புனித பேதுரு கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

359
U19 Schools Roundup Report

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டிகளில் புனித பேதுரு கல்லூரி, புனித பெனடிக்ட் கல்லூரி, ஜனாதிபதிக் கல்லூரி மற்றும் தர்மாசோக கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டன.

திரித்துவக் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் திரித்துவக் கல்லூரியும் புனித பேதுரு கல்லூரியும் மோதிக்கொண்டன. முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்த திரித்துவக் கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதற்கு மேலும் 167 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

அசத்தலான பந்து வீச்சில் ஈடுபட்ட மொஹமட் அமீன் மற்றும் சதுர ஒபேசேகர தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, திரித்துவக் கல்லூரி 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கலன டி சொய்சா அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி, ஷனோகீத் ஷண்முகநாதனின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அவர் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, புனித பேதுரு கல்லூரி 115 ஓட்டங்களுக்கே சுருண்டது. துடுப்பாட்டத்தில் தனித்துப் போராடிய சலித் பெர்னாண்டோ 54 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்படி திரித்துவக் கல்லூரிக்கு 151 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் போட்டி நிறைவடைய 2 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், திரித்துவக் கல்லூரி 2 விக்கெட்டுகளை இழந்து 7 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. இதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி, லக்ஷிண ரொட்ரிகோ (91) மற்றும் சந்துஷ் குணதிலக (65) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக   219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் திரித்துவக் கல்லூரியின் விமுக்தி நெதுமால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 219 (79.2) – லக்ஷிண ரொட்ரிகோ 91, சந்துஷ் குணதிலக 65, விமுக்தி நெதுமால் 4/68

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 184 (61) – கலன டி சொய்சா 30, மொஹமட் அமீன் 4/36, சதுர ஒபேசேகர 4/72

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 115 (40.5) – சலித் பெர்னாண்டோ 54, ஷனோகீத் ஷண்முகநாதன் 5/33

திரித்துவக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 7/2 (2)

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


வெஸ்லி கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

‘சிங்கர்‘ தொடரின் குழு ‘A’ இற்கான மற்றொரு போட்டியில் வெஸ்லி கல்லூரியை எதிர்த்து புனித பெனடிக்ட் கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 85 ஓட்டங்களை பெற்றிருந்த புனித பெனடிக்ட் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 70 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

இன்றைய தினம் அபாரமான பந்து வீச்சில் ஈடுபட்ட ருச்சிக்க தங்கல்ல  39 ஓட்டங்களை வழங்கி 8 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், புனித பெனடிக்ட் கல்லூரி 191 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் தினித்த பஸ்நாயக்க அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் குவித்தார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய வெஸ்லி கல்லூரி ஆட்டம் நிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது. மோவின் சுபசிங்க 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். நிரோஷ் அர்ஷன 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். இதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி 55.2 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக திசுரக்க அக்மீமன அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் அசத்திய மஹேஷ் தீக்ஷண 38 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 154 (55.2) – திசுரக்க அக்மீமன 34, ஜேசன் டி சில்வா 32, மஹேஷ் தீக்ஷண 5/38

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 191 (58.2) – தினித்த பஸ்நாயக்க 39, டிலான் சதுரங்க 38, ருச்சிக்க தங்கல்ல 8/39

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 113/6 (62.1) – மோவின் சுபசிங்க 45, நிரோஷ் அர்ஷன 3/40

முடிவு:  போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித பெனடிக்ட் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


ஜனாதிபதிக் கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

இத்தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் ஜனாதிபதிக் கல்லூரியும் டி மெசனொட் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டி மெசனொட் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 199 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.

எனினும், முதல் நாள் போன்றே தொடர்ந்தும் சிறப்பாக பந்து வீசிய பிரமுக கயாஷான் 5 விக்கெட்டுகள் வீழ்த்த, டி மெசனொட் கல்லூரி 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. கிரிஷான் சஞ்சுல அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதன்படி, 146 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட ஜனாதிபதிக் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி சார்பில் கிரிஷான் சஞ்சுல அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனியொருவராக அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய அவர் 111 ஓட்டங்களை விளாசினார்.

அதன்படி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட டி மெசனொட் கல்லூரி போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. மீண்டும் பந்து வீச்சில் பிரகாசித்த பிரமுக கயாஷான் 5 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். அவர் இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதிக் கல்லூரி 263 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹஷான் பிரியதர்ஷன 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மொஹமட் ரிபாஸ் 50 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் டி மெசனொட் கல்லூரியின் ஹஷேன் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதிக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 263 (70.4) – ஹஷான் பிரியதர்ஷன 99, மொஹமட் ரிபாஸ் 50, ஹஷேன் பெர்னாண்டோ 4/27

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) –  117 (44.3) –  கிரிஷான் சஞ்சுல 23, பிரமுக கயாஷான் 5/25

டி மெசனொட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 161/6 (39) – கிரிஷான் சஞ்சுல 111, பிரமுக கயாஷான் 5/69

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஜனாதிபதிக் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


ஸாஹிரா கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி

குழு ‘D’ இற்கான மற்றுமொரு போட்டியொன்றில் ஸாஹிரா கல்லூரியை எதிர்த்து தர்மாசோக கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பேதுமின்றி 9 ஓட்டங்களைக் குவித்திருந்த தர்மாசோக கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதாயின் மேலும் 233 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்று ஆடுகளம் பிரவேசித்தது.

அற்புதமாக துடுப்பெடுத்தாடிய கவீஷ் குமார 90 ஓட்டங்களையும், தினுக டில்ஷான் 85 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, தர்மாசோக கல்லூரி 337 ஓட்டங்களைக் குவித்தது. பந்து வீச்சில் ஸாஹிரா கல்லூரியின் இஷான் சம்சுதீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஸாஹிரா கல்லூரியும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. சஜித் சமீர ஆட்டமிழக்காது 113 ஓட்டங்கள் குவிக்க, ஸாஹிரா கல்லூரி 3 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மொஹமட் ஷமாஸ் 88 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அசத்திய கவிந்து நதீஷான் 70 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 241 (75.5) – மொஹமட் ஷமாஸ் 88, கவிந்து நதீஷான் 6/70

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 337 (70.3) – கவீஷ் குமார 90, தினுக டில்ஷான் 85, ஹன்சஜித் ருஷான் 42, இஷான் சம்சுதீன் 4/71

ஸாஹிரா கல்லூரி – (இரண்டாவது இன்னிங்ஸ்) – 164/3 (43) – சஜித் சமீர 113*

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. தர்மாசோக கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.