286 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு வேட்டைக்கு இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 கணக்கில் முன்னிலையில் உள்ளது.
41 ஓட்டங்களுக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை இழந்த நிலையில் களம் இறங்கிய விராத் கொஹ்லி ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்களையும் அத்துடன் அவருடன் இணைந்தாடிய MS தோனி 80 ஓட்டங்களையும் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை முதல் விக்கெட்டாக MJ கப்டில் 27 ஓட்டங்களுக்கு LBW முறையில் ஆட்டமிழந்தார். டொம் லேத்தம் அதிகூடிய ஓட்டங்களாக 61 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
இரண்டாவது போட்டியைப் போன்றே, 29 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களைப் பெற்றிருந்த நியூசிலாந்து அணி அடுத்த 9.2 ஓவர்களில் 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.
எனினும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக இணைந்த ஜேம்ஸ் நீஷாம் மற்றும் மாட் ஹென்றிக்கின் இணைப்பாட்டம் இந்திய அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில், இவ்விருவரும் ஓவருக்கு 7.52 ஓட்ட விகிதத்துடன் நியூசிலாந்து அணியை எதிர்பார்க்காத வகையில் 284 ஓட்டங்களுக்கு உயர்த்தினர்.
டெல்லியில் நடைப்பெற்ற இந்தியாவுடனான இரண்டாம் போட்டியிலும், 158 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், நியூசிலாந்து அணி இறுதி வரை போராடி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் அந்த போட்டியில் ஜேம்ஸ் நீஷாம் இணைக்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பிட்ட போட்டியில் விளையாடியிருந்த அன்டன் தேவ்சிச்சுக்குப் பதிலாக சகல துறை ஆட்டக்காரர் ஜேம்ஸ் நீஷாம் இந்தப் போட்டியில் இணைக்கப்பட்டிருந்தார்.
ஜேம்ஸ் நீஷாம் தனது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 57 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதியில் நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை சொற்ப ஓட்டங்களுக்கு இழந்திருந்தாலும், அதன் பின் களமிறங்கிய கொஹ்லி மற்றும் தோனி மூன்றாவது விக்கெட்டுக்காக 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.
இறுதியில், 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர்.
போட்டியின் சுருக்கம்
நியூசிலாந்து : 285 (49.4) – டொம் லேத்தம் 61, ஜேம்ஸ் நீஷாம் 57, உமேஷ் யாதவ் 75/3, கேதர் ஜாதவ் 3/29
இந்தியா : 289/3 (48.2) – விராத் கொஹ்லி 154 *, MS தோனி 80, மனிஷ் பாண்டே 28*, ஜேம்ஸ் ஹென்றி 56/2
ஆட்ட நாயகன் : விராத் கொஹ்லி (இந்தியா)
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு