விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் செயற்படும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் மாவட்டம் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ”க்ரீடா சக்தி” நிகழ்ச்சித் திட்டத்திற்கு, அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளது.
க்ரீடா சக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அம்பாரை மாவட்டத்திற்கான மெய்வல்லுனர் பயிற்சிகளுக்கு 18 வயதுக்குட்பட்ட வீரா்கள் 20 பேரும், 15 வயதுக்குட்பட்ட வீரர்கள் 20 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மத்திய நிலையத்தில் எதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன.
இந்தப் பயிற்சித் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வொன்று அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.கமருதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்தோடு, விளையாட்டுத் துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 40 மெய்வல்லுனர் வீரா்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிராமப்புறங்களில் உள்ள இளம் வீரா்களை இனம்கண்டு அவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை சிறந்த வீரர்களாக தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதற்காகவே விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, இப்பயிற்சிகளில் கலந்து கொள்கின்ற வீரா்களுக்கு போசனை உணவிற்காக மாதமொன்றிற்கு 1,500 ரூபாய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்