இலங்கையில் இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கிண்ணத்தொடரில், இலங்கை அணியினை வழிநடாத்த காலி றிச்மன்ட் கல்லூரியைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
U19 Youth Asia Cup Sri Lanka 2016 Hub
கமிந்து மெண்டிஸ், இவ்வருட ஆரம்பத்தில், பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணத்தில், தனது இருகைகள் மூலம் பந்து வீசி அனைவரினதும் கவனத்தினை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
கமிந்து மெண்டிசுடன் சேர்த்து இலங்கையின் தென்பகுதியில் இருந்து, காலி புனித அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த நடுத்தர வரிசை இளம் துடுப்பாட்ட வீரர் அஷேன் பண்டாரவிற்கும் இந்த குழாமில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணத்தில், கமிந்து மெண்டிஸ் 6 போட்டிகளில் விளையாடி 156 ஓட்டங்களை குவித்து முன்னனி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இந்த உலகக் கிண்ணத்தில், இலங்கை அணி குழாமில் அவருடன் சேர்ந்து ஆடிய சகல துறை (வேகப்பந்து வீச்சாளர்) ஆட்டக்காரரான புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஜெகான் டேனியலும் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த, 15 பேர் கொண்ட குழாமில் தற்போது தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் அடிப்படையில், 2018 இல் நியூசிலாந்தில் நடைபெற இருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012 இல் மலேசியாவில் இடம்பெற்ற கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆசிய கிண்ணத்தில் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவுற்றதால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதல் கிண்ணத்தை பகிர்ந்து கொண்டன. இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற 2013/14 இற்குரிய ஆசிய கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியினை 40 ஓட்டங்களால் இலகுவாக தோற்கடித்து இந்தியா கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது.
எட்டு அணிகள் பங்குபெறும், இத்தொடர் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது மின்னொளி விளக்குகளின் துணையுடன் ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் நடைபெறும் நாடாக காணப்படும் இலங்கை, இறுதித்தொடரில் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்த இந்தியா, நேபாளம் மற்றும் மலேசியா உடன் குழு A இல் நீடிக்கும் இந்த வேளையில், பாகிஸ்தான் குழு B இல் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் மோதுகின்றது.
காலி புனித அலோசியஸ் கல்லூரியினைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இத்தொடரில் இலங்கை அணியின் குழாமில் இணைக்கப்பட்டுள்ளதோடு, கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் இருந்து தலா இரண்டு வீரர்கள் இக்குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட இந்த இலங்கை அணியின் வீரர்கள் குழாமிற்கு, இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர், ரோய் டயஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக இருப்பதுடன், முன்னாள் SSC கழக வீரரும் புனித தோமியர் கல்லூரியின் பழைய மாணவருமான மஹிந்த கலங்கொட அணியினை முகாமைத்துவம்செ ய்யும்க டமையினை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் குழாம்
- கமிந்து மெண்டிஸ் (றிச்மன்ட் கல்லூரி – காலி) – அணித்தலைவர்
- அஷேன் பண்டார (புனித அலோசியல் கல்லூரி – காலி) – உபதலைவர்
- ரவிந்து சஞ்சன (புனித அலோசியஸ் கல்லூரி – காலி)
- ஹரீன் புத்தில (புனித அலோசியஸ் கல்லூரி – காலி)
- ஜெகான் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு)
- ரெவான் கெல்லி (புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு)
- ஹசித்த போயகொட (திரித்துவ கல்லூரி – கண்டி)
- திசரு ரஷ்மிக்க தில்ஷான் (திரித்துவ கல்லூரி – கண்டி)
- பிரவீன் ஜயவிக்ரம (புனித செபஸ்டியன் கல்லூரி – மொரட்டுவ)
- விஷ்வ சத்துரங்க (பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரி – மொரட்டுவ)
- லசித் குருஸ்புள்ளே (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு)
- வனித்த வன்னிநாயக்க (புனித ஏன்ஸ் கல்லூரி – குருநாகலை)
- திலான் பிரசான் (புனித செர்வட்டியஸ் கல்லூரி – மாத்தறை)
- க்ரிஷான் சஞ்சுல (டி மசனோட் கல்லூரி – கந்தானை)
- நிப்புன் ரன்சிக்க (பி.டி.எஸ் குலரத்ன கல்லூரி – அம்பாலங்கொடை)