இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக்கில் குவிக்கப்படும் சதங்களும் அரைச் சதங்களும்

1152
SLC Premier League ‘Tier A’

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் காலி கிரிக்கெட் கழகம்  மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவுபெற்றது.

‘A’ மட்ட அணிகளுக்கான மேலும் ஐந்து போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றன.

காலி கிரிக்கெட் கழகம்  எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

நேற்று முன்தினம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமானதுடன் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டில்ஹான் குரே 86 ஓட்டங்களையும் எரங்க ரத்நாயக்க 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, காலி கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் சித்தர கிம்ஹான் மற்றும் தரங்க பரணவிதான அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்காக 184 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர். சித்தர கிம்ஹான் 127 ஓட்டங்களையும் தரங்க பரணவிதான 84 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தமிழ் யூனியன் அணி 338 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் இறுதி 7 விக்கெட்டுகள் 51 ஓட்டங்களுக்கு வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் அசத்திய ரொஷான் ஜயதிஸ்ஸ (5/101) மற்றும் சஜீவ வீரகோன் (4/96) தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பங்கிட்டுக்கொண்டனர்.

அதன்படி 14 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட காலி கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடுகளம் பிரவேசித்தது. அவ்வணி 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டம் நிறைவுக்கு வந்ததுடன், போட்டி சமநிலையில் நிறைவுபெற்றது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 352 (111.3) – டில்ஹான் குரே 86, எரங்க ரத்நாயக்க 62, ஷாலிக கருணாநாயக்க 45, ஜீவன் மெண்டிஸ் 4/87

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 338 (109.5) – சித்தர கிம்ஹான் 127, தரங்க பரணவிதான 84, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/101, சஜீவ வீரகோன் 4/96

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 189/5 (49) – நிலூஷன் நோனிஸ் 43

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றிருந்த ராகம கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 37 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உதார ஜயசுந்தர 112 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத் தவிர லஹிரு மிலந்த (63) மற்றும் ரொஷேன் சில்வா (79) ஆகியோர் அரைச்சதம் கடக்க, ராகம கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 361 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்துவீசிய சோனகர் விளையாட்டுக் கழகத்தின் சச்சித்ர பெரேரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி முதல் இன்னிங்சில் 144 ஓட்டங்களினால் பின்னிலை வகித்த சோனகர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. பந்துவீச்சில் பிரகாசித்த சஹன் நாணயக்கார 3 விக்கெட்டுகளை சாய்க்க, சோனகர் விளையாட்டுக் கழக அணியானது இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது. அவ்வணியின் ருவிந்து குணசேகர அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217 (55.2) – ப்ரிமோஷ் பெரேரா 64, அமில அபொன்சோ 4/40

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 361 (86.2) – உதார ஜயசுந்தர 112, ரொஷேன் சில்வா 79, லஹிரு மிலந்த 63, லஹிரு திரிமாண 43, சச்சித்ர பெரேரா 5/119

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 120/6 (37) – ருவிந்து குணசேகர 57, சஹன் நாணயக்கார 3/23


NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் NCC அணி பெற்றுக் கொண்ட 385 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்று ஆடுகளம் பிரவேசித்தது.

இப்போட்டியிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய அணித்தலைவர் மஹேல உடவத்த 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவரைத் தவிர விதுர அதிகாரி 64 ஓட்டங்களையும், இசுரு உதான 40 ஓட்டங்களையும் குவித்தனர்.

எனினும் அபாரமான பந்துவீச்சில் ஈடுபட்ட தரிந்து கௌஷால் 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, சிலாபம் மேரியன்ஸ் அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்படி முதல் இன்னிங்சில் 100 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC அணி இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. சிறப்பாக பந்துவீசிய மதுக லியனபதிரனகே 3 விக்கெட்டுகளை வீழ்த்த, NCC அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 385 (88.1) – சந்துன் வீரக்கொடி 113, நிமேஷ குணசிங்க 64, நிரோஷன் திக்வெல்ல 51, பவன் விக்ரமசிங்க 46, எஞ்சலோ பெரேரா 45, மலிந்த புஷ்பகுமார 5/74

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 285 (68.3) – மஹேல உடவத்த 89, விதுர அதிகாரி 64, இசுரு உதான 40, தரிந்து கௌஷால் 6/78

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 87/4 (15) – மதுக லியனபதிரனகே 3/20


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றிருந்த புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 23 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

அசத்தலாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 108 ஓட்டங்களையும் அதீஷ நாணயக்கார 79 ஓட்டங்களையும் பெற்று அணியை முன்னிலைக்கு இட்டுச்சென்றனர்.

எனினும் மற்றைய வீரர்களில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழக்க, புளூம்பீல்ட் அணி 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணியின் இறுதி ஏழு விக்கெட்டுகள் 46 ஓட்டங்களுக்கு வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் அலங்கார அசங்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அதன்படி 77 ஓட்டங்களினால் பின்னிலை பெற்றுக் கொண்ட பதுரேலிய விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. இம்முறை முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதுரேலிய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தொடக்க வீரர்களான ஷெஹான் பெர்னாண்டோ மற்றும் சச்சின் ஹேவாவசம் முறையே 86 ஓட்டங்களையும் 48 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். நதீர நாவல ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களைப் பெற்று களத்திலுள்ளார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 156 (51) – விஷ்வ விஜேரத்ன 47, ஷெஹான் பெர்னாண்டோ 46, மலித் டி சில்வா 5/41

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 233 (68.1) – நிபுன் கருணாநாயக்க 108, அதீஷ நாணயக்கார 79, அலங்கார அசங்க 4/50

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 223/2 (52) – ஷெஹான் பெர்னாண்டோ 86, சச்சின் ஹேவாவசம் 48, நதீர நாவல 46*


BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

நேற்றைய தினம் ஆட்டம் நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 23 ஓட்டங்களை பெற்றிருந்த BRC அணி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 280 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

எனினும் சிறப்பாக பந்துவீசிய கசுன் ராஜித (5/72) மற்றும் சுராஜ் ரந்திவ் (4/58) தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பங்கிட்டுக்கொள்ள, BRC அணி 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக தேஷான் டயஸ் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதன்படி 105 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட செரசன்ஸ் அணி இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (79.5) – உமேஷ் கருணாரத்ன 84, இரோஷ் சமரசூரிய 72, தெனுவன் ராஜகருண 69, தினுக ஹெட்டியாரச்சி 5/96

BRC (முதல் இன்னிங்ஸ்) – 197 (74.3) – தேஷான் டயஸ் 32, கசுன் ராஜித 5/72, சுராஜ் ரந்திவ் 4/58

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/2 (14)


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொள்வதற்கு மேலும் 127 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

எனினும் பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணி வீரர் லக்ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இராணுவ அணி 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் தனித்து போராடிய துஷான் விமுக்தி 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி முதல் இன்னிங்சில் 2 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகம், இரண்டாவது இன்னிங்சில் முன்னேற்றகரமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ரொன் சந்திரகுப்த மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆட்டமிழக்காது முறையே 84 மற்றும் 58 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (56.3) – சச்சித் பதிரன 54, லஹிரு மதுஷங்க 50*

இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 216 (82.1) – துஷான் விமுக்தி 78, லக்ஷான் சந்தகன் 4/71

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 165/1 (40.3) – ரொன் சந்திரகுப்த 84*, அஷான் பிரியன்ஜன் 58*