ரங்கன ஹேரத் தலைமையில் முதல் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டது இலங்கை அணி

946
Sri Lanka v Z
AFP PHOTO / Jekesai Njikizana

ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அவ்வணியுடன் விளையாடிய இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 257 ஓட்டங்களினால் வெற்றி கொண்டமையினால், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் அஞ்செலோ மதிவ்ஸ் பங்குபற்றாத காரணத்தால் தலைமை பொறுப்பு ரங்கன ஹேரத்திற்கு வழங்கப்படது. அவர் இலங்கை அணியை மிக திறமையாக வழிநடத்தியமையினால், தனது முதலாவது தலைமைப் பொறுப்பிலேயே அணியை தொடரில் முழுமையாக வெற்றி பெறச் செய்துள்ளார்.  

ஜிம்பாப்வே அணி நேற்றைய நாள் ஆட்ட முடிவின்பொது, 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  ஏற்கனவே அரைச்சதம் கடந்த நிலையில் சிறப்பாக துடுப்பாடிய கிரேக் எர்வின் பல எதிர்பார்ப்புகளுடன் இன்று ஐந்தாவதும் இறுதியுமான நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். எனினும் நிதான ஆட்டத்தினை இன்று வெளிப்படுத்த தவறியதால் இலங்கை அணித் தலைவர் ரங்கன ஹேரத்தின் சுழலில் சிக்குண்டு ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த தனஞ்சய டி சில்வாவிடம் பிடி கொடுத்து 64 ஓட்டங்களுக்கு அவர் ஆட்டமிழந்தார்.

கிரேக் எர்வின் ஆட்டமிழப்புடன் எஞ்சிய இரு விக்கெட்டுகளும் மேலதிகமாக சிறிய அளவு  ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ரங்கன ஹெரத்தினால் அடுத்தடுத்து வீழ்த்தப்பட, 233 ஓட்டங்களுக்கு ஜிம்பாப்வே அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவுக்கு வர போட்டியும் நிறைவு பெற்றது.

ஏற்கனவே இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 504 ஓட்டங்களையும், ஜிம்பாப்வே அணி 272 ஓட்டங்களையும் பெற்றிருந்தது. பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

எனவே போட்டியின் நிறைவில் இலங்கை அணிக்கு 257 ஓட்டங்களினாலான வெற்றி கிட்டியது.

பந்து வீச்சில் மிகவும் சிறந்த முறையில் தனது பங்களிப்பை வழங்கிய ரங்கன ஹேரத், இப்போட்டியில் மொத்தமாக 152 ஓட்டங்களை வழங்கி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, அவருக்கு இது டெஸ்ட் போட்டிகளில் எழாவது முறையாகவும் 1 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய சந்தர்ப்பமாக அமைகின்றது. மேலும், அவர் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அது தவிர ஜிம்பாப்வே அணியுடனான இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத், கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து உடைய ஒன்பது அணிகளுக்கும் எதிராக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக தன்னைப் பதிவு செய்துகொண்டார். இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகிய பந்து வீச்சாளர்களே இந்த சாதனையை புரிந்திருந்தனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத் இதுவரை 28 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து வீரர் இயன் போத்தமின் சாதனையை முந்திச் சென்றார்.

ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணி 225 ஓட்டங்களினால் வெற்றி கொண்டிருந்தமையும் நினைவு கூறத்தக்கது. இந்நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 வெற்றிகள் பெற்றதன் மூலம்  இலங்கை அணி பெற்ற இரண்டாவது நீண்ட வெற்றியாக இது பதிவாகின்றது. இதற்கு முன்னதாக 2000-2001ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தமையே இலங்கை அணியின் நீண்ட தொடர் டெஸ்ட் வெற்றியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் : ரங்கன ஹேரத்

தொடரின் நாயகன் : திமுத் கருணாரத்ன

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 504(144.4) – அசேல குணரத்ன 116(193), தனஞ்சய டி சில்வா 127(245), உபுல் தரங்க 79(155), கௌஷல் சில்வா 37(73), ஹெமில்டன் மசகட்ஸா 34/2(13), க்றிஸ் 92/1(23), டொனால்ட் திரிபனோ 91/3(32), கிரேம் கிரீமர் 136/3(40)

ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) : 272(82.1) – பிரையன் சாரி 80(158), க்ரெய்க் எர்வைன் 64(112), சோன் வில்லியம்ஸ் 58(93), ரங்கன ஹேரத் 89/5(26) தில்ருவன் பெரேரா 51/3(18), சுரங்க லக்மால் 55/2(21.1)

இலங்கை அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 258/9(81.4) – திமுத் கருணாரத்ன 88(208),குசல் ஜனித் பெரேரா 62(69), அசேல குணரத்ன 39(92), சுரங்க லக்மால் 21*(18), கார்ல் மும்பா 67/3(19), கிரேம் கிரீமர்  91/4(21.4) டொனால்ட் திரிபனோ 14/1(11)

ஜிம்பாப்வே அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 233 (58) – கிரேக் எர்வின் 72(121),  சோன் வில்லியம்ஸ் 45(47), பீட்டர் மூர் 20(30), ரங்கன ஹேரத் 63/8(23) லஹிறு குமார 42/1(9), தனஞ்சய டி சில்வா 10/1(3)

இந்த டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் ஹாராரேயில் மோதுகின்றன.