ஹீத்தர் நைட்டின் சிறந்த சகலதுறை ஆட்டத்தினால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து மகளிர் அணி

787
sl v eng

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியினர், இலங்கை மகளிர் அணியுடன் நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். இதில் இன்று நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையிலான  முதலாவது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இலங்கை மகளிர் அணியினை இலகுவாக வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணியினர் தொடரை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இன்று காலை கொழும்பு எஸ்.எஸ்.சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி இனோகா ரணவீர, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

ஹீத்தர் நைட் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் பந்து வீச்சளரான பெத் லங்ஸ்ட்டன் முதல்முறையாக சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் பிரவேசித்தார்.

அண்மைய அவுஸ்த்திரேலிய மகளிர் அணியுடனான தொடரில் இலங்கை மகளிர் அணி படுதோல்வியடைந்ததன் காரணமாக, இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டித்தொடர் இலங்கை மகளிர் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகஅமைகின்றது.

போட்டியில் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணியினர், ஆரம்பம் முதல் நிதானமான துடுப்பாட்டம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கை மகளிர் அணியின் முதலாவது விக்கெட்  50  ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், இங்கிலாந்து மகளிர் அணித்தலைவி ஹீத்தர் நைட்டின் பந்தில் பறிபோனது.

இதன் காரணமாக, அண்மைய மாகாண ரீதியிலான T20 சம்பியன்ஷிப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஹாஷினி பெரேரா 55 பந்துகளிற்கு 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து இவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக வந்திருந்த நிபுனி ஹன்சிக்காவும், அணி மேலதிகமாக சொற்ப ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளையில் 26  ஓட்டங்களுடன் வெளியேறpனார். ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளை இழந்த இலங்கை மகளிர் அணி தடுமாற தொடங்கியது.

அதன் பின்னர் இலங்கை மகளிர் அணி குறைவான ஓட்ட வேகத்தில் ஓட்டங்களை பெற ஆரம்பித்தது. ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அதிக பந்துகளை சந்தித்த போதும், எந்த வீராங்கனையினாலும் 30 ஓட்டங்களை தாண்ட முடியவில்லை. இந்த குறைவான ஓட்ட வீதத்துடன் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளிற்கு பின்னால் வந்த விக்கெட் காப்பாளர் டிலானி மனோதரா அதிகபட்சமாக 46 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 27 ஓட்டங்களையும், சாமரி அத்தபத்து, பிரசாதினி வீரக்கொடி ஆகியோர் தலா 24 ஓட்டங்களையும் இலங்கை மகளிர் அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி ஹீத்தர் நைட் 8 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், கேத்தரின் பிரண்ட் 10 ஓவர்களை வீசி 35 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், இன்றைய அறிமுக வீராங்கனை பெத் லங்ஸ்ட்டன், டேனியல் ஹசேல், அலெக்ஸ் ஹார்ட்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இலகு வெற்றி இலக்கான 169 ஓட்டங்களை நோக்கி தங்களது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இங்கிலாந்து மகளிர் அணியினர் வெற்றி இலக்கை 123 பந்துகள் மீதமிருக்க 29.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பெற்றனர்.

துடுப்பாட்டத்தில்  இங்கிலாந்து மகளிர் அணி சார்பாக ஏற்கனவே பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட அணித்தலைவி ஆட்டமிழக்காமல் 47 பந்துகளிற்கு 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 45 ஓட்டங்களை பெற்றார். இந்த இலகு வெற்றி இலக்கை அடைய உதவிய மற்றைய வீராங்கனைகளான நாட்டாலி ஸ்க்கீவர் 40 பந்துகளிற்கு 7 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான டம்மி பீமொன்ட் 49 பந்துகளிற்கு 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில், இலங்கை மகளிர் அணி மோசமாக செயற்பட்ட போதும், சாமரி அத்தபத்து மற்றும் அணித்தலைவி இனோகா ரணவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றி ஆறுதல் அளித்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து மகளிர் அணி முன்னிலை வகிக்கின்றது.

இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி: 168/7(50) – டிலானி மனோதரா 27(46), நிப்புனி ஹன்சிகா 26(51), ஹாசினி பெரேரா 26(55), ஹீத்தர் நைட் 29/2(8), கேத்தரின் பிரண்ட் 35/2(10)

இங்கிலாந்து மகளிர் அணி: 171/2(29.3) – நாட்டாலி ஸ்கிவர் 47*(40), ஹீத்தர் நைட் 45*(47), சாமரி அத்தபத்து 23/1(7)

போட்டி முடிவு: இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

1st ODI Highlights – England Women vs Sri Lanka Women