கோலியின் துடுப்பாட்டம், அஷ்வினின் பந்து வீச்சு என்பவற்றால் சுருண்டது இங்கிலாந்து

359
India v England, 2nd Test Match

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராத் கோலியின் அபார துடுப்பாட்டம் மற்றும் அஷ்வினின் துல்லியமான பந்து வீச்சு என்பவற்றினால் இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் ஏற்கனவே ராஜ்கோட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி முதலாவது இன்னிங்சுக்காக 129.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 455 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முதல் இன்னின்சுக்காக சதம் கடந்த அணித்தலைவர் விராத் கோலி 167 ஓட்டங்களையும், அர்விந்த் புஜாரா 119 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக இந்திய அணிக்கு பதிவு செய்தனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் முறையே 62, 98 ஓட்டங்களுக்கு தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சிற்காகக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 2௦௦ ஓட்டங்களால் பின்னிலை அடைந்தது.

இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோன்னி பிறஸ்டோவ் ஆகியோர் அரைச் சதம் கடந்தனர். பந்து வீச்சில் வழமை போல் அசத்திய ரவிச்சந்திரன் அஷ்வின் 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் போட்டியில் வெற்றி பெறும் அதிக எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய இந்திய அணி 63.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. எனினும் தமது முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற ஓட்டங்களையும் சேர்த்து அவ்வணி 404 ஓட்டங்களால் இங்கிலாந்தை விட முன்னிலை பெற்றது.

முதல் இன்னின்சில் சதம் பெற்ற விராத் கோலி இரண்டாம் இன்னிங்சிலும் சிறப்பாகத் துடுப்பாடி 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். பந்து வீச்சில் ஸ்டுவட் ப்ரோட் மற்றும் ஆதில் ரஷிட் தங்களுகிடையில் தலா 4 விக்கெட்டுக்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் 405 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு நேற்றைய நாள் களமிறங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் ஐந்தாவதும் இறுதி நாளுமான இன்று 8 விக்கெட்டுக்கள் கையிருப்பில் இருக்க, வெற்றி பெற 318 ஓட்டங்கள் தேவையாக இருந்த நிலையில் இங்கிலாந்து அணி துடுப்பாடக் களமிறங்கியது.

எனினும் அவ்வணி 97.3 ஓவர்களில் 158 ஓட்டங்களுக்கே தமது சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  இரண்டாம் இன்னின்சில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் அறிமுக வீரர் ஜெயந்த் ஜாதவ் ஆகியோர் செயற்பட்டனர். அவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், முஹம்மத் சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் நம்பி இருந்த அனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கு நடையைக் கட்ட குக் மாத்திரம் 54 ஓட்டங்களைப் பெற்றார். இதன் காரணமாக போட்டி நிறைவில் இந்திய அணி 246 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்களிலும் மொத்தமாக 248 ஓட்டங்களை விளாசிய விராத் கோலி தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என  முன்னிலை வகிக்கிறது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்): 455(129.4)விராத் கொஹலி 167, அர்விந்த் பூஜார 119, ரவிச்சந்திரன் அஷ்வின் 58, ஜெம்ஸ் அன்டர்சன் 62/3(2), மொய்ன் அலி 98/3(25), ஆதில் ரஷிட் 11/2(34.4)

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்): 255(102.5) – பென் ஸ்டோக்ஸ் 7, ஜோ ரூட் 53, ஜோனி பிறஸ்ஸ்டோவ் 53, ரவிச்சந்திரன் அஷ்வின் 67/5(29.5) 

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்): 204(63.1) – விராத் கோலி 81, ஜெயந்த் ஜாதவ் 27*, அஜின்கியா ரஹானே 26(65), ஸ்டுவட் ப்ரோட் 33/4(14), அடில் ரஷிட் 82/4(24)

இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்): 158(97.3) அலிஸ்ஸ்டேயர் குக் 54,  ஜோனி பிறஸ்ஸ்டோவ் 34*, ரவிச்சந்திரன் அஷ்வின் 52/3(3), ஜெயந்த் ஜாதவ் 3/3(11.3)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 3௦ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.