விமானப்படையை வீழ்த்தியது கடற்படை

278
Air Force SC v Navy SC

டயலொக் ரக்பி லீக்கில் விமானப்படை  அணியை வெளிசர   மைதானத்தில் சந்தித்த கடற்படை அணியானது 29-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று தரவரிசையில் 2ஆம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

கடற்படை அணியானது தமது பிரபல வீரரான லீ கீகள் இல்லாமல் இப்போட்டியில் விளையாடியது. லீ கீகள் காயம் காரணமாக விளையாடாத அதே வேளையில் விங் நிலை வீரர் சாலிய ஹந்தப்பன்கொடவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

விமானப்படை அணியானது இப்போட்டியில் 5 மாற்றங்களுடன் விளையாடியது. 4 முன் வரிசை வீரர்கள் மற்றும் சரித் செனவிரத்ன இப்போட்டியில் விளையாடவில்லை.

போட்டி ஆரம்பித்து 2ஆவது நிமிடத்தில் விமானப்படை அணியானது ட்ரை வைத்து கடற்படை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. கடற்படை அணி விங் நிலை வீரர் மேல் உதையப்பட்ட பந்தை சரியாக பிடிக்க தவறியதால், பந்தை பெற்றுக்கொண்ட விமானப்படை அணியை சேர்ந்த இத்தமல்கொட விமானப்படை அணி சார்பாக ட்ரை வைத்தார். ருமேஷ் ராமதாஸ் உதையை தவறவிட்டார். (கடற்படை 00 – விமானப்படை 05)

மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பை பெற்றுக்கொண்ட விமானப்பாடை அணியானது அதனை பயன்படுத்தி வெற்றிகரமாக கம்பத்தின் ஊடாக உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (கடற்படை 00 – விமானப்படை 08)

பின்னர் அதிரடியாக தாக்கிய கடற்படையானது தொடர்ந்து 2 ட்ரைகளை வைத்து அசத்தியது. விமானபப்டை அணியின் 22 மீட்டர் எல்லையினுள் நுழைந்த இரு தருணங்களிலும் ரோலிங் மோல் மூலமாக சாணக சந்திமால் ட்ரை வைத்தார். திலின இரு சந்தர்ப்பங்களிலும் உதையை வெற்றிகரமாக உதைத்தார். இதனால் போட்டியில் முதன் முறையாக கடற்படை அணியானது முன்னிலை பெற்றது. (கடற்படை 14 – விமானப்படை 08)

முதற் பாதி முடிவடைய முன்னர் இரு அணிகளும் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலமாக தலா 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

முதற் பாதி : (கடற்படை விளையாட்டு கழகம் 17 – விமானப்படை விளையாட்டு கழகம் 11)

இரண்டாம் பாதியில் முதல் புள்ளியை கடற்படை அணியானது  பெற்றுக்கொண்டது. ஸ்க்ரம் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட கடற்படை அணி வீரர்கள் பந்தை அற்புதமாக பரிமாறி இறுதியாக கோசல திசேரவிற்கு கொடுக்க, திசேர கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். திலின உதையை தவறவிடவில்லை. (கடற்படை 24 – விமானப்படை 11)

கோசல திசேராவிற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட, ருமேஷ் ராமதாஸ் அதை பயன்படுத்தி வெற்றிகரமாக உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (கடற்படை 24 – விமானப்படை 14)

எனினும் போட்டியை விட்டுக்கொடுக்காத கடற்படை மேலும் ஒரு ட்ரை வைத்தது. இம்முறை துலாஞ்சன பெரேரா கடற்படை அணி சார்பாக மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்து கடற்படை அணியின் வெற்றியை உறுதி செய்தார். திலின கடினமான உதையை தவறவிட்டார். (கடற்படை 29 – விமானப்படை 14)

கடற்படை அணியின் மற்றுமொரு வீரரான காஞ்சன பெரேரா நடுவருடன் வாக்குவாதம் புரிந்ததால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் எஞ்சி இருக்கும் வேளையில் ஸ்க்ரம் ஹாப் நிலை வீரர் இசுறு ஜயரத்ன விமானப்படை அணி சார்பாக ஆறுதல் ட்ரை ஒன்று வைத்தார். ருமேஷ் ராமதாஸ் வெற்றிகரமாக உதைத்த பொழுதும் விமானப்படை அணியால் கடற்படை அணியை வெல்ல முடியவில்லை .

முழு நேரம்  :  கடற்படை விளையாட்டு கழகம் 29 – விமானப்படை விளையாட்டு கழகம் 21

Thepapare.com போட்டியின் சிறந்த வீரர் – சாணக சந்திமால் (கடற்படை)

சாணக சந்திமால் நம்மிடம் கருது தெரிவித்த பொழுது “முதலில் சிறப்பாக விளையாடியதற்காக எனது அணி வீரர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆனாலும் நாங்கள் சில தவறுகளை மேற்கொண்டு பெனால்டி வாய்ப்புகளை வழங்கினோம். நான் விளையாடிய விதம் எனக்கு திருப்தி அளிக்கின்ற பொழுதும், அடுத்த போட்டியில் கண்டி கழகத்தை வெல்ல வேண்டுமாயின் நான் எனது உதையை சிறப்பாக உதைக்க வேண்டும். மேலும் நாங்கள் அடுத்த போட்டியில் கண்டி அணியை வெல்வதற்கு கடினமாக பயிற்சி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

புள்ளிகள் பெற்றோர்

கடற்படை விளையாட்டு கழகம்

ட்ரை  –  சாணக சந்திமால் 2 , கோசல திசேர, துலாஞ்சன விஜேசிங்க

கொன்வெர்சன் – திலின வீரசிங்க 3

பெனால்டி – திலின வீரசிங்க 1

விமானப்படை விளையாட்டு கழகம்

ட்ரை  – கயந்த இத்தமல்கொட , இசுரு ஜயரத்ன

கொன்வெர்சன் – ருமேஷ் ராமதாஸ்

பெனால்டி –  ருமேஷ் ராமதாஸ் 3