சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஹராரே நகரில் உள்ள ஹராரே விளையாட்டு கழக சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின்புதிய அணித்தலைவர் (14 ஆவது) ரங்கன ஹேரத் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பாக சகலதுறை வீரர் அசேல குணரத்னவும், இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயற்பட்ட பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும் தங்களது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர். சிம்பாப்வே அணியன் பந்து வீச்சாளர் கார்ல் மும்பாவிற்கும் இது முதலாவது போட்டியாகும்.
2004ஆம் ஆண்டின் பின்னர் சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவென்பதாலும், சிம்பாப்வே அணியின் நூறாவது டெஸ்ட் போட்டி என்பதாலும் இந்த டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது.
இதனைத் தொடர்ந்து நாணய சுழற்சியின் முடிவுக்கு அமைவாக இலங்கை அணி திமுத் கருணாரத்ன, கெளஷல் சில்வா என்கிற தனது வழமையான டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுடன் இன்றைய போட்டியையும் ஆரம்பம் செய்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றினை மதிய உணவு இடைவேளை வரை தந்தனர். மதிய உணவு இடைளையின் போது இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்த இடைவேளையின் பின்னர் ஆரம்பித்த போட்டியின் இரண்டாவது பகுதிநேரத்தின் போது 37.3 ஓவர்கள் நிறைவில் 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இலங்கை அணி தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன தனது அரைச்சதத்தைக் கடந்து 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக சிறப்பான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 பந்துகளுக்கு 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சுழல் பந்து வீச்சாளர் கிரேம் கிரம்மரின் பந்தில் டினோ மாவோயோவிடம் பிடிகொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இது அவரது 9ஆவது அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்து இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் குசல் பெரேரா உடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளஷல் சில்வா இணைந்து மிகவும் நல்லதொரு இணைப்பாட்டத்தை இரண்டாவது விக்கெட்டுக்காக வழங்கினார்கள். இந்த நிலையில் தேநீர் இடைவேளையின் பின்னர் 11 பவுண்டரிகள் உடன் 194 பந்துகளுக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த கெளஷல் சில்வா மல்கோம் வல்லரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து தனது சதத்தை பூர்த்தி செய்யத் தவறினார். இவருடன் துடுப்பாட்ட வீரராக நின்றிருந்த குசல் பெரேரா மிகவும் சிறப்பான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி தனது கன்னி டெஸ்ட் சதத்தினை 104 பந்துகளில் பூர்த்தி செய்தார். இந்த நிலையிலேயே கெளஷல் சில்வாவின் பின்னர் களத்திற்கு வந்திருந்த, அண்மையில் நடைபெற்று முடிவடைந்த அவுஸ்திரேலிய தொடரில் அசத்திய குசல் மெண்டிஸின் விக்கெட் பறிபோனது. கிரேமரின் பந்தில் விக்காட் காப்பாளர் பீட்டர் மூரிடம் பிடிகொடுத்து 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 50 பந்துகளுக்கு 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி 300 ஓட்டங்களைக் கடந்த நிலையில் 2 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் உடன் 121 பந்துகளுக்கு 110 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது குசல் பெரேரா கிரேமரின் பந்து வீச்சில் நான்காவது விக்கட்டாக ஆட்டமிழந்து சென்றார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் இன்றைய சிறப்பான ஆட்டம் மற்றும் குசல் பெரேராவின் சதம் என்பவற்றின் துணையுடன் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 90 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இன்றைய ஆட்ட நேர முடிவின் போது ஆட்டமிழக்காமல் உபுல் தரங்க 13 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக கிரேம் கிரமர் 21 ஓவர்களை வீசி 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மல்கோம் வால்கர் 6 ஓவர்களை வீசி 1 விக்கெட்டினையும் கைப்பற்றி இருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி: 317/4 (90) – குசல் பெரேரா 110(121), கெளஷல் சில்வா 94(194), திமுத் கருணாரத்ன 56(110), கிரேம் கிரமர் 82/3(21), மல்கோம் வால்கர் 25/1(6)
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்