யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினர் E.S.பேரம்பலம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்திய 2016ஆம் ஆண்டுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி (A.H.Y.S.C) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆண்கள் “A” பிரிவு
இத்தொடரில் அரையிறுதியில் அச்சுவேலி இளைஞர் அணியை 3-0 என இலகுவாக வீழ்த்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோன்று, மற்றைய அரையிறுதியில் ஆவரங்கால் மத்தியை 3-2 என வீழ்த்தி இளவாலை மத்தி அணி (I.C.S.C) இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அரியாலை சரஸ்வதி மைதானத்தில் இடம்பொற்ற மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் முதலாவது செட்டினை ஆவரங்கால் இந்து அணி 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக இரண்டாவது செட்டில் எழுச்சியுற்ற இளவாலை மத்தி அணியினர், ஜெனியின் நுட்பமான ஆட்டமும், எழிலின் சிறந்த அறைதலும் கைகொடுக்க 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை தமதாக்கினர்.
மூன்றாவது செட்டை, கபிலக்சனின் உத்வேகமான அறைதல்களுடன் 25-15 என இலகுவாகக் கைப்பற்றி, 2-1 என முன்னிலை பெற்றது ஆவரங்கால் இந்து அணி. நான்காவது செட்டில் இளவாலை மத்தி பலத்த போராட்டத்தை வெளிப்படுத்திய போதும் செல்வரதனின் அனுபவமும் ஜனகனின் தடுத்தலும் பலமாய் இருக்க குறித்த செட்டை 25-21 எனக் கைப்பற்றி, 4-1 என்ற செட் கணக்கில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வெற்றி கொண்டு, கிண்ணத்தைத் தமதாக்கியது.
ஏற்கனவே பல வெற்றிகளைப் பெற்ற இவ்வணி, வருடத்தின் மிக முக்கியமானதும், இறுதித் தொடராகவும் அமைந்த இத்தொடரில் தமது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டியுள்ளது.
புள்ளி விபரம் – ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25:19, 22:25, 25:15, 25:21 இளவாலை மத்தி அணி
போட்டியின் நாயகன் – கபிலக்சன் (A.H.Y.S.C)
தொடரின் நாயகன் – ஜெனி (I.C.S.C)
ஆண்கள் “B” பிரிவு
ஆண்களுக்கான “B” பிரிவு இறுதிப் போட்டியில் புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது. இதில் முதலாவது செட்டின் ஆரம்பம் முதலே அஜித் மற்றும் வசிகரன் ஆகியோர் புள்ளிகளைச் சேர்த்து நவஜீவன்ஸின் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும், இறுதியில் வளர்மதி அணி வீரர்கள் விரைவாகப் புள்ளிகளைச் சேகரித்த போதும் 25-23 என முதலாவது செட்டை நவஜீவன்ஸ் தமதாக்கியது
நவஜீவன்ஸ் இரண்டாவது செட்டையும் அதே வேகத்தில் 25-18 எனத் தமதாக்கியது. மூன்றாவது செட்டில் வளர்மதி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்த்த போதும் அஜித்தின் நுட்பமான ஆட்டம் கைகொடுக்க, புவிந்தனின் உத்வேகத்தைக் கட்டுப்படுத்தி 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் நவஜீவன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
புள்ளி விபரம் – உடுப்பிட்டி நவஜீவன்ஸ் 25-23, 25-18, 25-19 புத்தூர் வளர்மதி
விருதுகள்
போட்டியின் நாயகன் – அஜித் (உடுப்பிட்டி நவஜீவன்ஸ்)
தொடரின் நாயகன் – புவிந்தன் (புத்தூர் வளர்மதி)
பெண்கள் பிரிவு
K.M.V கரிஸ் அணியினை எதிர்த்து மோதிய அனித்தா தலைமையிலான காங்கேசன்துறை ஐக்கிய அணியினர் தொடர்ச்சியாகத் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். முதலாவது செட்டை 25-10 எனவும், இரண்டாவது செட்டை 25-12 எனவும், மூன்றாவது செட்டையும் அதே வேகத்துடன் 25-17 எனவும் கைப்பற்றி, 3-0 என காங்கேசன்துறை ஐக்கிய அணியினர் வெற்றியைத் தமதாக்கினர்.
போட்டிகளின் நிறைவில், யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க செயலாளர் சுதேஸ்குமாரினால், “தமக்கென ஒரு மைதானமின்மை பெருங்குறையாக உள்ளது. எனவே, அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட விளையாட்டு உத்தியோத்தர் விஜிகரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.