இதுவரை தோல்வியை சந்திக்காத ஹெவலொக் அணி இராணுவப்படை அணியையும் வீழ்த்தியது

253
Havelock SC v Army SC

டயலொக் ரக்பி லீக்கின் 5ஆவது வாரத்தில் இராணுவப்படை அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியை 37-26 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஹெவலொக் அணி வெற்றிகொண்டது. இந்த வெற்றியினால் 5 வாரங்கள் முடிவில் ஹெவலொக் அணி, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று தரப்படுத்தலில் தொடர்ந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

கடந்த வார போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த சுதர்ஷன முததந்திரி, ஷாரோ பெர்னாண்டோ மற்றும் அஷான் டார்லிங் ஆகியோர் இப்போட்டியில் ஹெவலொக் அணிக்காக விளையாடினர். மேலும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதனால் கடந்த வாரப் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்த மிதுன் ஹப்புகொடவும் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்றார்.

போட்டியின் ஆரம்ப கட்டங்களில் இராணுவப்படை அணி பந்தை தன்வசம் வைத்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் அவ்வணி வீரர் அஷான் பண்டாரவினால் தவறவிடப்பட்ட பந்தை கைப்பற்றிய நிரோஷான் பெர்னாண்டோ பந்தை உதைந்து தானே ஓடி சென்று கைப்பற்றினார். இராணுவப்படை அணி இதை தடுத்த பொழுதும் அவர்களால் ஹெவலொக் அணியை ட்ரை வைப்பதில் இருந்து தடுக்க முடியவில்லை. சுதர்ஷன முததந்திரி ட்ரை வைக்க, துலாஜ் பெரேரா உதையை தவறவிட்டார். (ஹெவலொக் 05 – இராணுவப்படை 00)

அடுத்த சில நிமிடங்களுக்கு ஹவ்லோக் அணியே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் அவ்வணி பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றது. கிடைத்த வாய்ப்பை தவறவிடாத துலாஜ் பெரேரா வெற்றிகரமாக உதைந்து மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 08 – இராணுவப்படை 00)

போட்டியில் முதல் புள்ளிகளை பெறக் காத்திருந்த இராணுவப்படை அணிக்கு, ஹெவலொக் அணி பல தவறுகளை செய்து 3 பெனால்டி வாய்ப்புகளை வழங்கியது. எனினும் இராணுவப்படை அணி வீரர் கயான் சாலிந்தவினால் 2 உதைகளை மட்டுமே வெற்றிகரமாக உதைய முடிந்தது. (ஹெவலொக் 08 – இராணுவப்படை 06)

அடுத்தடுத்த கட்டங்களில் இராணுவப்படை அணி எதிர் தரப்புக்கு அழுத்தங்களை கொடுத்து வந்தது. இந்நிலையில் அவ்வணியின் நட்சத்திர வீரர் கயான் சாலிந்த, ஹெவலொக் அணியின் இடைவெளியூடாக ஓடிச் சென்று இலகுவான ட்ரை ஒன்று வைத்து அசத்தினார். பின்னர் இலகுவான உதையை அவரே வெற்றிகரமாக உதைந்தார். (ஹெவலொக் 08 – இராணுவப்படை 13)

ஹெவலொக் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடிய இராணுவ அணி, மேலும் ஒரு ட்ரை வைத்து ஹெவலொக் அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்தது. இம்முறை ப்ரொப் நிலை வீரர் அசோக ஜயலால் கம்பங்களின் கீழ் ட்ரை வைத்தார். எனினும் இலகுவான உதையை கயான் தவறவிட்டார். (ஹெவலொக் 08 – இராணுவப்படை 18)

ஹெவலொக் அணி, ட்ரை கோட்டின் அருகில் பந்தை இரு முறை தவறவிட்டு தமக்கான வாய்ப்புகளை தவறவிட்டன. எனினும் செனால் டீலக ஹெவலொக் அணிக்கு முக்கியமான நேரத்தில் முக்கிய ட்ரையை பெற்றுக்கொடுத்தார். எனினும் துலாஜ் வெற்றிகரமாக உதையவில்லை. (ஹெவலொக் 13 – இராணுவப்படை 18)

முதல் பாதியின் இறுதிக் கட்டங்களில் சாமர தாபரே 40 மீட்டர் முன்னோக்கி சென்றதன் மூலம் முன்னிலை அடைந்த ஹெவலொக் அணி, துஷ்மந்த பிரியதர்ஷன மூலமாக ட்ரை ஒன்றைப் பெற்றது. துலாஜ் வெற்றிகரமாக உதைய, முதல் பாதியின் முடிவில் அவ்வணி முன்னிலை பெற்றது.

முதல் பாதி: ஹெவலொக் 20 – 18 இராணுவப்படை

இரண்டாம் பாதி ஆரம்பித்த தருணத்திலேயே இராணுவப்படை அணி, சிறப்பான ட்ரை ஒன்றின் மூலம் மீண்டும் முன்னிலை அடைந்தது. தனுஷ்க தல்வத்த ஹெவ்லொக் அணியின் வீரர்களை கடந்து சென்று அற்புதமான ட்ரை வைத்தார். சாமர தாபரே இவரை தடுக்க முயன்ற பொழுதும் தனுஷ்கவின் வேகத்தை அவரால் தொட முடியவில்லை. எனினும் இதன்போது கயான் உதையை தவறவிட்டார். (ஹெவலொக் 20 – இராணுவப்படை 23)

ஹெவலொக் அணி எதிரணியின் கோட்டையினுள் பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றது. அதனை உதைந்து 3 புள்ளிகளை பெறக்கூடிய வாய்ப்பொன்று இருந்தும், அவ்வணி பந்தை பண்ட் செய்ய முடிவு செய்தது. இதன் மூலம் முன்னோக்கி நகர்ந்த ஹெவலொக் அணி, சில கட்டங்களின் பின்னர் லசிந்து கருணாதிலக மூலம் ட்ரை வைத்தது. துலாஜ் உதையை வெற்றிகரமாக உதைந்தார். (ஹெவலொக் 27 – இராணுவப்படை 23)

அந்த ட்ரையின் சில நிமிடங்களின் பின்னர் இராணுவப்படை அணி வீரர் ஓப் சைட் காணப்பதனால் ஹெவலொக் அணி பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றது. இம்முறை துலாஜ் பெரேரா உதைந்து முக்கியமாக நேரத்தில் 3 புள்ளிகளை ஹெவலொக் அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 30 – இராணுவப்படை 23)

தொடந்து இராணுவப்படை அணி, ஹெவலொக் அணியின் கோட்டைக்குள் நுழைந்து, முன் நோக்கி நகர்கையில் அவ்வணி வீரர் பிரசாத் மதுசங்க ஓப் சைட் காணப்பட்டதனால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன்மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் உதைந்து 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது இராணுவப்படை அணி. (ஹெவலொக் 30 – இராணுவப்படை 26)

எனினும் போட்டியின் இறுதிப் 10 நிமிடங்களுக்கு இராணுவப்படை அணி ஆதிக்கம் செலுத்திய பொழுதும் புள்ளிகளை பெற விடாது ஹெவலொக் வீரர்கள் எதிர்த்தரப்பைத் தடுத்தது. அதற்கு மேலதிகமாக, இறுதி நேரத்தில் ஹிரந்த பெரேரா மூலமாக ட்ரை ஒன்றை வைத்து, துலாஜின் உதையையும் சிறந்த முறையில் பெற ஹெவலொக் அணி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.

முழு நேரம்: ஹெவலொக் 37 – 26 இராணுவப்படை

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – சுதர்ஷன முததந்திரி (ஹெவலொக் அணி)

போட்டி நடுவர் – இர்ஷாட் காதர்

புள்ளிகள் பெற்றோர்

ஹெவ்லொக் அணி

ட்ரை – சுதர்ஷன முததந்திரி, சாமர தாபரே, ஹிரந்த பெரேரா, செனால் டீலாக, லஸிந்து கருணாதிலக்க

கொன்வெர்சன் – துலாஜ் பெரேரா 3

பெனால்டி – துலாஜ் பெரேரா 2

இராணுவப்படை அணி

ட்ரை – கயான் சாலிந்த, அசோக ஜயலால், தனுஷ்க தல்வத்த

கொன்வெர்சன் – கயான் சாலிந்த

பெனால்டி – கயான் சாலிந்த 3