தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான இறுதி நாள் இன்று

998
Sri Lanka Cricket

இலங்கை தேசிய அணியின் வீரர்களுக்கான புதிய வருடாந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திட இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 20ஆம் திகதியுடன் (இன்று) நிறைவடைகின்றது.

அவர்களினால் இன்றைய தினம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட தவறும் பட்சத்தில், சிம்பாப்வே சுற்றுத்தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை உள்ளடக்கிய முத்தரப்பு தொடர் ஆகியவற்றிற்கு இலங்கை சார்பில் இரண்டாம் நிலை அணி ஒன்றை அனுப்புவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இலங்கை அணியின் வீரர்களினால் இன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி 24ஆம் திகதி இரவு சிம்பாப்வே நோக்கி புறப்படவிருந்த போதிலும், நிர்வாகிகள் மற்றும் வீரர்களுக்கிடையிலான முறுகல் நிலை காரணமாக இதுவரையிலும் இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டிலும் வருவாய் பங்கிடுதல் தொடர்பில் இதே போன்றதொரு முறுகல் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் (18) இலங்கை கிரிக்கெட் சபைக்கும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களுக்குமிடையில் பல்வேறு சந்திப்புக்கள் இடம்பெற்ற போதிலும் பல முன்னணி வீரர்கள் ஒப்பந்தத் தொகையை விட அதிகப்படியான தொகையை கோரியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை கிரிக்கெட் சபையானது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 30 வீரர்களின் பெயர்களையும் இதுவரையில் வெளியிடாதமையும் முக்கிய விடயமாகும்.

கடந்த வருடத்தில் முதற்பிரிவு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட வீரர்களுக்கு 165,000 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் பிரிவில் உள்ளடக்கப்பட்ட வீரர்களுக்கு 100,000 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் பிரிவில் உள்ளடக்கப்பட்ட வீரர்களுக்கு 70,000 அமெரிக்க டொலர்களும், நான்காம் பிரிவில் உள்ளடக்கப்பட்ட வீரர்களுக்கு 40,000 அமெரிக்க டொலர்களும் ஒப்பந்தத் தொகையாக வழங்கப்பட்டன.

இது தவிர, போட்டிகளுக்கான கட்டணமும், சர்வேதேச மற்றும் ஆசிய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற சுற்றுப்போட்டிகளின் வருவாயில் 10% சதவீதமும், அனுசரணையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும் மேலதிகமாக வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

புதிய ஒப்பந்தத்தில் வருடாந்த ஒப்பந்தத் தொகை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக வெகுமதித் தொகை மற்றும் வீரர்களின் தனிப்பட்ட சாதனைகளுக்கான ஊக்கத் தொகை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், முதற்பிரிவு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு 125,000 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு 80,000 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு 60,000 அமெரிக்க டொலர்களும், நான்காம் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு 40,000 அமெரிக்க டொலர்களும், ஐந்தாம் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு 20,000 அமெரிக்க டொலர்களும் ஒப்பந்தத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் வீரர்களுக்கான போட்டிக் கட்டணங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் 7,500 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட டெஸ்ட் போட்டியொன்றிற்கான கட்டணம் 5,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், போட்டியை வெற்றி கொள்ளும் தருணத்தில், இக்கட்டணம் 10,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும். இது மட்டுமின்றி போட்டியொன்றில் சதம் குவிக்கும் வீரர்களுக்கும் 5 விக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வீரர்களுக்கும் 5,000 அமெரிக்க டொலர்கள் வீதம் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும்.

ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிக் கட்டணங்களில் எதுவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எனினும், டெஸ்ட் போட்டிகளைப் போன்றே வீரர்களின் தனிப்பட்ட சாதனைகளுக்கான ஊக்குவிப்புத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் சதம் குவிக்கும் அல்லது 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்களுக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் வீதமும், இருபதுக்கு இருபது போட்டிகளில் 7,500 அமெரிக்க டொலர்கள் வீதமும் ஊக்குவிப்புத் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Crawler