முதல் இன்னிங்ஸ் வெற்றியினை சுவீகரித்துக்கொண்ட ஸாஹிரா கல்லூரி அணி

1520
U19s Roundup Shamaz Playing

இன்று நடைபெற்று முடிந்த, 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான ‘சிங்கர்’ கிரிக்கெட் தொடரில் புனித அலோசியஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியொன்றில், ஹாஷிம் ஹூசைன் மற்றும் முஹம்மட் சமாஷ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் ஸாஹிரா கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்துகொண்டது.

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்று(24) ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அலோசியஸ் கல்லூரி அணி ஏற்கனவே சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்று தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்து கொண்டிருந்தது. இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களை குவித்திருந்த போது, நேற்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனையடுத்து, இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மேலதிகமாக 98 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், தமது முதலாவது இன்னிங்சினை இன்று  தொடர்ந்த ஸாஹிரா கல்லூரி அணி, ஹாஷிம் ஹூசைன் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதம் (50), முஹம்மட் சமாஷ் பெற்றுக்கொண்ட அரைச்சதம்(50) ஆகியவற்றின் உதவியுடன், 59.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட அலோசியஸ் கல்லூரி அணியின், ரவிந்து சஞ்சன, நிதுக்க மல்ஷித், விஷ்வ விலோச்சன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், ஸாஹிரா கல்லூரியைவிட 5 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த புனித அலோசியஸ் கல்லூரி அணி, ஆரம்பம் முதல் தடுமாறி 61 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இன்றைய நாளின் ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது, இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற, முதல் இன்னிங்சின் புள்ளிகள் அடிப்படையில் ஸாஹிரா கல்லூரி அணி, இப்போட்டியில் வெற்றியினை பெற்றுக்கொண்டது.

புனித அலோசியஸ் கல்லூரியின் சார்பாக இரண்டாவது இன்னிங்சிற்குரிய துடுப்பாட்டத்தில், மற்றைய வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவ்வணி சார்பாக கிம்ஹான ஆசிர்வாத ஓரளவு சிறப்பாக துடுப்பாடி 32 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுத்தந்தார்.

பந்துவீச்சில், ஸாஹிரா கல்லூரியின் சஜித் சமீர மூன்று விக்கெட்டுகளை 21 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 165 (68.5) – பசிந்து நாணயக்கார 64, கிம்ஹான ஆசிர்வத 27, சஜித் சமீர 5/42

ஸாஹிரா கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 170 (59.1) – ஹாஷிம் ஹூசைன் 50*, முஹம்மட் சமாஷ் 50, விஷ்வ விலோச்சன 3/15, ரவிந்து சன்ஞன 3/40, நிதுக்க மல்ஷித் 3/39

புனித அலோசியஸ் கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 126/9 (61) – கிம்ஹான ஆசிர்வாத 32, அஷன் கவிந்த 21, சஜித் சமீர 3/21

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. ஸாஹிரா கல்லூரி அணியிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி