சுவாரசியமான போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற புனித பெனடிக்ட் கல்லூரி

471
U19 Schools Roundup - 12th of Nov

19 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளிற்கு இடையிலான ‘சிங்கர்’ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த ஸாஹிரா கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரி அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியினை சுவீகரித்துள்ளது.

இன்று நடைபெற்று முடிந்த ஏனைய போட்டிகளில், புனித தோமியர் கல்லூரி வெற்றி பெற்றதுடன், புனித பேதுரு கல்லூரி மற்றும் மலியதேவ கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துள்ளன.

ஸாஹிரா கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

நேற்று ஆரம்பமாகிய இந்த போட்டியில், ஏற்கனவே ஸாஹிரா கல்லூரி அணி தங்களது முதல் இன்னிங்சிற்காக 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சிற்காக புனித பெனடிக்ட் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்றிருந்தபோது நேற்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து ஸாஹிரா கல்லூரியை விட 34 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்று தங்களது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணியினர் 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.  

துடுப்பாட்டத்தில் புனித பெனடிக்ட் கல்லூரி அணி சார்பாக அதிகபட்சமாக சனிக்க நிர்மல் 28 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் இன்று சிறப்பாக செயற்பட்ட முஹம்மட் ஹஸ்மி 23 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

இதனை தொடர்ந்து, தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி அணியினர் 43.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்றனர். இன்றைய துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட சஜித் சமீர 42 ஓட்டங்களை ஸாஹிரா கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்தோடு முஹம்மட் ஸப்கி 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்து வீச்சில், நேற்று போன்று தனது அபாரத்தை இன்றும் வெளிப்படுத்திய கவீஷ் ஜயத்திலக்க  37 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை புனித பெனடிக்ட் கல்லூரி அணி சார்பாக கைப்பற்றியிருந்தார். இவருடன் சேர்த்து மகேஷ் தீக்சன 34 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து வெற்றி இலக்காக 125 ஓட்டங்கள் தீர்மானிக்கப்பட்ட நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணியினரின் விக்கெட்டுக்களும் மிக வேகமாக வீழ்ந்துகொண்டு செல்ல போட்டி மிகவும் விறுவிறுப்பாகியது. எனினும் அவ்வணியினர் 28.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

இந்த வெற்றி இலக்கினை அடைய, துலந்த லூயிஸின் 62 ஓட்டங்கள் பெரும் உதவியாக இருந்தது எனலாம்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 136/10(47.5) – சஜித் சமீர 39, முஹம்மட் நஜாத் 29, கவீஷ் ஜயத்திலக்க 4/34, மஹேஷ் தீக்ஷன 2/34

புனித பெனடிக்ட் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 136/10(49.1) – சனிக்க நிர்மல் 28, அஷன் சில்வா 26, சஜித் சமீர 3/19, முஹம்மட் நஜாஷ் 2/30

ஸாஹிரா கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 124/10(43.5), சஜித் சமீர 42, முஹம்மட் ஸப்கி 25, கவீஷ் ஜயத்திலக்க 5/37, மஹேஷ் தீக்ஷன 3/34

புனித பெனடிக்ட் கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 125/7(28.2) – துலந்த லூயிஸ் 62

போட்டி முடிவு – புனித பெனடிக்ட் கல்லூரி அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி


புனித தோமியர் கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி

நேற்று ஆரம்பமாகியிருந்த குழு A இற்கான இந்த போட்டியில், தங்களது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியிருந்த தர்மசோக கல்லூரி அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களை பெற்று 13 ஓட்டங்களால் எதிரணியை விட  பின்தங்கி இருந்தபோது போட்டியின் நேற்றைய ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது.

இதனை அடுத்து இன்றைய நாளில், தங்களது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த இவர்கள், 55.2 ஓவர்களில் 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தங்களது முதலாவது இன்னிங்ஸ் போல் குறைவான ஓட்ட எண்ணிக்கையுடன் இரண்டாவது இன்னிங்சினையும் முடித்துக்கொண்டனர்.

இதனையடுத்து, இலகு வெற்றியிலக்கான 43 ஓட்டங்களை பெற தங்களது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி அணியினர் 12 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.

ஏற்கனவே தர்மசோக கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சில் 91 ஓட்டங்களையும் புனித தோமியர் கல்லூரி அணி146 ஓட்டங்களையும் என இரு தரப்பும் குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கையையே பெற்றது.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 91/10(31.3) – கவீஷ் குமார 41, டிலோன் பீரிஸ் 4/20, பவித் ரத்னநாயக்க 4/36

புனித தோமியர் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 146/10(43.4) – கவிந்து கொடித்துவக்கு 72, கவிநது நதீசன் 6/35

தர்மசோக கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 97/10(55.2), ஹர்சஜித் ருசன் 26, துலிப் குணரத்ன 3/12, ரவிந்து கொடித்துவக்கு 3/14, பவித் ரத்னநாயக்க 3/39

புனித தோமியர் கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 43/2(12), ரவிந்து கொடித்துவக்கு 27*

போட்டி முடிவு – புனித தோமியர் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி


புனித ஜோசப் கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

நேற்று ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியில் 300 ஓட்டங்கள் என்ற சவலான மொத்த ஓட்ட எண்ணிக்கையை பெற்று தங்களது முதல் இன்னிங்சினை புனித ஜோசப் கல்லூரியினர் நிறைவு செய்திருந்த வேளையில், அவர்களை விட 238 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு விக்கெட்டினை இழந்து 62 ஓட்டங்களை மலியதேவ கல்லூரி அணியினர் பெற்றிருந்த போது போட்டியின் நேற்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து இன்று தங்களது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்த அவர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டு தங்களது முதல் இன்னிங்சிற்காக 104.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 403 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்சினை வலுவான நிலையுடன் நிறுத்திக்கொண்டனர்.

இந்த சிறப்பான மொத்த ஓட்ட எண்ணிக்கையை பெறுவதற்கு, சதம் கடந்து துலாஜ் ரணதுங்க பெற்ற 118 ஓட்டங்கள் பெரிய உதவியாக இருந்தது. இவருடன் சேர்த்து கவீன் பண்டார 65 ஓட்டங்களையும், தினஞ்சய பிரேமரத்ன 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்கள்.

பந்து வீச்சில் புனித ஜோசப் கல்லூரி அணி சார்பாக தினேத் ஜயக்கொடி 66  ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனை தொடர்ந்து, 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பம் செய்த புனித ஜோசப் கல்லூரியினர் விக்கெட் இழப்பு எதுவுமின்றி, 8 ஓவர்கள் நிறைவில் 38 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டி நேரம் நிறைவுற்றது. இதனால், இப்போட்டி சமநிலையானது. எனினும் முதல் இன்னிங்ஸ் வெற்றியை மலியதேவ கல்லூரி அணி சுவீகரித்துக்கொண்டது.

போட்டி சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்:): 300/9d(77), ரெவான் கெல்லி 91, தினேத் மதுரவெல 40, பிரியன் சந்திரசேன 3/24, கவீன் பண்டார 2/22

மலியதேவ கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்:): 403/7d(104.4), துலாஜ் ரணதுங்க 118, கவீன் பண்டார  65, தினஜய பிரேமரத்ன 68, தினேத் ஜயக்கொடி 3/66

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்: 38/0(8)

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. மலியதேல கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித பேதுரு கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

நேற்று ஆரம்பமாகிய குழு A இற்கான இந்த போட்டியில் நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது, நாலந்த கல்லூரி அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்று முதலாவது இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலதிக 21 ஓட்டங்கள் பெறவேண்டும் என்கிற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று தங்களது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்த நாலந்த கல்லூரி அணியினர் 57 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சுஹங்க விஜயவர்த்தன 47 ஓட்டங்களையும், லக்சித ராசஞ்சனா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தினர்.

பந்து வீச்சில் சச்சின் சில்வா சிறப்பாக செயற்பட்டு 21 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனை அடுத்து, தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பம் செய்த புனித ஜோசப் கல்லூரி அணியினர் 71.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றனர். புனித ஜோசப் கல்லூரி அணி சார்பாக சந்துஷ் குணத்திலக்க அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், அனிஷ்க பெரேரா 28 ஓட்டங்களையும் இன்றைய ஆட்டத்தில் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில், ஏற்கனவே துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சுஹங்க விஜயவர்த்தன 36 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த நாலாந்த கல்லூரி அணியினர், 16 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், இன்றைய போட்டியின் ஆட்ட முடிவு நேரம் வந்ததால் இன்றைய போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இதனால், முதல் இன்னிங்ஸ் வெற்றியினை புனித ஜோசப் கல்லூரி அணி சுவீகரித்துக்கொண்டது.

போட்டி சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 139/10(38) – சந்துஷ் குணத்திலக்க 48, மனேல்க டி சில்வா 38, கலான பெரேரா 5/44, உமேக்ஷ தில்ஷான் 4/29

நாலாந்த கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 133/10(57), சுஹங்க விஜயவர்த்தன 47, லக்ஷித ராசஞ்சனா 27, சச்சின் சில்வா 4/21, மனேல்க டி சில்வா 2/20

புனித ஜோசப் கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 184/10(71.1), சந்துஷ் குணத்திலக்க 39, அனிஷ்க பெரேரா 28, சுஹங்க விஜயவர்த்தன 3/36

நாலந்த கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 50/3(16) – லக்ஷித ராசஞ்சன 18, சந்துஷ் குணத்திலக்க 2/14

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித ஜோசப் கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி