டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் ஹெவலொக் அணியானது இவ்வருடத்தில் தமது 9ஆவது வெற்றியை, இராணுவ அணியை 29-17 என்று புள்ளிகள் அடிப்படையில் வென்றதன் மூலம் பதிவு செய்துகொண்டது. ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் போனஸ் புள்ளியுடன் ஹெவலொக் அணியானது வெற்றிபெற்றது.
போட்டி ஆரம்பித்ததிலிருந்து இராணுவப்படை அணியானது அழுத்தத்தை கொடுத்து வந்தது. எனினும் அதிரடியாக தமது 5 மீட்டர் எல்லையில் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட சாமர தாபரே, சில மீட்டர்கள் கடந்து சென்று, உதைந்துவிட்டு பந்தை துரத்தினார். ஹெவலொக் அணியின் கெவின் டிக்சன் பந்தை ஓடி சென்று கைப்பற்றி முதலாவது ட்ரையை ஹெவலொக் அணி சார்பாக வைத்தார். எனினும் துலாஜ் பெரேரா உதையை தவறவிட்டார். (இராணுவப்படை அணி 00 – ஹெவலொக் அணி 05)
சில நிமிடங்களின் பின்னர் ஹெவலொக் அணியின் நிஷோன் பெரேரா தமது அணிக்கு 2ஆவது ட்ரையை வைத்தார். முன்னைய ட்ரை போன்றே இந்த ட்ரையும் அமைந்தது. பெரேரா 4 இராணுவ வீரர்களை தாண்டி 80 மீட்டர்கள் ஓடி சென்று ட்ரை வைத்து அசத்தினார். துலாஜ் பெரேரா உதையை தவறவிட்டார். (இராணுவப்படை 00 – ஹெவலொக் 10)
புள்ளிகளை பெறுவதற்கு போராடிய இராணுவ அணியானது தமது பலம் மிக்க ப்ரொப் நிலை வீரரான அசோக ஜெயலால் மூலமாக முதலாவது ட்ரையை வைத்தது. சலிந்த வெற்றிகரமாக உதைத்தார். (இராணுவப்படை 07 – ஹெவலொக் 10)
பந்தை நன்றாக தூர பரிமாறி விளையாடிய ஹெவலொக் அணியானது, அதன் பயனாக மீண்டும் ஒரு ட்ரை வைத்தது. நிஷோன் மீண்டும் ஒரு முறை இராணுவ வீரர்களை கடந்து ராகுல் டி சில்வாவிற்கு பந்தை பரிமாறினார். அவர் பந்தை சாமர தாபரேவிற்கு பந்தை வழங்கிய பின்னர், தாபரே தனது வேகமான ஓட்டத்தின் மூலம் ட்ரை வைத்தார். இம்முறை துலாஜ் பெரேரா உதையை தவறவிடவில்லை. (இராணுவப்படை 07 – ஹெவலொக் 17)
முதற் பாதி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும் நேரத்தில், ஹெவலொக் அணியின் தலைவர் துஷ்மந்த பிரியதர்ஷன மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
முதற் பாதி: இராணுவப்படை விளையாட்டு கழகம் 07 – ஹெவலொக் விளையாட்டு கழகம் 17
இரண்டாம் பாதியில் முதல் ட்ரையை ஹெவலொக் அணி வைத்தது. ஹெவலொக் அணியின் 8ஆம் இலக்க வீரரான சுதர்ஷன முத்ததந்திரி பந்தை சிறப்பாக பரிமாற, தாபரே ட்ரை வைத்தார். பெரேரா உதையை வெற்றிகரமாக உதைத்தார். (இராணுவப்படை 07 – ஹெவலொக் 24)
விட்டுக்கொடுக்காமல் போராடிய இராணுவப்படை அணியானது ட்ரை ஒன்றை பெற்றுகொண்டது. எசார தனுஷ்க ரோலிங் மோல் மூலமாக ட்ரை வைத்தார். சாலிந்த உதையை தவறவிட்டார். (இராணுவப்படை 12 – ஹெவலொக் 24)
ஜேசன் மெல்டர் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் ஹெவலொக் அணி 14 வீரர்களுடன் களத்தில் விளையாடியது.
இராணுவ அணியானது ஹெவலொக் அணிக்கு பாரிய அழுத்தம் கொடுத்து வந்தது. துலாஜ் பெரேரா மற்றும் கெவின் டிக்சனின் உதையை தடுக்க முயற்சி செய்த இராணுவ அணியானது அதில் வெற்றிகண்டு, தமது விங் நிலை வீரர் இரங்க ஆரியபால ஊடக ட்ரை வைத்தது. பலத்த காற்றின் காரணமாக சாலிந்த உதையை தவறவிட்டார். (இராணுவப்படை 17 – ஹெவலொக் 24)
போட்டியின் அழுத்தத்தை சிறப்பாக கையாண்ட ஹெவலொக் அணியானது மேலும் ஒரு ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தை அதிகரித்தது. ஹிரந்த பெரேரா பந்தை பெற்றுக்கொண்டு நிஷோன் பெரேராவிற்கு பந்தை வழங்கிய பின்னர், நிஷோன் ட்ரை வைத்தார். உதையை துலாஜ் பெரேரா தவறவிட்டார்.
முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டு கழகம் 17 – ஹெவலொக் விளையாட்டு கழகம் 29
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – நிஷோன் பெரேரா (ஹெவலொக்)
புள்ளிகள் பெற்றோர்
இராணுவப்படை விளையாட்டு கழகம்
ட்ரை – ஏஷார தனுஷ்க, அசோகா ஜெயலால், இரங்க ஆரியபால
கொன்வெர்சன் – கயான் சாலிந்த
ஹெவலொக் விளையாட்டு கழகம்
ட்ரை – நிஷான் பெரேரா 2, சாமர தாபரே 2, கெவின் டிக்சன்
கொன்வெர்சன் – துலாஜ் பெரேரா