2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி வலுவான நிலையில்

1336
SLv ZIM test day 2

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 35 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக இரண்டாம் நாளான இன்று 29௦ ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கியது. நேற்றைய நாள் ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்சய டி சில்வா 100*(197), மற்றும் அசேல குணரத்ன 13*(29) தமது ஆட்டத்தினை தொடர்ந்தனர்.

தனஞ்சய டி சில்வா 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அசேல குணரத்ன தனது முதலாவது சதத்தினை இறுதி விக்கெட்டுக்காக இணைந்த லஹிறு குமாரவுடன் போராடி பெற்றுக்கொண்டார். இறுதியில் 193 பந்துகளுக்கு 116 ஓட்டங்களுடன் சோன் வில்லியம்சின் பந்து வீச்சில் பீட்டர் மூரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே அணிக்காக சிறப்பாக பந்து வீசிய டொனால்ட் திரிபனோ மற்றும் அணித் தலைவர் கிராம் கிரிமர் தலா மூன்று விக்கெட்டுகளை தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.

இலங்கை அணி முதல் இனிங்ஸிற்காகப் பெற்றுக் கொண்ட 5௦4 ஓட்டங்களுக்குப் பதிலாக தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ரங்கன ஹேரத்தின் சுழல் பந்து வீச்சில் சிக்குண்டு 17 ஓட்டங்களில், அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், மூன்றாவது விக்கெட்டுக்காக பிரையன் சாரியுடன் இணைந்து கொண்ட க்ரெய்க் எர்வைன் இருவரும் நிதான ஆட்டதினை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிகையை உயர்த்தினர். சிறப்பாகத் துடுப்பாடிய பிரையன் சாரி 6௦ ஓட்டங்களையும் மற்றும் க்ரெய்க் எர்வைன் 6௦ ஓட்டங்களையும் எடுத்து தங்களுகிடையே இணைப்பாட்டமாக 1௦9 ஓட்டங்களை ஆட்ட நேர முடிவின் போது பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 11 ஓவர்கள் பந்து வீசி 44 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் ஏனையோரால் எந்தவிதமான விக்கெட்டுகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதே வேளை காலம் சென்ற சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளருமான  டபிள்யூ. டி. அமரதேவ அவர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் இலங்கை வீரர்கள் அனைவரும் கைகளில் கருப்பு நிறத் துண்டு அணிந்து விளையடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 5௦4 (144.4) அசேல குணரத்ன 116(193), தனஞ்சய டி சில்வா 127(245), உபுல் தரங்க 79(155), கௌஷல் சில்வா 37(73), ஹெமில்டன் மசகட்ஸா 34/2(13), க்றிஸ் 92/1(23), டொனால்ட் திரிபனோ 91/3(32), கிரேம் கிரீமர் 136/3(4௦)

ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) : 126/2 (35) பிரையன் சாரி 6௦(1௦௦), க்ரெய்க் எர்வைன் 6௦(92), ரங்கன ஹேரத் 44/2 (11)