இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஆறு போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றன.
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்
முதல் நாள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களை குவித்திருந்த கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 560 என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது. நேற்றைய தினம் 103 ஓட்டங்களுடன் களத்திலிருந்த லசித் அபேரத்ன ஆட்டமிழக்காது 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
கீழ்வரிசை வீரர் லக்ஷான் சந்தகன் அணிக்கு 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதேவேளை நேற்றைய தினம் அஷான் பிரியஞ்சன் 124 ஓட்டங்களையும் மாதவ வர்ணபுர 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். பந்து வீச்சில் சந்தன சமரசிங்க மற்றும் திலான் துஷார 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய சோனகர் விளையாட்டுக் கழகம், இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையிலுள்ளது. நிலங்க சந்தகன் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்திலுள்ளார்.
மற்றுமொரு கீழ்வரிசை வீரரான திலான் துஷார அதிரடியாக 25 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் டில்ஷான் முனவீர 3 விக்கெட்டுகளை பெற்றிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 560 (116.4) – லசித் அபேரத்ன 156*, அஷான் பிரியஞ்சன் 124, லக்ஷான் சந்தகன் 64, மாதவ வர்னபுர 50, வனிது ஹசரங்க 47, திலான் துஷார 3/82, சந்தன சமரசிங்க 3/135
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 257/8 (62) – நிலங்க சந்தகன் 58, திலான் துஷார 46, தரிந்து மெண்டிஸ் 41, டில்ஷான் முனவீர 3/26
இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
எதிரணியின் 297 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் நேற்றைய தினம் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது.
இன்றைய தினமும் ஒன்றன் பின் ஒன்றாக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால், அவ்வணி 112 ஓட்டங்களுக்கே சுருண்டது. விஷாத் ரந்திக அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் நுவன் லியனபதிரன 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம் லியோ பிரான்சிஸ்கோ மற்றும் டில்ஷான் டி சொய்சா ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன், 3 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. லியோ மற்றும் டில்ஷான் முறையே 100 மற்றும் 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்திலுள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 297 (72.4) – சீக்குகே பிரசன்ன 58, துஷான் விமுக்தி 54, ஹிமாஷ லியனகே 52, சரித் சுதாரக 5/98
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 112 (35.3) – விஷாத் ரந்திக 36, நுவன் லியனபதிரன 3/34
இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 229/3 (66) – லியோ பிரான்சிஸ்கோ 100*, டில்ஷான் டி சொய்சா 70*
NCC கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
முதல் நாள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களை பெற்றிருந்த தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 199 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜீவன் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 123 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி 7 விக்கெட்டுகளை இழந்து 395 ஓட்டங்களை பெற்று முன்னிலையிலுள்ளது. மேலும் தொடக்க வீரர் சித்தர கிம்ஹான் 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் பார்வீஸ் மஹ்ரூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
போட்டியின் சுருக்கம்
NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (65) – எஞ்சலோ பெரேரா 59, நிரோஷன் திக்வெல்ல 48, சந்துன் வீரக்கொடி 44, பவன் விக்ரமசிங்க 43, ரமித் ரம்புக்வெல்ல 3/72, சாமிக கருணாரத்ன 3/80
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 395/7 (108) – ஜீவன் மெண்டிஸ் 123*, சித்தர கிம்ஹான் 90, பார்வீஸ் மஹ்ரூப் 3/33
SSC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை பெற்றிருந்த SSC கழகம், எதிரணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை துரத்திப் பிடிக்க மேலும் 119 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.
எனினும் இன்றைய தினமும் தனது அசத்தலான பந்து வீச்சை தொடர்ந்த மலிந்த புஷ்பகுமார 7 விக்கெட்டுகளை பதம்பார்க்க, SSC கழகம் 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. SSC அணியின் ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், இலங்கை தேசிய அணி வீரர் தசுன் ஷானக 48 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்படி 14 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. மூன்று வீரர்கள் அரைச்சதம் கடக்க, சிலாபம் மேரியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை பெற்று இன்றைய தினத்தை நிறைவு செய்து கொண்டது.
சச்சித்ர சேரசிங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், திக்ஷில டி சில்வா ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை பெற்றுள்ளார். பந்து வீச்சில் தொடர்ந்து பிரகாசித்து வரும் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 193 (54.1) – அஷென் சில்வா 61, ஷெஹான் ஜயசூரிய 45, ஜெப்ரி வெண்டர்சே 5/61
SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 179 (65.3) – ரமேஷ் மெண்டிஸ் 53*, தசுன் ஷானக 48, மலிந்த புஷ்பகுமார 7/52, சச்சித்ர சேரசிங்க 3/26
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 251/7 (59.1) – சச்சித்ர சேரசிங்க 73, திக்ஷில டி சில்வா 60*, ஷெஹான் ஜயசூரிய 50, ஜெப்ரி வெண்டர்சே 3/72
BRC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
இப்போட்டியில் முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்த ராகம் கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 126 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.
ரொஷேன் சில்வா 91 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, ராகம அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். பந்து வீச்சில் அபாரமாக செயற்பட்ட திலகரத்ன சம்பத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 60 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த BRC கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 7 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றிருந்தது. பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
போட்டியின் சுருக்கம்
BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 194 (60.1) – லசித் லக்ஷான் 46, பானுக ராஜபக்ஷ 44, அமில அபொன்சோ 5/34, சஹன் நாணயக்கார 3/29
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 254 (84.3) – ரொஷேன் சில்வா 91, ஜனித் லியனகே 44, திலகரத்ன சம்பத் 5/98, தினுக ஹெட்டியாரச்சி 3/92
BRC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/7 (39) – பானுக ராஜபக்ஷ 45, ரமேஷ் புத்திக 39
காலி கிரிக்கெட் கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம்
எதிரணியின் 218 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய பதுரேலிய விளையாட்டுக் கழகம் நேற்றைய தினம் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எனினும் தொடர்ந்து களமிறங்கிய அலங்கார அசங்க, நதீர நாவல மற்றும் சஹன் விஜேரத்ன ஆகியோர் அரைச்சதங்கள் கடக்க, பதுரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணித்தலைவர் அலங்கார அசங்க அதிகபட்சமாக 85 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் சஜீவ வீரகோன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (78.2) – நிலுஷன் நோனிஸ் 62, தமித ஹுனுகும்புர 55, அலங்கார அசங்க 3/44, திலேஷ் குணரத்ன 3/53
பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 306/8 (111) – அலங்கார அசங்க 85, நதீர நாவல 67, சஹன் விஜேரத்ன 56, சஜீவ வீரகோன் 5/96
நாளை இப்போட்டிகளின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.