இலங்கைக்காக ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசன்திகா ஜயசிங்க கடுமையாக சுகயீனமுற்றமையினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் என்று தியதலாவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தியதலாவையில் இடம்பெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்சி நிகழ்வொன்றிற்கு, சுசன்திகா அலோசனையாளராக சென்றுள்ளார். இந்நிலையில் அவர் கடுமையான காய்சலுக்கு உள்ளாகி அவதிப்பட்ட நிலையிலேயே நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பரிசோதனைகளின்படி, அவருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அவரது நோய்த்தன்மை குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
அவரது நிலை குறித்து தியதலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரன்ஜித் அமரகோன் thepapare.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது,
”சுசன்திகா 27ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்பொழுது அவருக்கு காய்ச்சல் கடுமையாக அதிகரித்து, ஆபத்தான நிலையில் இருந்தார். எனவே அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்வாங்கப்பட்டார்.
பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின்படி அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு தற்பொழுதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5 நாட்களுக்காவது அவருக்கான சிகிச்சையை நாம் இங்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் பிரிவிற்கான 200 மீட்டர் ஓட்டத்தில் சுசன்திகா ஜயசிங்க போட்டித் தூரத்தை 22.28 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.