அஷான் ரணசிங்கவின் அபார பந்து வீச்சினால் கடற்படை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

430
SLC Premier League

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் B மட்ட அணிகளுக்கான மூன்று போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றன.

மேலும் குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் மற்றும் களுத்துறை நகர விளையாட்டு கழகத்துக்கு இடையிலான போட்டியின் முதலாவது நாள் இன்று ஆரம்பித்தது.

முன்னைய செய்திகள்  :  மீண்டும் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய சானக : பாணதுறை அணியை மீட்ட சில்வா

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பாணதுறை விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் நாளான இன்று, பாணதுறை விளையாட்டுக் கழகம் லங்கன் கிரிக்கெட் கழகத்தினை 9 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

நேற்றைய நாள் தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பாணதுறை விளையாட்டு கழகம் 244 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றிருந்தது. இன்று இரண்டாம் நாளாக ஆட்டத்தை தொடர்ந்த அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு லங்கன் கிரிக்கெட் கழகத்தைவிட 131 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக சிறப்பாகத் துடுப்பாடிய மிஷென் சில்வா 105 ஓட்டங்களையும் மொஹமட் ஷில்மி 75 ஓட்டங்களையும் பெற்றனர். அதே நேரம் லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய ரஜீவ வீரசிங்க 81 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லங்கன் கிரிக்கெட் கழகம், பாணதுறை விளையாட்டு கழகத்தை 294 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய போதும் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கத் தவறியது. யஷான் சமரசிங்க மற்றும் சானக ருவன்சிறி அரைச் சதம் கடந்த போதும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர். லங்கன் கிரிக்கெட் கழகம் 45.2 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பாணதுறை விளையாட்டு கழகத்தைவிட 45 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

பாணதுறை விளையாட்டு கழகம் சார்பாக பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட கயான் சிரிசோம 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

46 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய பாணதுறை விளையாட்டு கழகம் 9.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 48 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 163 (34.1) – சானக ருவன்சிரி 40, சரித் பெர்னாண்டோ 35, லசித் பெர்னாண்டோ 29/4, நிமேஷ் விமுக்தி 48/3

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 294 (65.3) – மிஷேன் சில்வா 105, முஹம்மத் சில்மி 75, சஞ்சய சதுரங்க 46, ரஜீவ வீரசிங்க 81/6, நவீன் கவிகார 104/3

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 176 (45.2) – யஷான் சமரசிங்க 66, சானக ருவன்சிறி 55, லால் குமார் 30, ரஜீவ வீரசிங்க 11, கயான் சிரிசோம 55/5, லசித் பெர்னாண்டோ 41/3, ஹசந்த பெர்னாண்டோ 31/2

பாணதுறை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 48/1 (9.3) – நிசல் ரந்திக 27, முஹம்மத் சில்மி 17, நவீன் கவிகார 29/1


இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

அஷான் ரணசிங்கவின் சிறந்த பந்து வீச்சின் முலம் இலங்கை கடற்படை அணி, இலங்கை விமானப்படை அணியை இன்னிங்ஸ் மற்றும் 124 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டது. அதிரடியாக பந்து வீசிய அஷான் ரணசிங்க, இலங்கை விமானப்படை அணியின் துடுப்பாட்ட வீரர்களை சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்ததோடு குறித்த போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை கடற்படை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.  

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கடற்படை அணி முதலில் துடுப்பாடி தனது முதலாவது இன்னிங்சுக்காக 88.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றிருந்தது.

தொடர்ந்து, இரண்டாம் நாளாகக் களமிறங்கிய கடற்படை அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கடற்படை அணி சார்பாக சமீர சந்தமால் 59 ஓட்டங்களையும் அமித் எரந்த 58 ஓட்டங்களையும் மற்றும் புத்திக ஹசரங்க 51 ஓட்டங்களையும் பெற்றனர். விமானப்படை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சஹான் ஜயவர்தன 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை விமானப்படை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடப் பணிக்கப்பட்டது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 213 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் களமிறங்கிய விமானப்படை அணி, கடற்படை அணி பந்து வீச்சளார்களின் அதிரடியான பந்துவீச்சால் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கடற்படை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அஷான் ரனசிங்க 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இஷான் அபேசேகர 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

விமானப்படை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்றதால் பிரிமியர் லீக் B மட்டத்திலான புள்ளிகள் தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை அணி (முதல் இன்னிங்ஸ்) : 316 (96.1) – சமீர சந்தமால் 59, அமித் எரந்த 58, புத்திக்க ஹசரங்க 51, அஷான் ரணசிங்க 47, தினுஷ்க மாலன் 38, சஹான் ஜயவர்தன 77/4, புத்திக்க சந்தருவன் 68/2,

இலங்கை விமானப்படை அணி (முதல் இன்னிங்ஸ்) : 103 (39.4) – புத்திக்க சந்தருவன் 23, உதயவன்ச பராக்கிரம 17, அச்சிற எறங்க 13*, அஷான் ரணசிங்க 18/4, தினுஷ்க மாலன் 9/2, இஷான் அபேசேகர 26/2

இலங்கை விமானப்படை அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 89 (22) – லஹிறு ஸ்ரீ லக்மால் 19, ரோஸ்கோ தட்டில் 13, சொஹான் ரங்கிக 14, அஷான் ரணசிங்க 31/5, இஷான் அபேசேகர 44/4


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர நிறைவின் போது 2 விக்கெட்டுகள் கையிருப்பில் 120 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முதலாவது இன்னிங்சுக்காக பொலிஸ் விளையாட்டு கழகம் பெற்றிருந்த 103 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் நேற்றைய நாள் ஆட்ட முடிவின் போது 39 ஓவர்களில் எவ்விதமான விக்கெட் இழப்புமின்றி 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது நாளாக 78 ஓட்டங்களுடன் துடுப்பாட்டதினை தொடர்ந்த ஹஷான் குணதிலக 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை துரதிர்ஷ்டவசமாக பிரியதர்ஷனின் பந்து வீச்சில் மதனாயகவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் பெற்றுள்ளது. நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.   

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 103 (50) – சமித் துஷாந்த 26, துஷிற மதனாயக்க 19, அசேல அழுத்கே 14, சானக கோமசாரு 35/5, சமிகற எதிரிசிங்க 29/4

துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 223/8 (87) – ஹஷான் குணதிலக 99, யோஹான் டி சில்வா 32, ப்ரஷான் விக்கரமசிங்க 16, அக்கலங்க கனேகம 14, கல்யாண ரத்னபிரிய 65/4, மகேஷ் ப்ரியதர்ஷன 58/3, சுவஞ்சி மதனாயக 35/1

முன்னைய செய்திகளுக்கு: சானக கோமசாரு பந்து வீச்சில் சுருண்ட விமானப் படை

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம்

மூன்று நாள் கொண்ட இந்த போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவின் போது களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகள் கையிருப்பில் 161 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் முதல் 4 விக்கெட்டுகளையும் 60 ஓட்டங்களுக்குள் இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.

இந்நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ருவந்த ஏகநாயக்க அதிரடியாக துடுப்பாடி 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 111 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார். அதே நேரம் களுத்துறை நகர அணி சார்பாக விஹங்க கல்ஹாற மற்றும் தறிந்து சிரிவர்தன தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பாடிய களுத்துறை நகர அணி இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 232 (70.2) – ருவந்த ஏக்கநாயக்க 111, ஹஷான் பிரபாத் 50, தமித் பெரேரா 19, தர்ஷன மஹத்த 17, தாரக வடுகே 14, விஹங்க கல்ஹாற 64/3, தறிந்து சிரிவர்தன 20/3, மங்கல குமார 63/2

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 71/2 (20) – தரிந்து சிரிவர்தன 29, ரிஷித் உபமால் 20*, மிதுன் ஜயவிக்ரம 15/2

tied b point table