துடுப்பாட்டத்தில் பிரகாசித்த திமுத் கருணாரத்ன மற்றும் கித்ருவன் விதானகே

425
SLC Premier League 2016/17

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஏழு போட்டிகள் இன்று ஆரம்பமாகின. முதற் சுற்றின் நிறைவில் தத்தமது குழுக்களில் முதல் நான்கு இடங்களை பெற்று, சுப்பர் 8 இற்கு தெரிவான அணிகளுக்கிடையில் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகத்தின் அணித்தலைவர் கித்ருவன் விதானகே 130 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மனோஜ் சரத்சந்திர 63 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி தமிழ் யூனியன் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 87.3 ஓவர்களில் 377 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க 4 விக்கெட்டுகளையும் லஹிரு கமகே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 377 (87.3) – கித்ருவன் விதானகே 130, மனோஜ் சரத்சந்திர 63, சாமிக கருணாரத்ன 50, ஜீவன் மெண்டிஸ் 40, லஹிரு மதுஷங்க 4/77, லஹிரு கமகே 3/83


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

பிரபல SSC அணி மற்றும் கோல்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 80 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றிருந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இலங்கை தேசிய அணி வீரர்களான திமுத் கருணாரத்ன 125 ஓட்டங்களையும் தசுன் ஷானக 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பில் பந்து வீச்சில் மற்றுமொரு தேசிய அணி வீரரான தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 275/7 (80) – திமுத் கருணாரத்ன 125, தசுன் ஷானக 59, கவிந்து குலசேகர 38*, தில்ருவன் பெரேரா 4/70


NCC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராகம அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சதுரங்க டி சில்வா (83) மற்றும் எஞ்சலோ பெரேரா (59) ஆகியோரின் சிறப்பான பங்களிப்புக்கள் அணியை வலுப்படுத்திய போதிலும், சதுர பீரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த NCC கழகம் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

எனினும் பந்துவீச்சில் ராகம கிரிக்கெட் கழகத்தை துவம்சம் செய்த NCC அணியினர் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர். பர்வீஸ் மஹ்ரூப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 265 (62) – சதுரங்க டி சில்வா 83, எஞ்சலோ பெரேரா 59, சதுர பீரிஸ் 4/60

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 43/6 (21) – பர்வீஸ் மஹ்ரூப் 3/14


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

மஹேல உடவத்த மற்றும் அஷென் சில்வா ஆகியோர் தலா 52 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்ட போதிலும், இராணுவ அணியின் தனுசிக பண்டார (5/36) மற்றும் நளின் பிரியதர்ஷன (4/61) தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பங்கிட்டுக் கொள்ள, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 190 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து ஆடுகளம் பிரவேசித்த இராணுவ விளையாட்டுக் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (61.2) – மஹேல உடவத்த 52,  அஷென் சில்வா 52, தனுசிக பண்டார 5/36, நளின் பிரியதர்ஷன 4/61

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 65/4 (27) – அரோஷ் ஜனோத 2/9

சுப்பர் 8 சுற்றிற்கு தகுதி பெறத் தவறிய அணிகள் தட்டு பிரிவில் (Plate) போட்டியிடுகின்றன. அப்பிரிவின் 3 போட்டிகளும் இன்று ஆரம்பமாகின.


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இப்போட்டி BRC மைதானத்தில் ஆரம்பமானதுடன், நாணய சுழற்சியில் வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஹன் விஜேரத்ன சதம் கடந்த நிலையில் 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மற்றைய வீரர்களில் ஒருவரேனும் 40 ஓட்டங்களைக் கடக்காத காரணத்தினால் பதுரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 88.1 ஓவர்களில் 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சோனகர் விளையாட்டுக் கழகத்தின் நிலங்க சந்தகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இன்றைய தினத்திற்கான ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 300 (88.1) – சஹன் விஜேரத்ன 102, சாலிய சமன் 38, நிலங்க சந்தகன் 5/52


BRC கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

BRC கழகம் மற்றும் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டி பனாகொட இராணுவப்படை மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர் நிசல் பிரான்சிஸ்கோ 79 ஓட்டங்களை குவித்ததுடன், அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 98 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்படி அவ்வணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்துவீச்சில் அசத்திய BRC அணியின் தினுக ஹெட்டியாரச்சி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 290/8 (92) – நிபுன் கருணாநாயக்க 98, நிசல் பிரான்சிஸ்கோ 79, தினுக ஹெட்டியாரச்சி 5/95


காலி கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி புளூம்பீல்ட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அவ்வணியின் மின்ஹாஜ் ஜலீல் மற்றும் தமித ஹுனுகும்புர முதல் விக்கெட்டிற்காக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். தமித ஹுனுகும்புர 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தவிர அணித்தலைவர் நிலூஷன் நோனிஸ் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் காரணமாக காலி கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 301 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட கசுன் ராஜித 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், சதுர ரந்துனு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து களமிங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்றைய தினம் ஒரு ஓவரை மாத்திரமே முகம் கொடுத்து விக்கெட் இழப்பேதுமின்றி ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 301 (86.3) – தமித ஹுனுகும்புர 97, நிலூஷன் நோனிஸ் 65, மின்ஹாஜ் ஜலீல் 40, கசுன் ராஜித 5/57, சதுர ரந்துனு 3/85

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 0/0 (1)

நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.