இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் B பிரிவுக்கான நான்கு போட்டிகள் இன்று ஆரம்பித்தன. லங்கன் கிரிக்கெட் கழகம் மதுரங்க சொய்சாவின் இரட்டை சதத்துடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் சார்பாக திலின ஹேரத் 66 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லங்கன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அவ்வணி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது மிகவும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 91 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மதுரங்க சொய்சா 13 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 203 ஓட்டங்களை விளாசினார். அதே சமயம் லால் குமார 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 107 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.

இவர்களை தவிர்ந்த ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றாலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அனீக் ஹசன் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் களுத்துறை நகர அணி சார்பாக யொஹான் டி சில்வா 137 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மங்கல குமார 120 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம் 

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) :  446/9 (91) – மதுரங்க சொய்சா 203, லால் குமர 107, அனீக் ஹசன் 56, யொஹான் டி சில்வா 137/5, மங்கல குமார 120/3


இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய விமானப்படை அணி 61.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டாக சரித் எறங்க ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த போது சரித் பண்டாரவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும் சிறப்பாக துடுப்பாடிய புத்திக்க சந்தருவன் 131 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 70 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். சிறப்பாக பந்து வீசிய திலின ஹேரத் 20.5 ஓவர்களில் 66 ஓட்டங்களுக்கு 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

அதனை தொடர்ந்து களமிறங்கிய குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ஓட்டங்களை பெற்றுள்ளது. தர்ஷன மஹவத்த கூடிய ஓட்டங்களாக 44  பெற்றிருந்த வேளை சொஹான் ரன்கிக்கவினால் ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

லக்ஷான் பெர்னாண்டோ மற்றும் புத்திக்க சந்தருவன் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 200 (61.5) – புத்திக்க சந்தருவன் 70, லஹிரு லக்மால் 44, திலின ஹேரத் 66/7

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 85/3 (28) – கவிந்த புளுக்குட்டியாராச்சி 28*


இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பௌதிக கலாச்சார கழகம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அவ்வணி 66 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சமீர சந்தமால் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய ரமேஷ் செல்வராஜ் 58 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய களுத்துறை பௌதிக கலாச்சார கழகம் இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய க்ரிஷான் திணிது 27 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 258 (66) – சமீர சந்தமால் 79, அஷான் ரணசிங்க 37, புத்திக்க ஹசரங்க 33, குசல் எதுசுரிய 33, ரமேஷ் செல்வராஜ் 4/58

களுத்துறை பௌதிக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 69/3 (21) – க்ரிஷான் திணிது 27*, டிலன்க ஆவர்த் 26/2


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த பாணதுறை விளையாட்டுக் கழகம் 83 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஹசந்த பெர்னாண்டோ 99 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

நிதானமாக துடுப்பாடிய சஞ்சய சத்துரங்க 51 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார். இலங்கை துறைமுக அதிகார சபை சார்பாக சிறப்பாக பந்து வீசிய சமிக்கற எதிரிசிங்க 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் முதலிரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களுக்குள் இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. சிறப்பாக பந்து வீசிய கயான் சிரிசோம மற்றும் லசித் பெர்னாண்டோ தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 306 (83) – ஹசந்த பெர்னாண்டோ 84, சஞ்சய சத்துரங்க 51, நிசல் ரந்திக 44, சமிக்கற எதிரிசிங்க 101/5

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 19/2 (5) – சமிக்கற எதிரிசிங்க 7*, கயான் சிரிசோம 11/1, லசித் பெர்னாண்டோ 2/1