ஹொங் கொங் கிங்ஸ் பார்க் உள்ளக ஹொக்கி அரங்கில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண சுற்றுத் தொடரில் B குழுவிற்கான போட்டிகளில், தமது மூன்றாவதும் இறுதியுமான தாய்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி 2-௦ என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மிகவும் விறுவிறுப்பான இந்த போட்டியில் சமபலம் மிக்க தாய்லாந்து அணியின் தடுப்பு வீரர்களை ஊடுறுத்து முதல் கோலினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை ஹொக்கி அணிக்கு 57 நிமிடங்கள் தேவைப்பட்டது.
இசங்க டொரனேகல போட்டியின் 57ஆவது நிமிடத்தில் தனக்குக் கிடைக்கப் பெற்ற பெனால்டி கோணர் வாய்ப்பினை கோலாக மாற்றிக்கொண்டார். அதனை தொடர்ந்து மூன்று நிமிட இடைவெளியில் சாமிக்க குணவர்தன போட்டியின் 6௦ஆவது நிமிடத்தில் தமது அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல் மறுமுனையில் தாய்லாந்தின் தாக்குதல் முயற்சிகளை திறமையாக தடுத்து, கடந்த போட்டியில்போல் எதிரணிக்கு கோல்களை போட விடாமல் சவால் கொடுத்த இலங்கை வீரர்கள் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டதால், ஆட்ட நேரம் முடியும் வரை தாய்லாந்து அணியினரால் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது.
இதன்படி, 7 புள்ளிகளுடன் தாம் பெற்றுகொண்ட கோல்களின் அடிப்படையில் இலங்கை ஹொக்கி அணி B குழுவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. எனவே, A குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஹொங் கொங் அணியினை நாளை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது
அதேநேரம், 2008இல் சம்பியன் பட்டம் வென்ற பங்களாதேஷ் அணி A குழுவில் முதல் இடத்தைப் பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதோடு, அவ்வணி B குழுவில் இரண்டாம் இடம் பெற்றுக்கொண்ட சிங்கப்பூர் அணியுடன் நாளை சனிக்கிழமை அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளது.