இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கு கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டியது.
இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் காயம் காரணமாக ஜிம்பாப்வே சுற்றிற்கான இலங்கைக் குழாமில் இடம்பெறாத நிலையில், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் 19ஆவது அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகிய இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணித் தலைவர் உபுல் தரங்க களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சுக்கு உகந்ததாக அமைத்திருந்த இந்த ஆடுகளத்தில், ஜிம்பாப்வே அணி 50 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 1௦௦ ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்ற ஒரு இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும், ஏழாவது விக்கெட்டுக்காக பீட்டர் மோருடன் இணைந்து கொண்ட அணித்தலைவர் கிரேம் கிரீமர் 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
பீட்டர் மோர் 47 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து சென்றார். அணித்தலைவர் கிரேம் கிரீமர் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். எனவே ஜிம்பாப்வே அணியினரால் தமது இன்னிங்சிற்காக 41.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சகலதுறை ஆட்டக்காரர் அசேல குனரத்ன தனது முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே ஓப் கட்டர் பந்து வீச்சின் மூலம் இறுதி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
நீண்ட இடைவேளைக்கு பின் இலங்கை அணியுடன் இணைந்து கொண்ட நுவன் குலசேகர, சுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் இணைந்து 17.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணியின் 6 முன்னிலை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் மூவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து 155 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 24.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 41 ஓட்டங்களையும் இலங்கை அணிக்கு கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர்.
தனஞ்சய டி சில்வா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனினும் அந்தப் பந்து ”நோ போல்” என்பதனால் அவருக்கு தொடர்ந்து ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் சிறந்த பயன் பெற்றார் என்பது முக்கிய விடயமாகும்.
சிம்பாவே அணிக்காக பந்து வீச்சில் டினஷே பண்யன்கர மற்றும் சம்மு சிபாபா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே அணி: 154 (41.3) – கிரேம் கிரீமர் 31*, பீட்டர் மோர் 47(73), டொனால்ட் த்ரிப்பனோ 19(40), அசேல குனரத்ன 21/3(6.3), நுவன் குலசேகர 23/2(8), சுரங்க லக்மால் 19/2(7), நுவான் பிரதீப் 21/2(7)
இலங்கை அணி: 155/2 (24.3) தனஞ்சய டி சில்வா 78*(75), நிரோஷன் திக்வெல்ல 41(38) குசல் ஜனித் பெரேரா 21(27) டினஷே பண்யன்கர 37/1(7.3) சம்மு சிபாபா 18 /1(2)
போட்டியின் ஆட்ட நாயகன் – தனஞ்சய டி சில்வா
இத்தொடரில் இலங்கை அணி விளையாடும் அடுத்த போட்டியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டி நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஹராரேயில் நடைபெறவுள்ளது.