கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 4ஆம் வாரத்திற்கான டயலொக் ரக்பி லீக் போட்டியில் இராணுவ அணியை 25-24 என தோற்கடித்த கடற்படை அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
கடற்படை அணியானது பிரபல வீரர்களான நிவங்க பிரசாத், சத்ய ரணதுங்க மற்றும் ஸ்க்ரம் ஹாப் வீரர் ரிச்சி தர்மபால ஆகியோர் இல்லாத நிலையில் போட்டியை ஆரம்பித்ததுடன், இராணுவ விளையாட்டு கழகத்தின் இரங்க ஆரியபால மீண்டும் அணிக்கு திரும்பியமையானது அவ்வணிக்கு வலுசேர்த்தது.
இராணுவ அணியின் கயான் சாலிந்த போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், அவ்வணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுக் கொண்டது. எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்த நிலையில் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்ததுடன், அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட கயான் தனது உதையின் மூலம் இராணுவ அணிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். (இராணுவ அணி 3 – கடற்படை அணி 0)
இராணுவ அணியின் பந்து கைமாற்றல் தவறினால் கிடைத்த ஸ்க்ரம் மூலம் அழுத்தம் கொடுத்த கடற்படை வீரர்கள், சானக சந்திமாலின் ட்ரொப் கோலின் ஊடாக புள்ளிகளை சமனாக்கினர். (இராணுவ அணி 3 – கடற்படை அணி 3)
அதனை தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கடற்படை அணி லீ கீகலின் மூலம் ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. சானக சந்திமாலிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட லீ, பல தடுப்பாட்ட வீரர்களைத் தாண்டி முன்னேறி, கம்பங்களுக்கடியில் ட்ரை வைத்தார். இலகுவான கன்வெர்ஷன் உதையை திலின வீரசிங்க உதைக்க கடற்படை அணி முன்னிலை பெற்றுக்கொண்டது. (இராணுவ அணி 3 – கடற்படை அணி 10)
எனினும் சளைக்காது போராடிய இராணுவ வீரர்கள் அதிர்ஷ்டவசமாக ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டனர். சானக சந்திமால் சக வீரருக்கு அனுப்பிய பந்தை இடைமறித்த சஞ்சீவ ஹபுகஸ்கும்புற, அசத்தலான ஓட்டத்தின் பின்னர் கம்பங்களின் கீழ் ட்ரை வைத்தார். கயான் லாவகமாக உதைக்க, புள்ளிகள் மீண்டும் சமநிலையாகின. (இராணுவ அணி 10 – கடற்படை அணி 10)
எதிரணியின் பாதியினுள் கிடைத்த பெனால்டியை புள்ளிகளாக மாற்ற எண்ணிய கடற்படை அணி கம்பங்களை நோக்கி உதைக்க முடிவெடுத்தது. இம்முறையும் குறி தவறாத திலின தனது அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். (இராணுவ அணி 10 – கடற்படை அணி 13)
இராணுவ வீரர்களின் தவறினால் மீண்டும் கடற்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்ததுடன், இம்முறை அதனை ட்ரையாக மாற்றிய துலாஞ்சன விஜேசிங்க புள்ளி வித்தியாசத்தை அதிகரித்தார். திலினவின் உதை கம்பங்களை ஊடறுத்துச் செல்ல, கடற்படை அணி 10 புள்ளிகள் முன்னிலையில் முதல் பாதியை நிறைவு செய்தது. (இராணுவ அணி 10 – கடற்படை அணி 20)
முதல் பாதி: இராணுவ அணி 10 – கடற்படை அணி 20
திலின வீரசிங்க இரண்டாம் பாதியை ஆரம்பித்து வைத்ததுடன், அடுத்த 18 நிமிடங்களுக்கு இரண்டு அணிகளாலும் புள்ளிகளைப் பெற முடியவில்லை. இப்பாதியின் ஆரம்பத்தில் கடற்படையணி ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும், சற்றும் எதிர்பாராத வகையில், அபாரமான பந்து கைமாற்றல்களின் பின்னர் இராணுவ அணி அசோக் ஜயலால் ஊடாக ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. கயான் குறி தவறாது உதைக்க, புள்ளி வித்தியாசம் மூன்றாகக் குறைந்தது. (இராணுவ அணி 17 – கடற்படை அணி 20)
அதனைத் தொடர்ந்து போட்டியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இராணுவ அணி வீரர்கள் கடற்படை அணிக்கு கடும் அழுத்தத்தை வழங்கினர். இதன் பிரதிபலனாக, பலரும் அதிர்ச்சியடையும் வகையில் இரங்க ஆரியபால மூலம் இராணுவ அணி ட்ரை வைத்து அசத்தியது. கடினமான கன்வெர்ஷன் உதையை கயான் சாலிந்த சிறப்பான வகையில் உதைக்க, இராணுவ அணி முன்னிலை பெற்றது. (இராணுவ அணி 24 – கடற்படை அணி 20)
இப்பருவகாலத்தில் ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாத கடற்படை அணி தனது வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள முழு மூச்சுடன் போராடியது. போட்டியின் இறுதி 5 நிமிடங்கள் விறுவிறுப்பாக மாறியதுடன் கடற்படை அணி ட்ரை கோட்டை நோக்கி முன்னேறியது. சிறப்பான ஓட்டத்தின் மூலம் புத்திம பியரத்ன கோல் கோட்டை நெருங்க, எதிரணி வீரர் ஆரியபால விட்ட தவறை சரியாக பயன்படுத்திக் கொண்ட லீ கீகல் கடற்படை அணி சார்பாக ட்ரை வைத்தார். திலின உதையை தவறவிட்ட போதிலும் கடற்படை அணி ஒரு புள்ளியினால் முன்னிலை பெற்றுக் கொண்டது. (இராணுவ அணி 24 – கடற்படை அணி 25)
போட்டி நிறைவடைய சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில் இராணுவ அணியினால் புள்ளிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பேதும் கிடைக்கவில்லை. அதன்படி விறுவிறுப்பான போட்டியை ஒரு புள்ளியினால் கடற்படை அணி வெற்றிகொண்டது.
முழு நேரம்: இராணுவ அணி 24 – கடற்படை அணி 25
thepapare.com இன் ஆட்ட நாயகன்: லீ கீகல்
இப்போட்டி தொடர்பாக கடற்படை அணியின் பயிற்றுவிப்பாளர் மோதிலால் ஜயதிலக்க கருத்து தெரிவிக்கையில், “எமது பாதியினுள் நாம் அதிகளவு நேரம் பந்தை தக்கவைத்திருந்ததும், இரண்டாவது பாதியில் கிடைத்த சில ட்ரை வாய்ப்புக்களை தவற விட்டதுமே போட்டி இவ்வாறு மிக நெருக்கமாக முடிந்ததற்கான காரணம்” என்றார்.
அத்துடன் அணியில் புதுமுக வீரர்கள் இடம்பெற்றதை பற்றி தெரிவிக்கையில், “அனைத்து மாற்றங்களும் வீரர்களின் உபாதை காரணமாகவே ஏற்படுத்தப்பட்டன, போட்டி உபாயமாகவோ ஓய்வளிக்கும் முகமாகவோ அல்ல” எனக் கூறினார்.
புள்ளிகளைப் பெற்றோர்
இராணுவ அணி – 24
சஞ்சீவ ஹபுகஸ்கும்புற – 1T
அசோக் ஜயலால் – 1T
இரங்க ஆரியபால – 1T
கயான் சாலிந்த – 3C 1P
கடற்படை அணி – 25
லீ கீகல் – 2T
துலாஞ்சன விஜேசிங்க – 1T
திலின வீரசிங்க – 2C 1P
சானாக சந்திமால் – 1DG
NAVY SC VS ARMY SC MATCH REPLAY