவ்விதமான மாற்றங்ககளும் செய்யப்படவில்லை. அதேநேரம் இலங்கை அணி சார்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அறிமுக வீரராக லக்ஷான் சந்தகன் மற்றும் இசுறு உதான ஆகியோர், காயமடைந்த நுவன் பிரதீப் மற்றும் இந்தப்  போட்டிக்காக ஓய்வளிக்கப்பட்ட சுரங்க லக்மாலுக்கு பதிலாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதலாவது விக்கெட்டினை ஜோன்–ஜோன் ஸ்மட்ஸ் 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது நுவன் குலசேகரவின் பந்து வீச்சில் போட்டியின் அறிமுக வீரர் சந்தகனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்க இலங்கை சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க அணியை கட்டுப்படுத்திய இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 68 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்திருந்தது. அத்தோடு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்திய இலங்கை அணி, 19.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென்னாபிரிக்க அணியை 113 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய லக்‌ஷான் சந்தகன் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அறிமுக போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டினை வீழ்த்திய 15ஆவது வீரராக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்தார். அதே நேரம் அணிக்கு மீண்டும் திரும்பியிருந்த இசுறு உதான இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி சார்பாக 15 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 22 ஓட்டங்களை விளாசி நிரோஷன் திக்வெல்ல சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதிலும் தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மென்டிஸ் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் அதிரடி காட்டிய லுங்கி நிகிடி முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனினும் அதனை தொடர்ந்து களமிறங்கிய அனுபவமிக்க தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களை பகிர்ந்து, ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர்.

ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயன்ற தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களை பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக லுங்கி நிகிடியின் நான்காவது விக்கெட்டாக இரையானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அசேல குணரத்ன வந்த வேகத்திலேயே இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பானது.

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிய அதிக அழுத்தத்தை எதிர்கொண்ட சீகுகே பிரசன்ன மற்றும் தனது இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய திக்ஷீல டி சில்வா முறையே 2 மற்றும் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதேநேரம் வேகமாக ஓட்டங்களை குவிக்க முயன்ற போது எஞ்சலோ மெத்திவ்ஸ் தசை பிடிப்புக்கு ஆளானார். இதன் காரணமாக ஓடுவதற்கு அவதிப்பட்ட எஞ்சலோ மெத்திவ்சுக்கு இறுதி ஓவரில் 7 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது.

இறுதி ஓவரில் முதலாவது பந்தில் ஓட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்த நிலையில், குறித்த ஓட்டத்தை நிராகரித்த அஞ்செலோ மெதிவ்ஸ் இரண்டாவது மற்றும் நான்காவது பந்துகளில் அதிரடியாக இரண்டு சிக்சர்களை விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

தற்பொழுது தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்