துவிந்து திலகரத்னவின் அபார பந்து வீச்சினால் பதுரேலிய அணி முன்னிலையில்

306
SLC Premier League - Tier 'A' Roundup (11th of Janu)

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டியொன்று இன்று ஆரம்பமானது.

பிரபல NCC மற்றும் பதுரேலிய விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டியின் முதல் நாள் நிறைவில், பதுரேலிய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

சர்ரே விலேஜ் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமானதுடன், நாணய சுழற்சியில் வென்ற பதுரேலிய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அலங்கார அசங்க எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.

தனது மூன்றாவது போட்டியில் விளையாடி வரும் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான துவிந்து திலகரத்ன அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை பதம்பார்க்க, NCC அணி 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மேலும், துடுப்பாட்டத்தில் பவன் விக்ரமசிங்க 42 ஓட்டங்களையும், திமிர ஜயசிங்க 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அலங்கார அசங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பதுரேலிய விளையாட்டுக் கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது 3 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெஹான் பெர்னாண்டோ 82 பந்துகளில் 6 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 85 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். நதீர நாவல ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 185 (44.4) – பவன் விக்ரமசிங்க 42, திமிர ஜயசிங்க 41, துவிந்து திலகரத்ன 6/78, அலங்கார அசங்க 3/41

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 187/3 (43) – ஷெஹான் பெர்னாண்டோ 85, நதீர நாவல 48*, சதுரங்க டி சில்வா 2/69