தர்ஸ்டன் கல்லூரி அணி அபார வெற்றி : திரித்துவக் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

690
U19 School Cricket Round up

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளிற்கு இடையிலான “சிங்கர்” கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டிகளில் பண்டாரநாயக்க கல்லூரியுடன் இடம்பெற்ற போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி இலகுவான வெற்றியை சுவீகரித்ததுடன் வெஸ்லி கல்லூரி உடனான  போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது

இன்று ஆரம்பித்த ஏனைய போட்டிகளில் ரோயல் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, தர்மராஜ கல்லூரி ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன.

வெஸ்லி கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி

நேற்று ஆரம்பித்த இந்த போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெஸ்லி கல்லூரி அணி 208 ஓட்டங்களை பெற்று தனது முதல் இன்னிங்சினை நிறைவு செய்திருந்தது. எனவே, இன்றைய தினம் தங்களது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த கண்டி திரித்துவ கல்லூரி அணியினர் 59.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் திரித்துவ கல்லூரி சார்பாக கசின்த ஜயசூரிய 59 ஓட்டங்களையும், பூர்ணா நெத்மல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சமோத் அலுத முதலி 10 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்

இதனை தொடர்ந்து 2 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த வெஸ்லி கல்லூரி அணியினர்  34 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்ட நேரம் முடிவடைந்தது என நடுவர்களினால் அறிவிக்கப்பட்டது இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்லி கல்லூரி சார்பாக சிதுராக்க அக்மீனம 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 208/10 (85.4) – மூவின் அபேசிங்க 86, சமோத் அலுத முதலி 55, நரேந்திரநாத் 4/43, ரஷ்மிக திசாரு தில்ஷான் 3/32

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 210/10 (59.4)கசிந்த ஜயசூரிய 59, பூர்ணா நேத்மல் 51, சமோத் அலுதமுதலி 2/10

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 114/3 (34), சித்துராக்க அக்மீனம 76

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. திரித்துவக் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி


தர்ஸ்டன் கல்லூரி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி

குழு D இற்கான இந்த போட்டியில், நேற்றைய ஆட்ட நிறைவின்போது பண்டாரநாயக்க கல்லூரி 82 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து. அவர்களை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தங்களது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக கூறியிருந்தது.  

இந்நிலையில், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரி அணியினர் 47.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்று தர்ஸ்டன் கல்லூரியை விட 28 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்தனர்.

துடுப்பாட்டத்தில்  பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக அதிகபட்சமாக சாய்ரு ரோஷனும் ஹஸித திமலும் தலா 32 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் சந்தரு டயஸ் 44 ஓட்டங்களிற்கும், துஷால் மதுசன்க 39 ஓட்டங்களிற்கும் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கான 29 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி அணியினர் 5.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 82/10 (33.2) – சந்தரு டயஸ் 5/11, துஷால் மதுசன்க 2/11

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 198/8d (48.5)சரண நாணயக்கார 44, யேஷான் விக்ரமாரச்சி 37, ஜனிது ஜயவர்தன 3/41

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 137/10 (47.3)சாய்ரு ரோஷன் 32, ஹஸித்த திமல் 32, துஷால் மதுசன்க 4/39, சந்தரு டயஸ் 4/44

தர்ஸ்டன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 29/0(5.3)

முடிவு: போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி


புனித பேதுரு கல்லூரி எதிர் டி மெசனோட் கல்லூரி

சிங்கர் கிரிக்கெட் தொடரின் பிரிவு ஒன்றின் முதல் சுற்றுக்கான மற்றொரு போட்டியில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியும், கந்தான டி மெசனோட் கல்லூரியும் மோதிக்கொண்டன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய அவ்வணியினர் 54 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றனர்.

புனித பேதுரு கல்லூரி அணி சார்பாக அதிகபட்சமாக சந்துஷ் குணதிலக்க ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பந்து வீச்சில் டி மெசனோட் கல்லூரி சார்பாக அஷன் பெர்னாந்து 28 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், சஷீன் பெர்னாந்து 13 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்

இதனை தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த டி மெசனோட் கல்லூரி அணியினர் போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 39 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துடுப்பாட்டத்தில் டி மெசனோட் கல்லூரி சார்பாக இன்றைய ஆட்டத்தில் சங்கித் தேசன் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட முஹம்மட் அமீன் புனித பேதுரு கல்லூரி சார்பாக 17 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி அணி: 143/10 (54) – சந்துஷ் குணத்திலக்க 65*, அஷன் பெர்னாந்து 3/28, சஷீன் பெர்னாந்து 2/13

டி மெசனோட் கல்லூரி: 94/5 (39)சங்கித் தேசன் 41, முஹம்மட் அமீன் 2/17

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


ரோயல் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

இன்று ஆரம்பித்த முதல் சுற்றுக்கான மற்றுமொரு போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரியும் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியும் மோதிக்கொண்டன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி அணியினர் ரோயல் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர். இதன்படி துடுப்பெடுத்தாட தொடங்கிய ரோயல் கல்லூரி அணி தங்களது முதல் இன்னிங்சில் 62.1 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் லகிந்து நாணயக்கார 50 ஓட்டங்களையும், கவிந்து மதரசிங்க 49 ஓட்டங்களையும், கவின் விஜயரத்ன 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித செபஸ்டியன் கல்லூரி சார்பாக பிரவின் ஜயவிக்ரம 50 ஓட்டங்களிற்கும், நிமேஷ் பண்டார 56 ஓட்டங்களிற்கும் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த புனித செபஸ்டியன் கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 16 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து  70 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அதிகபட்சமாக அவிஷ்க பெர்னாந்து 25 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரோயல் கல்லூரியின் ஹெலித விதானகே 23 ஓட்டங்களிற்கும், ஹிமேஸ் ராமநாயக்க 33 ஓட்டங்களிற்கும் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி: 227/10 (62.1) – லஹிந்து நாணயக்கார 50, கவிந்து மதரசிங்க 49,  பிரவின் ஜயவிக்ரம 4/50, நிமேஷ் பண்டார 4/56

புனித செபஸ்டியன் கல்லூரி: 70/6 (16) – அவிஸ்க பெர்னாந்து 25, ஹெலித விதானகே 3/23, ஹிமேஸ் ராமநாயக்க 3/33

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


லும்பினி கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

இன்று ஆரம்பமாகிய முதல்சுற்றுக்கான மற்றுமொரு போட்டியில் கொழும்பு லும்பினி கல்லூரியும் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பெனடிக்ட் கல்லூரி அணியினர் களத்தடுப்பினை தெரிவு செய்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி 39.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

லும்பினி கல்லூரி சார்பாக அதிகபட்சமாக கனிஷ்க மதுவந்த 27 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் அதிசிறப்பாக செயற்பட்ட கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் ரேஷன் கவிஷ்க 60 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவருடன் சேர்த்து மகேஷ் தீக்ஷான 5 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த புனித பெனடிக்ட் கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது, 53 ஓவர்களிற்கு 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களை பெற்று பலமான நிலையில் உள்ளனர்.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட துலந்த லூயிஸ் 51 ஓட்டங்களை பெற்று அரைச்சதம் கடந்த போது உபாதைக்குள்ளாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். இவருடன் தினித்த ரத்நாயக்க 53 ஓட்டங்களை பெற்று புனித பெனடிக்ட் கல்லூரிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி: 94/10 (39.4) – கனிஷ்க மடுவத்த 27, ரேஷான் கவிஷ்க 7/60,  மகேஷ் தீக்ஷன 2/5

புனித பெனடிக்ட் கல்லூரி: 161/4 (53)துலந்த லூயிஸ் 51*, தினித்த ரத்நாயக்க 53, மகேஷ் தீக்ஷன 32*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


ஸாஹிரா கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி அணியினர் 55.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக சஜித் சமிர 78 ஓட்டங்களையும், மொஹம்மட் ஷமாஸ் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ருக்மல் திசாநாயக்க 69 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுக்களையும், உபேந்திர வர்ணகுலசேகர 34 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின் தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி அணியினர் இன்றைய ஆட்டநேர முடிவின் போது 24.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துடுப்பாட்டத்தில் திவந்த ஹேரத் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். பந்து வீச்சில் சஜித் சமீர 35 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி அணி: 204/10 (55.3), சஜித் சமீர 78, மொஹம்மட் ஷமாஸ் 65, ருக்மல் திசாநாயக்க 69/4, உபேந்திர வீரகுலசேகர 2/34

தர்மராஜ கல்லூரி அணி: 106/4 (24.5), நிவேந்த ஹேரத் 36*, தேஷான் குணசிங்க 34, சஜித் சமீர 2/35

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்