டயலொக் ரக்பி லீகின் 2 ஆம் சுற்றிற்கான போட்டியொன்றில் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழக அணிகள் மோதிக் கொண்டன. நித்தவளை ரக்பி மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன், இரண்டாம் சுற்றை அதிரடியாக ஆரம்பித்த கண்டி கழகம் 50 – 19 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

கண்டி அணியினர் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், ஆரம்பம் முதலே அழுத்தத்தை வழங்கிய அவ்வணி முதலாம் நிமிடத்தில் அணித்தலைவர் ரொஷான் வீரரத்ன மூலமாக ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. திலின விஜேசிங்க சற்று கடினமான கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி அணி 07 – இராணுவ அணி 00)

அடுத்து சில நிமிடங்களுக்கு இராணுவ அணி பந்தை கையிருப்பில் வைத்து ட்ரை கோட்டின் அருகில் பலத்த அழுத்தத்தை வழங்கியது. எனினும் கண்டி அணி சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் எதிரணிக்கு புள்ளிகள் பெறும் வாய்ப்பெதனையும் வழங்கவில்லை. தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்திய கண்டி கழகம் போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் முன்கள வீரர்களின் ஊடாக ட்ரை ஒன்றை வைத்தது. தமித் திஸாநாயக்க ட்ரையை பெற்றுக் கொண்டதுடன், இம்முறையும் திலின விஜேசிங்கவின் உதை குறிதவறவில்லை. (கண்டி அணி 14 – இராணுவ அணி 00)

தொடர்ந்தும் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி அணி திலின விஜேசிங்கவின் சிறப்பான உதையின் மூலம் எதிரணியின் பாதிக்குள் முன்னேறியது. சில பந்துக் கைமாற்றல்களின் பின்னர் அபாரமான நகர்வொன்றின் மூலமாக ரொஷான் வீரரத்ன ரிச்சர்ட் தர்மபாலவிற்கு பந்தை பரிமாற, அவர் தடுப்பை ஊடுருவி ட்ரை ஒன்றை வைத்தார். இலகுவான உதையை திலின விஜேசிங்க புள்ளிகளாக மாற்றினார். (கண்டி அணி 21 – இராணுவ அணி 00)

சளைக்காது போராடிய இராணுவ அணியின் வீரர்கள் மீண்டுமொருமுறை ட்ரை கோட்டை நோக்கி முன்னேறினர். இம்முறையும் கண்டி அணி சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலமாக பல நிமிடங்கள் எதிரணியை ட்ரை வைக்கவிடாமல் தடுத்து வந்தது. எனினும் கடந்த போட்டிகளில் போன்றே பலமிக்க முன்கள வீரர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இராணுவ அணி, போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் அஷோக ஜயலால் மூலமாக கம்பங்களுக்கடியில் ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. இலகுவான கொன்வெர்சன் உதையை கயான் சாலிந்த வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி அணி 21 – இராணுவ அணி 07)

இராணுவ அணியின் ட்ரையிற்கு பதிலளித்த கண்டி அணி முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் ஷெஹான் பத்திரனவின் அபாரமான ஓட்டத்தின் பயனாக கம்பங்களுக்கடியில் ட்ரை வைத்து. சுலபமான உதையை திலின விஜேசிங்க மீண்டும் லாவகமாக உதைத்தார். அத்துடன் முதல் பாதி நிறைவுக்கு வந்தது. (கண்டி அணி 28 – இராணுவ அணி 07)

முதல் பாதி: கண்டி அணி 28 – இராணுவ அணி 07

இரண்டாம் பாதியை புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த இராணுவ அணி, அபாரமான பந்துக் கைமாற்றல்களின் பின்னர் துசித் சேனநாயக்க ஊடாக இடப்பக்க மூலையில் ட்ரை வைத்தது. கடினமான உதையை கயான் சாலிந்த தவறவிட்டார். (கண்டி அணி 28 – இராணுவ அணி 12)

எனினும் தமது வெற்றியை உறுதி செய்து கொண்ட கண்டி அணி போட்டியின் 47 ஆவது நிமிடத்தில் ட்ரை ஒன்றை வைத்து புள்ளி வித்தியாசத்தை அதிகரித்தது. இம்முறை அணித்தலைவர் ரொஷான் வீரரத்ன தனது இரண்டாவது ட்ரையை பெற்றுக் கொண்டார். இலகுவான உதையை திலின விஜேசிங்க தவறவிட்டார். (கண்டி அணி 33 – இராணுவ அணி 12)

போட்டியை கைவிடாது தொடர்ந்து போராடிய இராணுவ அணி வீரர்கள் பல நிமிடங்கள் ட்ரை கோட்டின் அருகில் முகாமிட்டிருந்தனர். கண்டி அணியின் வியக்கத்தக்க தடுப்பாட்டத்தின் காரணமாக இராணுவ அணியினால் பல கைமாற்றல்களின் பின்னரும் ட்ரை வைக்க இயலவில்லை. எனினும் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை துரிதமாக செயற்பட்டு பயன்படுத்திக்கொண்ட அணித்தலைவர் மனோஜ் சில்வா கம்பங்களுக்கு அருகில் ட்ரை வைத்தார். கயான் சாலிந்தவின் உதை கம்பங்களை ஊடறுத்துச் சென்றது. (கண்டி அணி 33 – இராணுவ அணி 19)

போட்டியின் இறுதி நிமிடங்களில் இராணுவ அணியை பந்தாடிய கண்டி அணி அடுத்தடுத்து 3 ட்ரைகள் வைத்து அசத்தியது. ரொஷான் வீரரத்னவின் மற்றுமொரு விவேகமான நகர்வின் உதவியுடன் சயுறு அந்தனி ட்ரை ஒன்றை வைத்ததுடன், மற்றைய இரண்டு ட்ரைகளையும் உச்சித ஜயசூரிய பெற்றுக் கொண்டார். முதல் கொன்வெர்சன் உதை திலின விஜேசிங்கவினால் வெற்றிகரமாக உதைக்கப்பட்ட போதிலும், இறுதி இரண்டு உதைகளை அர்ஷாட் ஜமால்டீன் தவறவிட்டார். அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது. (கண்டி அணி 50 – இராணுவ அணி 19)

முழு நேரம் : கண்டி அணி 50 – இராணுவ அணி 19

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சயுறு அந்தனி (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகளைப் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம் – 50

ட்ரை – உச்சித ஜயசூரிய 2T, ரொஷான் வீரரத்ன 2T, ரிச்சர்ட் தர்மபால 1T, ஷெஹான் பதிரன 1T, தமித் திசாநாயக்க 1T, சயுறு அந்தனி 1T

கொன்வெர்சன் – திலின விஜேசிங்க 5C

இராணுவ விளையாட்டுக் கழகம் – 19

ட்ரை – அஷோக ஜயலால் 1T, மனோஜ் சில்வா 1T, துசித சேனநாயக்க 1T

கொன்வெர்சன் – கயான் சாலிந்த 2C

WATCH MATCH REPLAY